மார்கழி 18, 02 january 2022 ஞாயிறு – என்ன விசேஷம் ?
மார்கழி அமாவாசை , மூலம் = ஹனுமத் ஜெயந்தி
அனைத்து தோஷங்களையும் போக்கும் அற்புதமான நாள். நவக்கிரஹ தோஷங்களை முழுவதுமாக போக்கும் நல்ல நாள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் ஒரு கல்லிலே ஒன்பது மாங்காய் விழுந்தால் !!!அப்படியாக ஒரு நாள் விரதம் ஒன்பது கோள்களின் தோஷமும் போக்கும். பலன்கள் நம்மை வந்து சேரும். கல்வியில் சிறந்து விளங்க, நல்ல உத்தியோகம் கிடைக்க, பொருளாதார நிலை மேம்பட, சுயதொழில் வியாபாரத்தில் வெற்றி பெற, திருமண தடை விலக, மணவாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாக, புத்திரப்பேறு கிடைக்க, மனை வீடு வண்டி வாகன யோகம் பெற, நோய்நொடிகள் விலகி ஆரோக்கியம் பெற, தீர்காயுள் உண்டாக…
இப்படியாக நாம் பிறப்பது முதல் நம்முடைய வாழ்க்கை முழுக்க ஒவ்வொரு பலன்களை தர ஒவ்வொரு கிரகம் காரகத்துவம் பெற்றுள்ளது. உங்களுடைய சுய ஜாதகத்தில் எந்த கிரகம் தன்னுடைய பலனை உங்களுக்குத் தர முடியாத அளவு பலமிழந்து இருக்கிறதோ, அந்த கிரகம் பலம் பெற, சகல யோகத்தையும் நீங்கள் அனுபவிக்க, கிரக தோஷங்களால் ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் விடுபட, விரதம் வழிபாடு இரத்தினம் அணிவது பூஜைகள் ஹோமங்கள் செய்வது தான தர்மங்கள் செய்வது என்பது போன்ற பல விதமான பரிகாரங்கள் தீர்வுகள் இருக்கின்றது.
இருந்தபோதும் மிகச் சுலபமான வழிகளும் நம்முடைய முன்னோர்களால் நமக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தனித்தனியாக ஒவ்வொரு கிரகத்திற்கும் பரிகாரம் செய்ய, கிரக ப்ரீதி உண்டாக, ஒரு தெய்வத்தை வழிபடக்கூடிய முறை இருக்கிறது. அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி எல்லாவிதமான யோகங்களும் பெற ஒரே கடவுள் வழிபாடும் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலே ஆஞ்சனேய ஸ்வாமியை வழிபட நவகிரஹ தோஷங்கள் யாவும் நீங்கும். நன்மைகள் எல்லாம் பெற்று இந்த வையகத்திலே நாம் சிறப்புற வாழலாம்.
அது எப்படி? ஹனுமனுக்கும் நவகிரஹங்களுக்கும் உண்டான தொடர்பு என்ன? இப்படியானவற்றை ஜோதிட ரீதியாக சிந்திப்போமா..
சூரியன் நவகிரகங்களில் தலையாய கிரகம். சூரியனை குருவாகக் கொண்டவர் ஆஞ்சநேய ஸ்வாமி. சூரியனுடைய வேகத்திற்கு ஈடு கொடுத்து அவரோடு பயணித்து கசடறக் கற்று, கற்றபின் அதை கடைபிடித்து சிறந்த சிஷ்யனாக இருந்தார் . மேலும் சூரிய வம்சத்தில் வந்த இராமபிரானுக்கு பக்தனாக இருந்தார். அதனால் சூரிய தோஷம் விலக அனுமனை வழிபடலாம்.
சந்திரன் மனோகாரகன். இராமாயணத்தில் எப்போதெல்லாம் சீதா ராமர் லட்சுமணர் பரதன் இப்படியானவர்கள் மனம் கலங்கி, நம்பிக்கையை இழந்து இருந்தார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கு இருந்த மனக் கலக்கத்தைப் போக்கி மனமகிழ்ச்சியை, மன மலர்ச்சியை ஏற்படுத்தினார் . அதனால் அனுமனை வழிபட சந்திர தோஷம் விலகும். சந்திரபலம் கிட்டும்.
அங்காரகன் சேனாதிபதி. மகா வீரனாக அனுமன் இருக்கிறார். வீரதீர பராக்கிரம சாலி என்று சொல்லும்போது நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ஆஞ்சநேயர் தான். மேலும் இலங்கை அழியப் போகிறது என்பதற்கு அறிகுறியாக முதன்முதலாக தன் வாலில் பற்றவைத்த நெருப்பைககொண்டு இலங்கையை எரித்தார். சகோதரர்கள் என்று சொன்னால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்த ராம லட்சுமண பரத சத்துருக்கர்களுக்கு உடனிருந்து உதவினார்.
சமயோசித புத்தி வாக்கு சாதுரியம் இதற்கு உதாரணமாக யாரையாவது தேடினால் அனுமனுடைய நினைவுதான் நமக்கு வரும். சொல்லின் செல்வர் என இவர் போற்றப்படுகிறார். மிகச்சிறந்த counsilar ஆகவும் உலகின் தலையாய motivator ஆகவும் ஆஞ்சநேயஸ்வாமி விளங்குகிறார். இவரை வழிபட புதனுடைய தோஷம் நீங்கும்.
குருவிற்கே பெயர் வாங்கி தரும் சிஷ்யனாக அனுமன் திகழ்ந்தார். இவர் நவவியாகரண பண்டிதர் என பெயர் பெற்று சூரியனுக்கே பெயர் பெற்று தந்தார். உலகின் மிகச்சிறந்த குருவான இராமபிரானை குருவாக ஏற்றார். குருவிடம் என்ன பெறவேண்டும் என்ற எண்ணமே நம் எல்லோருக்கும் இருக்க , குருவிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்பதாக சிந்தித்து எல்லாவற்றையும் செய்தார். குருவை வழிபட்டால் பூஜித்தால் மட்டும் போதாது, அவருடைய கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். அந்த குருவே விரும்புகின்ற மாதிரி நம்முடைய நடத்தை இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமானார் . அதனால் குரு ப்ரீதி ஏற்பட, குருவருள் கிடைக்க அனுமனை நாம் வழிபடலாம்.
சுக்ரன் களத்திரகாரகன் . சாக்ஷாத் மஹா லக்ஷ்மியுடைய அம்சமான சீதாபிராட்டியாரின் துக்கத்தையே போக்கினார். உலகின் மிகச்சிறந்த தம்பதிகளான சீதாராமர் இவர்களுடைய பிரிவை போக்கினார். இவர்கள் இணைய காரணமாயிருந்தார் . இராமருடைய கணையாழியை சீதைக்கு கொடுத்தும், கண்டேன் சீதையை என ராமர் இடத்திலே உரைத்தும், நம் எல்லோருக்கும் அன்னையாய் தந்தையாய் இருக்கக்கூடிய சீதா ராமபிரானுக்கு துயரம் போக்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தினர். அதனால் அனுமனை வழிபட சுக்ரப்ரீதி உண்டாகும். களத்திர தோஷம் போகும்.
சனி ஆயுட்காரகன். ஸ்ரீராமர் லட்சுமணர் சீதை பரதன் இப்படியானவர்களுக்கு ஆயுள் கண்டம் ஏற்படும்போதெல்லாம், உயிரை போக்கிக் கொள்ளும் எண்ணம் வரும்போதெல்லாம், அதிலிருந்து இவர்களை காத்தார் ஹனுமன் . சப்த சிரஞ்சீவிகளில் ஒருவராக, இப்போதும் நம்முடன் இருக்கிறார், எப்போதும் இருப்பார். அதனால் ஆயுள் காரகனான சனி உடைய தோஷம் போக, சனி அருள் கிடைக்க அனுமனை வழிபடலாம்.
ராகு எதையும் பெரிது படுத்துபவர். வானளவிற்கு தன் உயரத்தை வளர்த்துக்கொள்வது, மலையையே தூக்குவது, கடலையே தாண்டுவது என பிரம்மாண்டமான காரியங்களை ஹனுமன் ஆற்றினார். இந்திரஜித் உடைய நாகாஸ்திர கட்டிலிருந்து இராம லகக்ஷ்மணர்களை இவர் மீட்டார். நஞ்சை முறிக்க சஞ்ஜீவி மூலிகையை கொண்டு வந்தார். அதனால் அனுமனை வழிபட ராகு தோஷம் போகும். நாக தோஷம் போகும். ராகு தரக்கூடிய யோகத்தை நாம் பெற முடியும்.
கேது மோட்சகாரகன். எதையும் சிரிதாக்கக்கூடியவர். மோட்சம் என்று சொல்லப்படக்கூடிய வைகுண்ட பிராப்தி இராமன் அருளால் கிடைத்த போதும் கூட , இங்குதான் ராம நாமம் இருக்கிறது, அதனால் பூலோகத்திலேயே இருக்கிறேன் என்றும், காம குரோத மத மாச்சர்யங்கள் இன்றி மிகச்சிறந்த யோகியாக இருந்தார். தன்னை மிகச் சிறிய அளவிலும் கூட மாற்றிக் கொண்டார், பணிவு என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தார். பற்றற்று இருந்தார். எப்போதும் இராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். மிகச் சிறந்த பக்தனாக இருக்கிறார். எனவே அனுமனை வழிபட கேது தோஷம் போகும். நாக காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இப்படியான விசேஷமான பலன்களைத் தரவல்ல ஆஞ்சநேய ஸ்வாமியை வழிபட உகந்த நாளாக வருகின்ற மார்கழி 18 (02.01.2022 ) ஞாயிற்றுக்கிழமை அமைகின்றது. இந்த நாளில் விரதம் பூஜைகளை மேற்கொண்டு ஆஞ்சநேய ஸ்வாமியை வழிபட்டு அவருடைய அருளுக்கு பாத்திரமாவோம்.
மேலும் அனுமனுடைய சிறப்புகள் என்னென்ன? ஆஞ்சநேய ஸ்வாமிக்கு விசேஷமான மாலைகள் அணிவிக்கிறோமே அவை எதற்காக? அவருக்கு வெண்ணை காப்பு செய்வது, வாலிலே சந்தனம் வைப்பது, செந்தூரக் காப்பு செய்வது எதற்காக? இப்படியான ஆஞ்சநேய ஸ்வாமியை பற்றிய மிக விசேஷமான பல தகவல்களை வீடியோக்களாக பதிவிட்டு இருக்கிறோம். அவற்றின் இணைப்பை கீழே தருகிறோம். பார்த்து நீங்கள் பயன்பெறுங்கள்.
ஆஞ்சநேய ஸ்வாமி நம் எல்லோருக்கும் அருளட்டும். ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, கணபதி லக்ஷ்மி நவகிரஹ ஹோமம், கிரஹப்ரவேசம் செய்ய அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply