வைகாசித்திங்கள் திங்கட்கிழமை அமாவாசை வழிபாடு மகத்துவம் பலன்கள் இப்படியானவற்றைப் பார்ப்போம். நிகழும் மங்களகரமான ஸ்ரீ சுபகிருது வருஷம் உத்தராயண புண்ய காலம் வஸந்த ருது வைகாசி மாதம் 16 ஆம் தேதி may 30 திங்கட்கிழமை அமாவாசை விரதம்.
மாதந்தோறும் அமாவாசை வருகிறது. இதிலே தக்ஷிணாயன புண்ய காலத்தின் தொடக்கமான ஆடி அமாவாசையும் உத்தராயண புண்ய காலத்தின் தொடக்கமான தை அமாவாசையும் இடையிலே வரக்கூடிய சரத் ருது புரட்டாசி அமாவாசையான மஹாளய அமாவாசையும் விசேஷமானதாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையன்று முன்னோரை வழிபட வேண்டும் குறிப்பாக தந்தை இல்லாதவர்கள் தர்ப்பணம் விடுவது தான தர்மங்கள் செய்வது இது கடமை. கட்டாயம் செய்தாக வேண்டியது, அத்தியாவசியமானது. விரதம் இருக்க வேண்டியது அவசியம்.
வைகாசி மாத அமாவாசை திங்கட்கிழமை அன்று வருகிறது. சூரியன் சந்திரன் சேர்க்கை அமாவாசை எனப்படுகிறது இதிலே சந்திரனுடைய கிழமையான திங்கட்கிழமை அன்றைக்கு அமாவாசை வரும்போது கூடுதல் சிறப்பு விசேஷம். அதுமட்டுமல்லாமல் இந்த திங்கட்கிழமை வரக்கூடிய அமாவாசை அன்றைக்கு ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது ரோகிணி நட்சத்திரமும் சந்திரனுடைய நட்சத்திரமே. (சந்திரனுடைய நட்சத்திரங்கள் ரோகிணி ஹஸ்தம் திருவோணம் ) மேலும் ரோகிணி நட்சத்திரம் கிருஷ்ணருடையது.
மஹாபாரதத்தில் கிருஷ்ணர் பாண்டவர்களுடைய வெற்றிக்காக அமாவாசையை முன்னதாக கொண்டு வந்தார். அப்படி கிருஷ்ணருடைய நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்திலே அதுவும் ஸோம வாரத்திலே இந்த அமாவாசை வருகிறது. இன்றைய நாளிலே முன்னோர் வழிபாடு செய்ய, பித்ரு தோஷங்கள் இருந்தால் முழுமையாக அகலும்.
பித்ரு தோஷத்தால் ஏற்படக்கூடிய திருமணத்தடை புத்திர பேறு தடை தம்பதிகளிடையே ஒற்றுமை இன்மை பிரிந்து போவது சகோதரர் இடையே பாரதப்போர் போல குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படுவது தீராத நோய்கள் ஏற்படுவது கண்டங்கள் விபத்துக்கள் உண்டாவது சொத்துக்களை இழப்பது சொத்து பத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் போவது இப்படியான பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அவை முற்றிலும் போக மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசையில் தர்ப்பணம் செய்து தானதர்மம் செய்து முன்னோர் வழிபாட்டை கடைபிடிக்க வேண்டும். அதிலும் இந்த வைகாசி மாதத்திலே திங்கட்கிழமையன்று ரோகிணி நட்சத்திரத்தில் வரக்கூடிய அமாவாசை அன்றைக்கு விரதம் வழிபாடுகளை கடைபிடித்தால் கட்டாயம் பித்ரு தோஷங்கள் போகும்.
சுய ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் சந்திரன் ராகு சந்திரன் கேது சந்திரன் சனி இப்படியான சேர்க்கை இருந்தால், சந்திரனுக்கு உண்டான ப்ரீதி உண்டாகவும் சந்திரபலம் கிட்டவும் இந்த நாளிலே தான தர்மங்களை செய்யலாம். சந்திரனுடைய தானியமான பச்சரிசியில் உணவு செய்து அன்னதானம் செய்யலாம் பச்சரிசியை தானமாக கொடுக்கலாம் வஸ்திர தானம் செய்யலாம் கோடை காலமாக இருப்பதால் தண்ணீர் பந்தல் நீர்மோர் பானகம் இப்படியானவற்றை விநியோகம் செய்யலாம்
மேலும் இந்த அமாவாசைக்கு இன்னும் ஒரு சிறப்பு இருக்கிறது. அமாவாசை முன்னோர் வழிபாடு என்று சொன்னாலே அது தந்தை தாத்தா என பிரதானமாக இறந்துபோன ஆண் வர்கத்தினருக்குண்டான வழிபாடு என்றே பெரும்பாலானவர்கள் எண்ணி இருக்கின்றனர். ஆனால் தந்தை என்றால் தாய்க்கும் ( தாய் இல்லாதபோது) தாத்தா என்றால் பாட்டிக்கும் ( பாட்டி இல்லாதபோது ) சேர்ந்தே முன்னோர் வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
அதிலும் சந்திரன் நவகிரகங்களில் பெண் கிரகம். பெண் ராசியான ரிஷப ராசியில் சந்திரனோடு சூரியனும் சஞ்சரிக்கும் போது வரக்கூடிய அமாவாசை. அதனால் பித்ரு தோஷங்கள் பெண் வழியிலே ஏற்பட்டிருந்தாலும் பெண் சாபம் பெண்களால் ஏற்பட்ட தோஷம் இப்படியாக இருந்து அதனால் குடும்பங்களில் பெண்களுக்கு தொடர்ச்சியாக கஷ்டங்கள், குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது அவர்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை நிம்மதியற்ற வாழ்க்கை நோய் நொடிகள் போன்றவை ஏற்பட்டு கொண்டிருந்தால் அந்த பிரச்சனை தீர இந்த அமாவாசையன்று விரதம் வழிபாடு தான தர்மம் செய்யலாம். இந்த வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையின் மகத்துவம் விசேஷங்களை இதுவரை பார்த்தோம். அடுத்து
அமாவாசையன்று செய்ய வேண்டியது என்ன? என்பதை பார்ப்போம். . பித்ரு காரியங்கள் முன்னோர் வழிபாடு என்றாலே விரதம் மிக முக்கியமானது. தெய்வ காரியங்களில் கூட கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், முழுமையான விரதங்களை கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால்.. பித்ரு காரியங்களில் விரதம் சடங்கு சம்பிரதாயங்களை மிக கவனமாக பார்த்து கடைபிடிக்கவேண்டும்.
அப்படியாக இந்த அமாவாசை நாளில் தந்தை இல்லாதவர்கள், தந்தை தாய் இல்லாதவர்கள் தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும் குல வழக்கப்படி தர்ப்பணம் கொடுப்பது படையல் போடுவது பசுமாட்டிற்கு கீரை அகத்திக்கீரை வாழைப்பழம் தீவனங்கள் கொடுப்பது காகத்திற்கு சாதம் வைப்பது ஆலய அர்ச்சகருக்கோ வீட்டுக்கு வரக்கூடிய புரோகிதருக்கோ ஒரு பிராமணருக்கோ பச்சரிசி வாழைக்காய் காய்கறிகள் கீரை மளிகை பொருட்கள் பால் தயிர் நெய் இப்படியாவற்றைக் தட்சணையோடு கொடுக்கலாம். இந்த கடமை எல்லாம் செய்து முடித்த பிறகு பகல் பொழுது மட்டும் போஜனம் செய்யலாம். வயோதிகர் ஒருபொழுது இருக்க இயலாதவர் இரவு சிற்றுண்டி சாப்பிடலாம். முதலில் முன்னோர் வழிபாடு தர்ப்பணம் போன்ற காரியங்களை செய்துவிட்டு அதன் பிறகு வீட்டிலே பூஜைகள், கோவில் செல்வது இவற்றை செய்யலாம்.
அமாவாசையன்று தவிர்க்கவேண்டியது என்னென்ன? வெளி உணவை கட்டாயம் சாப்பிடக்கூடாது எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யக்கூடாது மதியத்தில் உறங்கக்கூடாது தாம்பத்தியம் கூடவே கூடாது வெளியிலே காபி டீ போன்றவை கூட இந்நாளிலே சாப்பிடக்கூடாது முகச்சவரம் செய்வதோ சிகை அலங்காரம் தலை முடி வெட்டுவது நகம் வெட்துவது இவற்றை கட்டாயம் செய்யக் கூடாது
அமாவாசை அன்று கடைபிடிக்க வேண்டியது தவிர்க்க வேண்டியது இப்படியான கடமைகளை இப்போது பார்த்தோம். இந்த அமாவாசைக்கும் தந்தை இருக்கக்கூடிய நபருக்கும் தாய் தந்தை இருக்கக்கூடிய நபருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தந்தை இருக்கக்கூடியவர்கள் அமாவாசை நாளில் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெற்றோர் இருக்கக்கூடிய பிள்ளைகள் அமாவாசை அன்றைக்கு தலைக்குக் குளிக்கக் கூடாது இரவு நேர சிற்றுண்டி சாப்பிட்டாலும் கொஞ்சம் சாதம் சாப்பிட வேண்டும் ஆனால் தந்தை தர்ப்பணம் கொடுப்பது முன்னோர் வழிபாடு செய்யும்போது அந்த இடத்திலேயே இருந்து முன்னோருடைய ஆசியைப் பெறலாம்.
வயோதிகத்தில் இருக்கக்கூடிய தந்தைக்கு அமாவாசை நாளில் தர்ப்பணம் விட பித்ரு கர்மாக்களை செய்ய மகனாகபட்டவர் உதவிகளை செய்யலாம். இப்படியாக இந்த வைகாசி மாதத்தில் திங்கட்கிழமையில் வரக்கூடிய அமாவாசையின் சிறப்பு மகத்துவம் இன்றைய நாளில் போகக்கூடிய தோஷங்கள் கிடைக்கக்கூடிய பலன்கள் எப்படி விரதமிருப்பது எப்படி வழிபாடு செய்வது போன்ற தகவலை இதுவரை பார்த்தோம்,. இவற்றை நீங்கள் முறையாக கடைபிடித்து குடும்பங்களில் ஏற்படும் தோஷங்களை போக்கி பிதிருக்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கப்பெற்று எல்லா விதமான நற்பேறுகளையும் பாக்கியங்களையும் பெற்று பாக்கியவான்களாக ஜீவிக்க வேண்டும்.
தினசரி பஞ்சாங்கம் இன்றைய விசேஷம் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகளை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply