ஆரோக்கியமாக வாழ எப்படி சாப்பிட வேண்டும்? எத்தனை முறை சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? நேரத்திற்கு சாப்பிட வேண்டுமா? நேரம் பார்த்து சாப்பிட வேண்டுமா? உணவைப் பற்றிய நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த நல்ல தகவல்களை பார்ப்போம்.
ஆரோக்கியமாக வாழ எப்படி சாப்பிட வேண்டும்? உணவைப் பொறுத்த வரைக்கும் பசிக்காக சாப்பிடக் கூடியவர்கள் ருசிக்காகச் சாப்பிடக் கூடியவர்கள் உடல் நலத்திற்காக சாப்பிடக் கூடியவர்கள் உயிரை காத்துக் கொள்வதற்காக சாப்பிடக்கூடியவர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த உணவைப் பொறுத்து உடலுக்கான சக்தி பலம் கிடைக்கிறது . ஆனால் இதைத் தாண்டி நாம் சாப்பிடக்கூடிய உணவு தான் நம்முடைய எண்ணங்களுக்கும் காரணமாக இருக்கிறது நமக்கு எண்ணங்கள் ஏற்படுகிறது அந்த எண்ணங்களின் உந்துதலினால் நாம் செயல்களை செய்கிறோம் அந்த செயல் பலனையும் விளைவையும் நமக்கு தருகிறது அப்படி நம்முடைய எண்ணங்களுக்கு நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதற்கு நம்முடைய குணம் எப்படிப்பட்டது என்பதற்கு நம்முடைய வளர்ப்பு நம்முடைய சுற்றுப்புற சூழல் நம்முடைய அனுபவம் இதைத் தாண்டி நம்முடைய ஆதாரம் முக்கியமான காரணமாக இருக்கிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவுக்கு ஏற்றவாறு நமக்கு குணம் வருகிறது அந்த உணவிலேயே ஒரு குணம் இருக்கிறது உடல் பலத்தை தாண்டி மனோபலம் மனோதிடம் மனத்தெளிவு இதை நமக்கு கொடுப்பதாகவும் உணவு இருக்கிறது.
மேலும் இந்த உணவே மருந்தாகவும் இருக்கிறது. உணவு மருந்தாக இருக்கும் படியாக நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த சரியான உணவுப் பழக்கத்தை நாம் கைக்கொண்டால் தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு நோய் வராது வந்தாலும் அது நம்முடைய வீட்டு வைத்தியம் பாட்டி வைத்தியம் கை வைத்தியம் மூலமாகவே குணமாகும் ஆரோக்கியமாக வாழலாம் நீண்ட ஆயுளோடு ஜீவிக்கலாம். ஆனால் இந்த உணவை சரியான வகையிலே நாம் எடுத்துக் கொள்ளாத போது நமக்கு தனியாக மருந்து சாப்பிட வேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது அதனால் உணவு என்று சொல்லக்கூடியது நம்முடைய மனதிற்கும் எண்ணங்களுக்கும் நடத்தைக்கும் குணத்திற்கும் பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் காரணமாய் இருக்கிறது அது நமக்கு மருந்தாகவும் இருக்கிறது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது நம்மை காக்கிறது.
இப்படிப்பட்ட மிக முக்கியமான நம்முடைய பிறப்பு முதல் நம்முடைய வாழ்நாள் முடிவு வரை அனுதினமும் நாம் சாப்பிடக்கூடிய உணவை மிகச்சரியாக நாம் சாப்பிட்டால் நம் முன்னோரை போன்ற நடைமுறை பழக்க வழக்கத்தை நாம் கடைப்பிடித்தால் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்லக்கூடிய அந்த செல்வத்தை பெற்று நாம் சந்தோஷமாக இங்கே ஜீவிக்க முடியும்.
நாம் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும் இதிலே இந்த காலத்திலே நிறைய பேர் தவறு தான் செய்கிறோம். ஆனால் இதற்கு நம்முடைய பெரியவர்கள் நமக்கு சரியான வழியை காட்டி இருக்கிறார்கள். அதாவது நம்முடைய முன்னோர்கள் அவர்களுடைய வாழ்க்கையிலேயே அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் அவர்களுடைய புத்திக்கூர்மை ஞானம் ஆராய்ச்சி பல தலைமுறையாக தொடர்ந்து இந்த விஷயங்களை கடத்தி ஒரு தலைமுறையை விட அடுத்த தலைமுறைக்கு இன்னும் அதிக தகவல்களை கொண்டு சேர்த்தது இப்படியான வகையில் நமக்கு நிறைய கூறியிருக்கிறார்கள். உதாரணமாக இதிகாசங்கள் வாயிலாக புராணங்கள் இலக்கியங்கள் காப்பியங்கள் கதைகள் பழமொழிகள் இப்படியாக பல வழிகளில் மிகச் சிறியதாகவும் மிகப்பெரிய அளவிலும் அவர்கள் நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
அதிலே ஒன்று – ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி இரு வேளை சாப்பிடுபவன் போகி மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி நான்கு வேளை சாப்பிடுபவன் துரோகி. அதாவது ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட்டால் அவன் யோகி அவன் யோகத்திலே இருப்பது போல ஒரு யோகியை போல நல்ல மனோதிடம் பெற்றவனாக புத்திசாலியாக சக்திசாலியாக இருப்பான் பிறரக்கு வழிகாட்டக்கூடிய உன்னதமான நிலையில் இருப்பான் அவனுக்கு பிறருடைய துணை இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜீவிக்க முடியும் பிறரிடத்தில் போய் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது நோயோ குழப்பமோ கவலையோ உண்டாகாது எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும்.
இரண்டு வேளை சாப்பிட கூடியவன் போகி என்று சொன்னால் நாம் போகி என்று சொல்லக்கூடிய ஒரு பண்டிகையை கொண்டாடுகிறோமே அந்த இடத்தில் இந்த போகி என்ற வார்த்தை வருகிறது. போகங்களை அனுபவிப்பவன் போகி. தேவேந்திரன் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கிறாரே அவருக்கும் கூட போகி என்ற ஒரு பெயர் இருக்கிறது. அப்படியாக உலகியல் இன்பங்களை அனுபவிக்கக் கூடியவன் அதாவது ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டால் அவன் இன்பங்களை அனுபவிக்கிறான். நாம் ருசிக்காக சாப்பிடுகிறோம் என்று சொல்கிறோமே அது போல சாப்பிடுவதற்காக வாழ்கிறான்
மூன்று வேளை சாப்பிடக் கூடியவன் ரோகி. அதாவது வியாதியஸ்தர் நோயுற்றவர் நோயாளி என்பது பொருள். ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒருவர் சாப்பிட்டால் அவர் நோயாளியாக மாறுவார். நோய் வந்த பிறகு அவர் பத்தியம் இருந்து நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும். எங்கே நாம் ஒரு பொருளை தொலைத்தோமோ அங்கேதானே தேடுவோம், வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காக வேறு இடத்தில் போயா தேடுவோம் என்று நகைச்சுவையாக சொல்வார்களே அது போல, ஆகாரம் அதிகமாக சாப்பிட்டு நோய் ஏற்பட்டால் ஆகாரம் சாப்பிடாமல் பத்தியம் இருந்து விரதமிருந்து அந்த நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும். “லங்கணம் பரம ஔஷதம்” என்பது ஒரு வாக்கியம் அதாவது நோயுற்றிருக்கும்போது ( நோயின் தன்மைக்கு ஏற்ப) வெறும் வயிற்றோடு பட்டினியோடு சாப்பிடாமல் இருப்பது மிகச் சிறந்த அருமருந்து என்பது அர்த்தம். இப்படியாக மூன்று வேளை சாப்பிட கூடியவர் ரோகி ஆகிறார். ஏனென்றால் நம்முடைய உணவானது நமக்கு பலத்தை தருகிறது சக்தியை தருகிறது “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்கிறோமே அது போல. அதிகமாக சாப்பிடும் போது உணவே நஞ்சாக மாறுகிறது அவ்வுணவை ஜீரணிக்க நம்முடைய உடல் உறுப்புகள் அதிக வேலையை செய்கிறது. பிறகு கழிவுகளை வெளியேற்றுவதற்காக அதிக வேலை பளு நம்முடைய உடல் உறுப்புகளுக்கு உண்டாகிறது இப்படியாக பல காரணங்களை சொல்லலாம் அதனால் மூன்று வேளை சாப்பிட கூடியவன் ரோகி.
நான்கு வேளை சாப்பிடக் கூடியவன் துரோகி என்று சொல்லும்போது, குடியை கெடுத்து விட்டோம் பிறருக்கு துரோகத்தை இழைத்து விட்டோம் நம்பியவரை ஏமாற்றி விட்டோம் நம்பிக்கை துரோகம் என்று சொல்வார்களே அந்த அளவிற்கா செய்துவிட்டோம்? பாடுபட்டு உழைத்தோம் பொருளை ஈட்டினோம் அதைக்கொண்டு சாப்பிடுகிறோம் அது எப்படி துரோகம் ஆகும்? இப்படியாக சிலருக்கு கோபம் வரலாம் . ஆனால் சிந்தித்துப் பார்த்தால் நாம் புரிந்து கொள்ள முடியும் துரோகி என்று சொல்லும்போது நேரடியாக நாம் பிறருக்கு துரோகத்தை இழைக்காத போதும் கூட நம்முடைய செயலினால் மறைமுகமாக பிறர் பாதிக்கப்பட்டாலும் நாம் அவருக்கு துரோகம் செய்கிறோம் தானே?
அப்படியாக இந்த உலகத்திலே எண்ணற்ற தொழில்கள் உண்டு ஆனால் பல தொழில்கள் தொழிற்சாலைகள் வணிகத் தளங்கள் வியாபார நிறுவனங்கள் இப்படியாக இருந்தாலும் கூட பெரும்பாலும் உணவு பூமியிலிருந்து கிடைக்கிறது. இயற்கையாக கிடைக்கிறது. உணவு சம்பந்தமாக விவசாயம் செய்கிறோம் அந்த “விவசாயி உலகின் முதல் தொழிலாளி” என்று சொல்கிறார்கள் அப்படி இந்த பூமியில் இருந்து நாம் நமக்கான உணவை எடுத்துக் கொள்கிறோம் விதைகளை நாம் போடும்போது அது வளர்ந்து வருகிறது பயிராகிறது தானியங்கள் கிடைக்கிறது காயகறி கணிவகைகள் கிடைக்கிறது அதை நாம் சாப்பிடுகிறோம். நாம் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடும் போது ஒருவருக்கு கிடைக்காமல் போக வாய்ப்புண்டு அல்லவா?
ஒரு போகத்திற்கு இவ்வளவுதான் விளையும் இவ்வளவு பெரிய உலகத்திலே மூன்று பங்கு நீர் சூழ்ந்துள்ளது அதுவும் உப்பு நீரான கடல். ஒரு பங்கு மட்டும்தான் நிலமாக இருக்கிறது அந்த நிலத்திலும் கூட விவசாயம் செய்வதற்கான இடம் மிகவும் குறைவாக இருக்கிறது அந்த இடத்தில் விவசாயம் செய்வதற்கும் கூட இப்போது விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு தான் செய்கிறார்கள் அப்படியாக விளைவிக்கக்கூடிய அந்த தானியங்களை நாம் ஒருவேளை கூடுதலாக சாப்பிடும் போது யாரோ ஒருவருக்கு ஒரு வேளை கிடைக்காமல் போகிறது இப்படியாக நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயற்கையான பொருள் இல்லாமல் செயற்கையாக புதியதாக ஒன்றை உருவாக்கி நாம் சாப்பிட முடியாதே? இப்படியாக பலவாறாக நாம் இதை சிந்தித்து புரிந்துகொள்ளலாம்.
நான்காவதாக ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால் நமக்கு உயிர் போகாது நமக்கு பெரிய அளவிற்கு பலகீனம் வந்துவிடாது நோய் ஏற்பட்டு விடாது சக்தி குறைபாடு வராது போஷாக்குக் குறைபாடு வராது எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டோம் ஆனாலும் சாப்பிடுகிறோம் அப்படி சாப்பிடும் போது வறுமையிலே இருக்கக்கூடியவர்கள் ஏழ்மையிலேயே இருக்க கூடியவர்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காமல் போக வாய்ப்புண்டு அல்லது அரை வயிறு கால் வயிறு என்று அவர்கள் இருக்கும் படியாக ஒரு நிலை ஏற்படுகிறது. மறைமுகமாக நான்காவது வேளை சாப்பிடக் கூடிய நபர் அதற்கு காரணமாய் இருக்கிறோம். அதனால் நான்கு வேளை சாப்பிட கூடியவரை துரோகி என்றார்கள். இதை நாம் சரியாக புரிந்து கொள்ளும்போது இதற்கு பிறகு நான்காவது வேளை உண்பதைத் தவிர்க்கலாம்.
இந்த கலியுகத்திலே இப்போது நமக்கு கிடைக்கக்கூடிய தானியங்கள் காய் கனிகள் பதார்த்தங்கள் அந்த காலம் போன்று அவ்வளவு தரமானதாக நமக்கு கிடைப்பது கிடையாது. அது முழுமையான சத்துகளையும் நமக்கு கொடுப்பது இல்லை. அது புத்தம் புதிய தாகவும் இல்லை பழையதாகி விடுகிறது அப்படியான தின்பண்டங்களை ஆகாரத்தை ஒருவேளை சாப்பிட்டு நாம் ஜீவிப்பது இங்கு கடினம். மிக அரிதாக சிலர் இப்படி ஒரு வேளை உண்டு இப்போதும் கூட இருக்கிறார்கள். யாரால் முடியுமோ அவர்கள் ஒரு வேளை உண்டு வாழலாம். ஏனையவர்கள் இந்த காலத்திற்கு இந்த கால நடைமுறைக்கு இந்த கால உணவிற்கு இரண்டு வேளை சாப்பிடலாம் பரவாயில்லை.
அப்படி இரண்டு வேளை சாப்பிட்டு பழகவில்லை புதிதாக பழகுவது கடினம் திடீரென்று மாறும்போது உடலளவில் பிரச்சனை வருகிறதோ இல்லையோ மனதளவில் வந்துவிடும். மனதே பயத்தின் காரணமாக நோயை ஏற்படுத்திவிடும் என்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவது வேளை ஆகாரத்தின் அளவை குறைத்து பிறகு தவிர்க்கலாம். ஆனால் அதிக வேலை பளு இருக்கிறது கடினமாக வேலை செய்ய வேண்டியது உடல் உழைப்பு இருக்கிறது அல்லது மருந்து மாத்திரைகள் நோய்களுக்காக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான காரணங்களால் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பவர்கள் சாப்பிடலாம். இது பரவாயில்லை.
ஆனால் நான்காவது வேளை சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் தவிர்த்தால் நாம் துரோகம் செய்பவர்களாக இருக்க மாட்டோம் நமக்கும் மனது தெளிவாக இருக்கும் உடலும் நன்றாக இருக்கும் இதைக் கடைப்பிடிக்கலாம். இதிலே நான் மூன்று வேளை தான் ஆகாரமாக சாப்பிடுகிறேன் அதாவது காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு நேரத்தில் சாப்பாடு அல்லது டிபன் இப்படியாகத் தான் சாப்பிடுகிறோம் மாலை நேரத்திலேயே நொறுக்குத்தீனி என்று சொல்லக்கூடிய ஸ்னாக்ஸ் தான் சாப்பிடுகிறோம் இது கூட ஒரு வேளை உணவு சாப்பிட்டது போல கணக்கிலே வருமா? என்றால் கட்டாயம் வரும் ஏனென்றால் இந்த காலத்திலே மாலை நேரத்திலே நொறுக்குத்தீனி ஸ்னாக்ஸ் என்று சாப்பிடக்கூடியது பல வகைகளில் கிடைக்கிறது பஞ்சமில்லாமல் கிடைக்கிறது சூடாக சுவையாக வெளியூர் வகையெல்லாம் கிடைக்கிறது. அதனால் பெரும்பாலானவர்கள் அன்னம் சாப்பிடுவதை விட அதிகமாக இந்த நொறுக்குத் தீனி சாப்பிடுகிறார்கள் அதனால் இதுவும் ஒரு வேளை ஆகாரம் என்ற கணக்கில்தான் வரும்.
மேலும் இந்த நொறுக்குத் தீனி என்று சொல்லக்கூடியது அதாவது ஸ்னாக்ஸ் முற்காலத்திலே பண்டிகைகளின் போது மட்டுமே நமக்கு கிடைக்கும் பண்டிகை காலத்தில் இதுபோல நிறைய இனிப்பு காரம் பக்ஷணங்கள் பலகாரங்களை செய்வார்கள் அந்த பண்டிகையை பொறுத்து அது ஒரு நாள் அல்லது ஓரிரு நாட்கள் இருக்கும் உதாரணத்திற்கு கோகுலாஷ்டமி கார்த்திகை தீபம் தீபாவளி பண்டிகை இந்த காலங்களில் இது போல இனிப்பு கார பலகாரங்கள் சாப்பிடக்கூடிய ஒரு பழக்கம் இருந்தது ஆனால் வருடம் முழுக்க வாழ்நாள் முழுக்க தினசரி ஸ்னாக்ஸ் சிற்றுண்டி நொறுக்குத்தீனி அவர்கள் சாப்பிடவில்லை. அதனால் நாம் சாப்பிடக்கூடிய அந்த ஸ்னாக்ஸ் கூட ஒருவேளை ஆதாரமாகத் தான் கொள்ளப்படும் மேலும் இந்த ஸ்னாக்ஸ் மூலமாக தான் அதிகமாக இப்போது நிறைய பேருக்கு உடல் உபாதைகள் பக்க விளைவுகள் உடல் எடை அதிகரிப்பு வயிற்று தொந்தரவுகள் வாயுத் தொந்தரவு ஏற்படுகிறது அதனால் அதை தவிர்க்க வேண்டியது அவசியம் .
அடுத்து முக்கியமான கேள்வி, நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஒரு கேள்வி, ஒரு சந்தேகம். நேரத்திற்கு சாப்பிட வேண்டுமா ? சரியாக குறிப்பிட்ட ஒரு நேரத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டு அதே நேரத்தில் அனுதினமும் சாப்பிட வேண்டுமா? ஆகார விஷயத்தில் இந்த நேர விதிமுறையை கடைபிடிக்க வேண்டியது அவசியமா? தினசரி குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தவறாமல் சாப்பிட்டே ஆகவேண்டும் அலாரம் வைத்து சாப்பிட வேண்டும்? இல்லாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்படும் ரத்தக் கொதிப்பு உண்டாகும் வயிற்றுப் புண் வரும் பலஹீனம் ஏற்படும் இப்படியாக நிறைய பேர் இப்போது பயந்து நம்பி கவலையுற்று இருக்கிறார்கள் ஆனால் அப்படியெல்லாம் ஏதும் கிடையாது சாப்பிடுவதற்கு நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை ஆனால் இயற்கையிலேயே நமக்குள்ளேயே ஒரு நேர கணக்கீடு இருக்கிறது உள்ளிருந்து நமக்கு ஒரு சமிக்ஞை ஒரு சிக்னல் ஏற்படும் அதாவது வயிற்றில் பசி உண்டாகும் அதைதான் “பசித்துப் புசி” என்றார்கள் அப்படியாக பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும்.
ஓய்வு பெற்று வீட்டில் இருக்கக்கூடிய நபர்கள் அல்லது வீட்டைப் பார்த்துக் கொள்ளும் இல்லத்தரசிகள் இவர்கள் நேரம் பார்க்காமல் இதுபோல பசித்துப் புசி என்று சொல்லக்கூடியதை கடை பிடிக்கலாம் ஆனால் அலுவலகம் சென்றால் குறிப்பிட்ட ஒரு நேரம் தான் உணவு இடைவேளை நேரமாக இருக்கும் சுயதொழில் வியாபாரம் வெளிவேலை என அலைந்து திரியக்கூடிய கடினமான வேலை செய்யக் கூடியவர்கள் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது சாப்பிட வேண்டியவர்களாக இருப்பார்கள். அல்லது உணவு கிடைக்கும்போதுதான் கிடைக்குமிடத்தில்தான் சாப்பிட முடியும் சாப்பிட்டாக வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள் . இப்படிப்பட்டவர்கள் பசிக்காத போது குறைவாக சாப்பிடலாம்.
எப்படி சாப்பிட வேண்டும்? இதுதான் இந்த காலத்திலே நிறைய பேருக்கு தெரியாத விஷயமாக இருக்கிறது இதில் தான் தவறு செய்கிறார்கள் என்ன இது ? நம்ப முடியவில்லையே எப்படி சாப்பிட வேண்டும் என்பது கூடவா தெரியாது குழந்தைகள் தானே சாப்பிட தெரியாதவர்கள் பெரியவர்களுக்கு கூடவா தெரியாது இப்படியாக உங்களுக்கு எண்ணம் வரலாம் ஆனால் சாப்பிடக்கூடியது ஒரு கலை இந்த காலத்திலே நின்றுகொண்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காலை தொங்க போட்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு கைத்தொலைபேசி ஸ்மார்ட்போன் பார்த்துக் கொண்டு புத்தகம் படித்துக்கொண்டு செய்தித்தாள் வாசித்து கொண்டு பேசிக் கொண்டு சாப்பிட கூடியவர்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள் இதனால் எவ்வளவு சாப்பிட்டோம் என்பது தெரியாது என்ன சாப்பிட்டோம் என்பது தெரியாது அப்படி தெரியாது போவதனால் சத்துக்கள் கிடைக்காமல் போவது அதிகமாக சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வது நோய் ஏற்படுவது உடல் எடை அதிகரிப்பது அஜீரணம் ஆவது இப்படி பல பிரச்சனைகள் ஏற்படுகிறது
அது போல வேகவேகமாக சாப்பிடுவதை பெரும்பாலானவர்கள் இப்போது வழக்கமாக கொண்டுள்ளார்கள் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லை அவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது அலைந்து திரிய வேண்டி இருக்கிறது என்பதாக பெருமையாக கூட சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் நாம் நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் எப்படி சாப்பிடுகிறோம் என்பது முக்கியம் சரியாக சாப்பிடாமல் அவசரஅவசரமாக சாப்பிட்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டாலும் நல்ல பதவியை நிறைய சொத்துக்களை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட அதை அனுபவிப்பதற்கு ஆரோக்கியம் தேவை அதனால் ஆரோக்கியம் கிடைக்க நிதானமாக சாப்பிட வேண்டும் “நொறுங்கத் தின்றால் நூறுவயது” என்றார்களே நம்முடைய முன்னோர்கள் அதை கடைபிடிக்க வேண்டும் ஆகாரத்துக்கு இடையிலே அவசியம் ஏற்பட்டால் ஒழிய விக்கல் வந்தாலோ காரம் அதிகமாக இருந்தாலோ தொண்டையை அடைத்துக் கொண்டாலோ தண்ணீர் குடிக்கலாம் மற்றபடி ஆகாரத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் சிறிது நேரத்திற்குப் பின் தான் தண்ணீர் அருந்த வேண்டும்.
நிதானமாக சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல சாப்பிட்ட உடனேயே எழுந்து நடப்பது வேகமாக நடப்பது கடினமான பணிகளை செய்வது இப்படியானதை கட்டாயம் தவிர்க்கவேண்டும் “உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு” என்பார்கள் தொண்டு புரியக் கூடியவர்கள் தெய்வ வழிபாடு ஆன்மீகப் பணிகளை செய்யக்கூடியவர்கள் சிஷ்யர்களாக இருக்கக்கூடியவர்கள் பிறருக்கு கீழே வேலை செய்யக் கூடியவர்கள் கூட உண்ட பிறகு களைத்து போவார்கள் அவர்களுக்கு ஓய்வு தேவை ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு” என்று சொல்லப்பட்டது அதனால் கட்டாயம் நாம் அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் சிறிது நேரமாவது ஓய்வாக இருப்பது நல்லது
என்ன சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? சைவமா அசைவமா இப்படியாக முக்கியமான கேள்வி இருக்கிறது. இதை பொருத்தவரைக்கும் பொதுப்படையாக ஏதும் சொல்வதற்கு இல்லை…. ஒவ்வொருவருக்கு ஏற்றவாறும் இந்த ஆகார நியமம் என்று சொல்லக்கூடியது மாறுபடும் ஒருவருடைய வயது உடல் உழைப்பு வேலை வியாதி தட்பவெப்ப நிலை இப்படியாக பல விஷயங்களைப் பொறுத்து அவர் எதை சாப்பிட வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்பதை அனுபவரீதியாக கடைபிடிப்பதோ பெரியவர்களைக் கேட்டு செய்வதோ மருத்துவரிடத்திலே ஆலோசித்து நடைமுறைப்படுத்துவதோ உத்தமம்.
ஆனால் பொதுவாக எவராக இருந்தாலும் புதியதாக தயாரித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது ஒவ்வொரு வேளை ஆகாரத்திற்கும் அந்த வேளையிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. அதாவது காலை சிற்றுண்டியை காலை செய்து சாப்பிடவேண்டும் மதிய உணவை மதியம் செய்து சாப்பிடவேண்டும் இரவு சிற்றுண்டியை இரவிலே செய்து சாப்பிடவேண்டும். இதிலே மதிய உணவு செய்வதற்கு இப்போது பெரும்பாலானவர்களுக்கு நேரம் கிடையாது பெண்மணிகளும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது அதனால் காலை செய்து மதியம் சாப்பிடலாம் மதிய உணவை காலையிலே தயாரிக்கலாம் இது பரவாயில்லை ஆனால் காலையிலே சமைத்து அதை இரவிலே சாப்பிடுவதோ மதியம் சமைத்து இரவிலே சாப்பிடுவதோ சமைத்ததை மறுநாள் சாப்பிடுவதோ அடுத்தடுத்த நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதோ தவறு. அதனால் உடல் கெட்டுப் போவது மட்டுமில்லாமல் மனதும் கெடும். மந்தபுத்தி உண்டாகிவிடும் மந்தத் தன்மை வந்துவிடும் ஆறிப் போனதை பழையதை சாப்பிடும்போது நமக்கு மந்த புத்தி வரும் புதியதாக சாப்பிடும் போது நமக்கு தெளிவு உண்டாகும் இதை திருக்கோவிலில் பிரசாதங்கள் கொடுப்பார்களே அப்போது பார்க்கலாம்.
ஸ்வாமிக்கு படைத்த பிரசாதம் சாப்பிட்டால் நமக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் சந்தோஷம் உண்டாகும் சிறிய அளவில் சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும் ஏனென்றால் அது சுத்தமாக தரமாக அப்போது செய்து கடவுளுக்கு படைத்து அப்போதே நமக்குத் தரப்படுகிறது அதனால்.
பழையதை சாப்பிட கூடாது ? என்று சொன்னால் முன்னால் செய்தது என்பது மட்டுமல்ல காலை செய்வது இரவுக்கு பழையது மதியம் செய்தாலும்கூட இரவிற்கு அது பழைய தான் அப்படி இருக்க ஒரு நாள் செய்த பதார்த்தங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடுவது மிகவும் பெரிய தவறு மனது உடல் இரண்டும் கெடும் ஆனால் இந்த இடத்திலே பழையதை சாப்பிட கூடாது என்று சொன்னதை நம்முடைய முன்னோர்கள் பழையது சாப்பிட்டார்கள் அவர்களுக்கு அது பலம் பலம் தந்தது ஆரோக்கியம் தந்தது ஆனால் இப்போது வேண்டாம் என்கிறீர்களே? என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. பழையது என்று சொல்லும் போது இரவு புதிதாக செய்த அரிசி சாதத்தை நீர் ஊற்றி வைத்து மறுநாள் காலை நீராகாரமாக அல்லது நீர் மோர் விட்டு மோர் சாதமாக சாப்பிடலாம் மற்றபடி ஒருநாள் செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பல நாட்கள் சாப்பிடுவதோ காலை செய்ததை இரவில் சாப்பிடுவது தவறு.
இப்படியாக நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு சாத்தியமாக நீண்ட ஆயுள் உண்டாக நல்ல தேக பலம் கிடைக்க அதோடு மனோபலமும் மனோதிடம் மனதிலே தெளிவும் உண்டாக நாம் சாப்பிடக்கூடிய வழிமுறையை பார்த்தோம் உணவு உண்பதிலே கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் தவிர்க்க வேண்டியது இப்படியான சில தகவல்களை தெரிந்து கொண்டோம் கடைப்பிடித்து பயனடைவோம். பல்லாண்டு வாழ்க.
பதியப்பட்ட தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம்.
இதுபோல பயனுள்ள தகவல்களையும் ஜோதிடம் வாஸ்து மற்றும் ஆன்மீகம் சம்பந்தமான அற்புதமான தகவல்களையும் தொடர்ந்து இந்த வலைத்தளத்திலே பதிவிடுவோம். படித்து பயன்பெறுங்கள்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்ககணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமம் திருமணம் கிரஹப்பிரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply