இந்த உலகத்தை படைத்தவர் கடவுள், உலகமக்கள் அனைவரையும் படைத்தவரும் கடவுள் தான். எல்லாவற்றிலும் இருப்பதும் அவர்தான், எல்லாமுமாக இருப்பதும் அவர்தான், அப்படி இருக்க.. உன்னுடைய நண்பன் நந்தனையும் அவர்தான் படைத்தார். இப்படி நீ எண்ணிப் பார்க்கும்போது கடவுள் சம்பந்தமாக நந்தன் என்ன பேசுகிறான்? எப்படி செயல்படுகிறான்? என்ற ஒரு கவலையே உனக்கு ஏற்படாது, இது ஒன்று.
இரண்டாவது, நீ பூஜை வழிபாடு என்ற வழியில் முருகா ஈஸ்வரா ராமா கிருஷ்ணா கோவிந்தா கோபாலா அம்பிகையே தாயே பராசக்தி என்று வழிபடுகிறாய், உன்னுடைய நண்பனும் இதே கடவுளுடைய பெயரை சொல்லி தானே கேலியோ கிண்டலோ அவதூறோ பேசுகிறான் ❗ இருவரும் கடவுளுடைய பெயரை சொல்கிறீர்கள் அல்லவா❓ அப்போது கடவுள் பெயரை நீயும் சொல்கிறாய், அவனும் சொல்கிறான் எனவே இருவருமே பக்தர்கள்தான்.
இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் ராமாயணம் மகாபாரதம் புராணங்களை நீ படிக்கிறாய், சொற்பொழிவாக உபன்யாசமாக கேட்கிறாய் . இதையே படித்தோ அல்லது கேட்டோதானே ❗ ராமர் இப்படி மறைந்திருந்து அம்புவிட்டு இருக்கக்கூடாது ‼ கிருஷ்ணன் இப்படி குருக்ஷேத்திர போரில் சூது செய்திருக்கக்கூடாது‼ சிவபெருமான் வரங்களைக் கொடுத்து விட்டு பிறகு கஷ்டப்பட்டு இருக்கக்கூடாது ‼இதுவெல்லாம் தவறு என்பதாக நந்தன் சொல்கிறான் ❗ இதிலிருந்து என்ன தெரிகிறது ❓ இதிகாசங்கள் புராணங்கள் இவையெல்லாம் உண்மை அதுபோல் அவதார புருஷர்களாக ராமர் கிருஷ்ணர் தோன்றினார்கள் என்பதை உன்னைவிட நூறு மடங்கு அதிகமாக நந்தன் நம்புகிறான்❗ அதனால்தான் இதுவெல்லாம் தவறு இப்படி செய்திருக்கக் கூடாது, அதுவெல்லாம் தவறு அப்படி நடந்து இருக்க கூடாது என்பதாக எப்போதும் பேசுகிறான்.
ஆனால் நீயோ கந்தனோ கந்தன் போல ஒரு சிலரோ நாஸ்திகம் பேசினால் அந்த கடவுளுக்கே இழுக்கு வந்து விடுமோ ❓ கடவுளுடைய மதிப்பு புகழ் குறைந்துவிடுமோ❓ இவர்களுடைய பேச்சை கேட்டு எல்லோரும் நாஸ்திகர்களாக மாறி விடுவார்களோ ❓ என்று பயப்படுகிறாய் ❗ ஹிரண்யாட்சனை அளவிற்கு இவ்வுலகத்திலே யாராவது கடவுளுக்கு எதிராக செயல்பட முடியுமா❓ நரசிம்ஹ அவதாரம் தெரிந்தும் நீ முழுமையான நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய் ❗ கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையான நம்பிக்கை கொண்டவனாக உன்னுடைய நண்பன் விளங்குகிறான் ❗ இப்போது புரிகிறதா ❓ ஒரு குட்டி உபன்யாசத்தையே முனிவர் நிகழ்த்தினார்.
கந்தனுக்கு புரியும் படியாகவும் இருந்தது, முழுமையாக இதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. தான் உடலை வருத்திக்கொண்டு கடுமையான விரதங்களிருந்து பாதயாத்திரை செய்து பூஜைகள் ஹோமங்கள் ஆலய வழிபாடுகள் இதுவெல்லாம் செய்து , கடவுளின் திருநாமங்களை சொல்வதும் , நந்தன் கேலி கிண்டல் மறுப்பு அவதூறு பேசுவதற்கு கடவுள் திருநாமம் சொல்வதும் இரண்டும் ஒன்றுதான் ❗ தன்னை விட அது மேல் என்று முனிவர் சொல்கிறாரே ❓ என்ற ஒரு எண்ணம் கந்தன் மனதில் எழுந்தது. இருந்தாலும் வாய் திறந்து கேட்கவில்லை.
ஆனால், முனிவர்தான் சகலமும் அறிவாரே. கந்தன் மனதில் இருப்பதை படித்தது போல அவர் பேசத் தொடங்கினார். கந்தா, கடவுள் நம்பிக்கை இல்லாத கந்தனை போன்றவர்கள் அதைபபற்றி பேசி ஏன் நேரவிரயம் செய்யவேண்டும் ❓ இல்லாத ஒன்றை பற்றி பேசுபவன் முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது பைத்தியமாக இருக்கவேண்டும் . ஒருவேளை தன்னிலையை மற்றவருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றால் ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்கள் அனைத்தும் பொய் கடவுளெல்லாம் கட்டுக்கதை இதிகாசமெல்லாம் இட்டுக்கட்டப்பட்டது புராணங்கள் எல்லாம் பொய் இப்படியாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு போகலாமே ❓
ஒவ்வொரு புராணத்தையும் ராமாயணம் மஹாபாரதம் ஸ்ரீமத்பாகவதம் போன்றவற்றை பற்றி பேசி பேசி அது இப்படி இருந்திருக்கலாம் இது அப்படி இருந்திருக்கலாம் இது குற்றம் அது சூதுவாது இது நம்ப முடியாதது என்றெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் ❓ அப்படி சொல்லும் போதே அவன் படித்திருக்கிறான் ❗ கேட்டிருக்கிறான் ❗ அப்படி நடந்ததாக நம்புகிறான் ❗ அதனால் தானே அவன் சொல்கிறான் ❓ அதனால் கடவுள் பற்றி நீ தெரிந்து கொண்டதை அவனும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான். இதுவே போதுமானது, அவன் ஒரு பக்தன் என்பதற்கு ❗
இப்போது கந்தனுக்கு ஓரளவு புரிந்தது. இருந்தாலும் பலகாலமாக இருந்த ஒரு கேள்வி அல்லவா ❓ சந்தேகம், குழப்பம் அல்லவா ❓ எனவே முழுமையாக திருப்தி வரவில்லை. உணர்ந்துகொண்ட முனிவர் தொடர்ந்தார்.. இந்த உலகத்திலே சொந்தமாக ஒருவருக்கு வீடு அமைய வேண்டும் மனைவி மக்கள் உண்டாக வேண்டும் கல்வி பதவி பெயர் புகழ் நல் ஆரோக்யம் நீண்ட ஆயுள் இதுவெல்லாம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் அதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா ❓ ஏதோ ஒரு புண்ய பலன் இருந்தால்தான் இதுவெல்லாம் கிடைக்குமலளவா ❓
கந்தன் ஆம் என்றான். அது போல் தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் புண்ய தீர்த்தங்களில் நீராட வேண்டும் பூஜைகள் செய்ய வேண்டும் ஹோமங்கள் செய்ய வேண்டும் அதில் கலந்து கொள்ள வேண்டும் விரதங்கள் கடைபிடிக்கவேண்டும் தானதர்மம் செய்ய வேண்டும் என்றாலும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அதை நீ முற்பிறவியில் செய்து இருக்கிறாய் அதனால் அந்த பலன் உனக்கு கிடைத்தது. இதையெல்லாம் செய்யாத கந்தன் போன்றவர்களுக்கு அந்த பலன் இல்லை. அதனால் அவர்களால்.. இதை செய்ய முடியவில்லை, செய்ய மனம் வரவில்லை, செய்ய அவர்களுடைய புத்தி இடம் தரவில்லை ,
ஆனால் உலகிலே இருக்கும் ப்ரதி ஒருவரும் அந்த பரமாத்மாவிடம் இருந்து வந்த ஜீவாத்மா. எனவே, வந்த இடத்திற்கு திரும்ப போக பக்தி என்ற வழியிருந்தும், ஆன்மீகம் என்ற உபாயமிருந்தும், பயன்படுத்தி பயனடைய முடியவில்லையே ❓ என்ற ஆழ்மனதின் ஆதங்கம் ஆத்மாவின் ஏக்கம் நாஸ்திகமாக வெளிப்படுகிறது. ஏனென்றால் பக்தி இயற்கை , மறுப்பு செயற்கை …..
இவற்றை நீ உணர்ந்து கொண்டால்…. உனக்கு கோபமும் கவலையும் அழுகையும் அவநம்பிக்கையும் ஏற்படாது. முனிவர் சொல்ல , கந்தனுக்கு இப்போது தெளிவு உண்டானது முனிவரிடம் ஆசி பெற்று மலர்ச்சியோடு புறப்பட்டான் ..
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

Leave a Reply