மூன்று வயது பூர்த்தி ஆகவேண்டும் 8 வயதாகவேண்டும் 12 வயது ஆகவேண்டும் அதன்பிறகு தான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்கிறார்களே, இதில் எது சரி? குழந்தைகளுக்கு எப்போதுதான் ஜாதகம் பார்ப்பது ?
ஜாதகம் என்பது பல காரணங்களுக்காக பார்க்கப்படுகின்றது பொதுவாக எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜாதகம் பார்ப்பது என்பதாகத்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்காலத்தையும் ஜாதகம் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இதிலே கடந்த காலம் எப்படி இருந்தது என்பது ஜாதகருக்கு தெரிந்திருக்கும் அல்லது இதை முற்பிறவி என்று கொண்டாலும் அதை சொல்லும்போது நம்பிக்கை இருக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் அதை நிரூபிக்க முடியாது.
அடுத்து எதிர்காலம். எதிர்காலத்திலே நல்ல பலன் இருக்கிறது நல்ல திசை வரப்போகிறது அதனால் பலன் கிடைக்கும் என்று சொன்னால் அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு அந்த பலனை பெற முடியும். இப்போது ஒருவருக்கு சாதகமற்ற காலம் நடக்கிறது அவர் கடனாளியாக இருக்கிறார் அல்லது நோய்வாய்பட்டு இருக்கிறார் பிரச்சனைகளுக்கு இடையே சிக்கி தவிக்கிறார் வாழ்க்கைத் துணையோடு கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார் உறவினர்கள் சகோதரர்களோடு சண்டை சச்சரவு வழக்கு நடக்கிறது அவருக்கு யாருமே துணையில்லை இப்படிப்பட்டவரிடத்திலே இந்த பிரச்சனை அனைத்தும் கொஞ்ச காலத்தில் (எதிர்காலத்தில்) சரியாகிவிடும் நோயிலிருந்து மீண்டுவிடுவீர்கள் வழக்கு பிரச்சினை முடிவுக்கு வரும் விரோதம் பகை எல்லாம் தீர்ந்துவிடும் ஒற்றுமை ஏற்படும் இப்படியாக சொல்லும்போது அது அவருக்கு நம்பிக்கை அளிகக்கும்.
அவர் விரக்தி வெறுப்பு அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை தற்கொலை எண்ணம் போன்ற எதிர்மறை எண்ணங்களை எல்லாம் மாற்றிக்கொண்டு நம்பிக்கையோடு இருந்து நற்பலனை பெறுவார் இதற்கு எதிர்கால பலன் உதவுகிறது.
இது போல நிகழ்கால பலன், இப்போது வேலை கிடைக்குமா சுய தொழில் தொடங்கலாமா சொத்து வாங்கலாமா வாங்கக் கூடாதா சொத்துக்கள் விற்கலாமா கூடாதா வேலையை விடலாமா வெளியூர் வெளிநாடு போகலாமா வைத்தியம் செய்துகொள்ளலாமா அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா படிக்கலாமா வேலைக்கு போகலாமா பகுதி நேரத்தில் படிக்கலாமா அல்லது ஏதாவது சிறிய தொழில் செய்யலாமா கடன் வாங்கலாமா கடன் கொடுக்கலாமா இது திருமணத்திற்கு உகந்த காலமா திருமண விஷயத்தை தொடங்கலாமா திருமணம் செய்து கொள்ளலாமா புத்திரப்பேறு இப்போது கிடைக்கக்கூடிய பாக்கியம் இருக்கிறதா அல்லது தள்ளிப் போடலாமா சொந்த வீடு யோகம் இருக்கிறதா வாங்கலாமா வாங்க முடியுமா கூட்டுத் தொழில் செய்யலாமா கூடாதா படிக்கலாமா அல்லது கலை வித்தை கைத்தொழிலை கற்றுக் கொள்ளலாமா இப்படியாக நிகழ்காலம் பற்றி கேள்விகள் கேட்டு ஜோதிட சாஸ்திரப்படி அதற்கு உண்டான பதிலை பெற்று அதன் மூலம் பலன் பெறுவது பிரச்சினையை தவிர்ப்பது முன்னேற்றம் காண்பது பின்னடைவை தவிர்ப்பது சாத்தியம்.
இப்படி ஜோதிட சாஸ்திரம் என்று சொல்லக்கூடியது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் பற்றி சொல்லக் கூடியதாய் இருக்கிறது இதில் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்க்கலாமா வேண்டாமா என்று கேட்டால் குழந்தைகளுடைய கடந்த காலம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளுடைய எதிர்காலம் பற்றி பெரிய கேள்விகள் இப்போதைக்கு இருக்காது. குறைந்தபட்சம் 5 வயது பூர்த்தியான பிறகு பள்ளியில் சேர்ப்பது (இப்போதெல்லாம் மூன்று வயதிலேயே சேர்க்கிறோம்) அப்போது பார்க்கலாம்.
அதன்பிறகு கூடுதல் திறமைகளை வளர்த்து விட எந்த துறை சிறப்பாக வரும் என்பதை பார்க்கலாம். ஆக இப்போதைக்கு எதிர்காலம் பற்றி குழந்தைகளுக்கு கேள்வி இல்லை. கடந்த காலம் பற்றி தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. நிகழ்காலம் பற்றி – இந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா ஆரோக்கியமாக இருக்குமா இந்த குழந்தைக்கு ஏதாவது தோஷங்கள் இருக்கிறதா கண்டங்கள் ஏற்படுமா என்பதாக ஜாதகம் பார்க்க வேண்டிய அவசியம் பெற்றோருக்கு இருக்கும்.
அதாவது குழந்தை கொஞ்சம் எடை குறைவாக இருந்தாலும் அவ்வப்போது உடல் உபாதைகள் வந்து கொண்டே இருந்தாலும் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய குழந்தையாக இருந்தாலும் அச்சமயத்திலே பெற்றோர் எப்படி மருத்துவரை அணுகுகின்றனரோ அதுபோல ஜோதிடரை அணுகலாம் என்று நினைப்பார்கள். ஜோதிடரிடம் இந்த குழந்தைக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா? கண்டங்கள் இருக்கிறதா? எதனால் இப்படி பிரச்சனை வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஏற்படும்.
அப்போது, இல்லை இல்லை குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகவில்லை ஒரு வயது நிறைவாக வேண்டும் மூன்று வயது எட்டு வயது 12 வயது ஆகவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வயதைக் குறிப்பிட்டு, அது வரை ஜாதகம் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.
குழந்தைகளுக்கு ஜாதகம் பார்க்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணம் முதல் 4 வருடங்கள் தந்தை வழியிலேயே தோஷம் ஏற்படும் அடுத்த 4 வருடங்கள் தாய் வழியிலேயே தோஷங்கள் ஏற்படும் அதற்கு அடுத்த 4 வருடங்கள் அந்த குழந்தையுடைய பூர்வ வினைப்பயன் வழியாக தோஷங்கள் ஏற்படும் இந்த காலம் வரை ஜாதகம் பார்க்க கூடாது அதன்பிறகு தான் பார்க்க வேண்டும் அதுவரை நடப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அந்த குழந்தைக்கு ஆயுள் தீர்க்கமாயிருந்து 12 வயதை கடந்துவிட்டால் அதன்பிறகு ஜாதகம் பார்க்கலாம் என்பதாக சொல்வார்கள் ஆனால் பத்து பதினாறு குழந்தைகளை பெற்றுக்கொண்ட அந்த காலத்திற்கு இந்த நடைமுறை ஒத்துவந்தது. இப்போதோ ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கு ஒன்று என்றோ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றோ ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே இக்காலத்திற்கு மேற்கண்ட நடைமுறை ஒத்துவராது.
குழந்தையுடைய ஜாதகத்தை பார்க்கும் பட்சத்தில் ஏதாவது குறை தோஷங்கள் கண்டங்கள் இருந்தால் அதை அறிவுறுத்தி தகுந்த பிராயச்சித்தம் ஷாந்தி பரிகாரங்கள் செய்வித்து தலைக்கு வந்ததை தலைப்பாகையோடு போக்கிக்கொள்ளலாம். இந்த விளக்கம் தருவதற்கு ஆதாரமாக ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் பல விதமான தோஷங்களிலே பாலாரிஷ்ட தோஷம் என்பதாக ஒரு தோஷம் இருக்கிறது இது குழந்தைகளுக்கு ஏற்படுவது.
பிறந்ததிலிருந்து 12 வயது வரை இந்த தோஷம் ஏற்படும். இந்த காலம் வரை குழந்தைக்கு கண்டாதி தோஷங்கள் ஏற்பாட்டுக் கொண்டிருக்கும். பாலாரிஷ்டம் என்று சொன்னால் பால பருவம் என்பது குழந்தைப் பருவம் அரிஷ்டம் என்றால் அரிப்பது பாதிப்பு பக்க விளைவுகளை ஏற்படுத்துவது இந்த தோஷம் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு பரிகாரமும் சொல்லப்பட்டிருக்கிறது இந்த தோஷதிதிர்கான விதிகள் அதற்குண்டான விதிவிலக்குகள் சொல்லப்பட்டுள்ளது அதனால் குழந்தைகள் இருக்கக்கூடிய வீட்டில் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ அந்த குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் மூளை உடல் வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் மந்தமாக இருக்கிறது அவ்வப்போது கண்டங்கள் ஏற்படுகிறது என்றாலும் ஜாதகம் பார்க்கலாம். குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே கூட ஜாதகம் பார்க்கலாம், தவறு கிடையாது.
இப்போதெல்லாம் சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் சிசேரியன் என்று சொல்லக்கூடிய அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலையில் அதற்கு காலம் நேரம் அவகாசம் இருந்தால் பெற்றோருக்கு விருப்பம் இருந்தால் அந்த குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஒரு நல்ல நாளை தேர்ந்தெடுத்து நல்ல நேரம் குறித்து சிசேரியன் செய்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதை பெரும்பாலான பெற்றோர்கள் கடைபிடிக்கிறார்கள் பெரும்பாலான ஜோதிடர்கள் இதற்காக நாள் நேரம் குறித்து கொடுக்கிறார்கள். இது சரியா தவறா ஜோதிடர்கள் இதை செய்யலாமா கூடாதா? செய்யலாம் என்றால் அதற்கு பார்க்கவேண்டிய அம்சங்கள் என்ன? தாய்க்கு சாதகமாக பார்க்கவேண்டுமா? பிறக்கப்போகும் குழந்தைக்கு பார்க்க வேண்டுமா? தந்தைகக்கு சாதகமாக பார்க்கவேண்டுமா? மூத்த சகோதர சகோதரி இருந்தால் அவர்களுக்கும் பார்க்கவேண்டுமா? இதைப்பற்றிய விபரங்களை தனியாக ஒரு பதிவில் பார்ப்போம். இப்போது நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு வருவோம்.
இதுபோல சிசேரியன் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நேரம் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அந்த குழந்தை பூமியிலே வருவதற்கு முன்னதாகவே ஜாதகம் கணிக்க / பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க பூமியிலே வந்த பிறகு, சிறு குழந்தையாக இருக்கும்போது, குழந்தைக்கு ஜாதகம் பார்க்கலாம் . இது ஒரு நடை முறை காரணம்.
அடுத்து, முன்பெல்லாம் குழந்தைகளைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார்கள் குறைந்தபட்சம் ஓராண்டு பூர்த்தி ஆகும் வரை அந்த குழந்தையை போட்டோ எடுக்கவே கூடாது என்ற நடைமுறையை கடைபிடித்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் குழந்தை பிறந்த உடனேயே அதை புகைப்படம் எடுத்து கடவுளுடைய அனுக்கிரஹத்தினால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது, பெண் குழந்தை பிறந்தது என்று அந்த குழந்தை தாய் தந்தையுடைய புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமாக சமூக வலைத்தளங்கள் மூலமாக வேண்டியவர்களுக்கு நண்பர்களுக்கு அனுப்பி அவர்களிடத்திலே வாழ்த்துக்களை பெறக்கூடிய ஒரு பழக்கம் வந்திருக்கிறது. மேலும் ஒரு சடங்கு சம்பிரதாயங்களுக்கு குழந்தைகளோடு போகும்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த குழந்தைக்கு நாமகரணம் செய்யும்போது புகைப்படம் எடுக்கிறார்கள் அதனால் ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்பே புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கொஞ்ச காலத்திற்கு முன்னே கடைபிடிக்கப்பட்ட நடைமுறையை இப்போது பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதாக தெரியவில்லை. அதனால் ஒரு வயது பூர்த்தியாவதற்குள் குழந்தையின் ஆயுள் ஆரோக்கிய காரணங்களுக்காக இப்போது ஜாதகம் பார்க்கலாம், என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் நடைமுறையில் சில விஷயங்களை சில விதிகளை நியாயமான காரணங்களுக்காக தளர்த்தலாம் என்று பெரியவர்கள் அனுமதி தந்திருக்கிறார்கள் உதாரணமாக முன்பெல்லாம் தாத்தா பாட்டி காலத்திலே ஒரு நல்ல காரியம் விவாஹம் முஹூர்த்தம் வைக்க வேண்டும் என்றால் அதற்கு பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, குருபகவான் தன்னுடைய பார்வையினால் கோடி குற்றங்களை தோஷங்களைப் போக்க கூடியவர் கோடான கோடி நன்மைகளை தரக்கூடியவர், சுக்கிரன் மிகச்சிறந்த யோகமான சுக பாக்கியங்கள் தரக்கூடியவர் அதனால் புதன் வியாழன் வெள்ளிக்கிழமை மற்றும் வளர்பிறை திங்கட்கிழமைகளில் சுபகாரியங்களை மூஹூர்த்தங்களை வைப்பார்கள். (சந்திரன் வளர்பிறையில் சுபர் தேய்பிறையில் அசுபர் ) ஆனால் இந்த காலத்தில் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அனைவருக்கும் விடுப்பு என்பதனால் முஹூர்த்தம் சுபகாரியங்களை வைக்கிறோம், இதை, தவறு கிடையாது செய்து கொள்ளலாம் என்று பெரியோர்கள் அனுமதித்திருக்கிறார்கள்..
அப்படியாக காலதேச வர்த்தமானம் என்று சொல்லக்கூடிய மாற்றங்களின் அடிப்படையில் சில விஷயங்களை செய்யலாம். இப்படியாக பார்க்கும்போது குழந்தைகளுக்கு தேவையான நேரத்தில் ஜாதகம் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரம் மூலம் நம்முடைய ரிஷிகள் நமக்கு அருளிய பரிகாரங்களை செய்து தோஷங்களை போக்கி கொள்ள வேண்டும் கண்டங்களை தவிர்க்க வேண்டும் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளோடு இங்கு வாழ வேண்டும் அதுவும் வளமாக நலமாக வாழ வேண்டும்.
தினசரி பஞ்சாங்கம் இன்றைய விசேஷம் ஜோதிட சாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம் ஆன்மீகம் சார்ந்த அற்புதமான விஷயங்கள், விரதங்கள் பண்டிகைகள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் இவற்றை இந்த இணையதளத்தின் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply