மஹாளயபக்க்ஷ விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? மஹாளயபக்க்ஷ காலத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவையெவை? பித்ரு தோஷமும் மஹாளயபக்க்ஷம் மூலம் தீர்வும்! மற்றும் மஹாளயபக்க்ஷ மகத்துவங்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
மஹாளய பக்க்ஷ காலம் எது? மஹாளயபக்க்ஷ விரதத்தை யார் யாரெல்லாம் அனுஷ்டிக்க வேண்டும்? ஏன் அனுஷ்டிக்க வேண்டும்? என்பனவற்றை கடந்த பதிவிலே பார்த்தோம். அதன் தொடர்ச்சியை மேற்கண்ட கேள்விகளுக்குண்டான விளக்கங்களை இனி இப்பதிவிலே பார்ப்போம்.
எப்படி அனுஷ்டிக்க வேண்டும்? மஹாளயபக்க்ஷ காலத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன? மஹாளயபக்க்ஷ காலத்திலே பிரதிதினமும் அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஸ்நானம் செய்யவேண்டும். புண்ய தீர்த்தங்களிலே நீராடும் வாய்ப்பு கிடைக்கப்பெறுபவர் தவறவிடாதீர். புண்ய தீர்த்தங்களிலோ இல்லத்திலோ அனுமதிக்கப்பட்ட கோவில் குளக்கரை , தீர்த்தங்களிலோ தர்ப்பணம் விடவேண்டும்.
தந்தை தாயுடைய திதி வரக்கூடிய அன்று (இயன்றால் செய்யவேண்டிய அனைவரது திதி வரக்கூடிய நாளிலும்) ஸ்ரார்தம்/ திவசம் கொடுக்கவேண்டும். காகத்திற்கு அன்னம் வைக்கவேண்டும். பசுவிற்கு ஆகாரம் கொடுக்கவேண்டும்.அந்தணர்க்கு தானம் (தசதானங்கள்) கொடுக்கவேண்டும். ஏழை எளியோர்க்கு இல்லாதோர்க்கு தர்மம் செய்யவேண்டும். அன்னதானம் செய்தல் விசேஷம். பக்க்ஷம் முழுவதும் காலை மாலை ஆகாரம் தவிர்த்து பகலிலே போஜனம் இரவிலே எளிய சிற்றுண்டி என்கின்ற உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்.
தலைக்கு ஸ்நானம் விரதம் இத்யாதிகள் இயன்றவருக்கே . வயோதிகர் நோயுற்றவர் இயலாதவர் சக்திக்கேற்றவாறு செய்தால் போதுமானது.
முன்னோரை நினைவில் கொள்ளுதல வேண்டும். அவர்களுடைய அன்பு அரவணைப்பு திறமை ஞானம் பக்தி உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் நல்லொழுக்கம் இப்படியான குணங்களை பேசுதல் இளையோருக்கு எடுத்துரைத்தல் போன்றவற்றை செய்யவேண்டும்.
முன்னோர் செய்யவிரும்பிய தர்மகாரியங்களை செய்யலாம். அவர்களுக்கு பிடித்த பக்க்ஷனங்களை பதார்த்தங்களை செய்து படைக்கலாம்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவையெவை? மஹாளயபக்க்ஷ காலத்திலே வெளியூர் சென்றுவிடக்கூடாது. முடி திருத்துதல் (க்க்ஷவரம் செய்தல்) கூடாது. வெளி உணவை புசிக்கக்கூடாது. வெங்காயம் பூண்டு ஆங்கில காய்கறிகளை தவிர்க்கவேண்டும். கட்டில் மெத்தை தவிர்க்கவேண்டும். தாம்பத்தியம் கூடாது. புகையிலை பீடா புகைப்பழக்கம் மது சூது கூடவே கூடாது. கோப தாபம் வம்பு வழக்கு சண்டை சச்சரவு பகை விரோதம் சஞ்சலம்…….கட்டாயம் கூடாது. பொழுதுபோக்கு கேளிக்கை சினிமா டிராமா விருந்து கொண்டாட்டம் தவிர்க்கவேண்டியது அவசியம். அலங்காரம் ஆடம்பரமான வஸ்திரங்கள் வாசனாதி திரவியங்கள் பயன்படுத்தக்கூடாது. சுபகாரிய ஆரம்பங்களை ஏற்பாடுகளை மஹாளய அமாவாசைக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம்.
பித்ரு தோஷமும் மஹாளயபக்க்ஷம் மூலம் தீர்வும்! முறைப்படி ஸ்ரத்தையாக மஹாளயபக்க்ஷ நியமங்களை அனுஷ்டிப்பவருடைய குடும்பத்திலே பலகாலமாக தீராத பித்ரு தோஷங்கள் தீரும். கிடைக்காத, கிடைத்தற்கரிய முன்னோர்களின் ஆசியானது கிடைக்கும்.
மஹாளயபக்க்ஷ மகத்துவங்கள் தந்தை தாய்க்கு மட்டுமல்லாமல் காருணீக பித்ரு வர்க்கம் என்பதாக உடன்பிறந்தோர் உறவினர் குரு நண்பர்கள் தெரிந்தவர்கள் பழகியவர்கள்…. என அனைவருக்குமான தர்ப்பணம், தான தர்மங்களை செய்யக்கூடியதாக மஹாளயபக்க்ஷம் மகத்தானதாக இருக்கின்றது.
பக்க்ஷம் முழுவதுமே நமக்கு கிடைத்த நல்வாய்ப்பு . அதிலும் மத்யாஷ்டமி, அவிதவாநவமி, சந்யஸ்தமஹாளயம், சஸ்த்ரஹத பித்ருதிதி, கஜச்சாயை, மஹாபரணி, மஹா வியதிபாதம், மஹாளய அமாவாசை நாட்கள் நாம் பெற்ற பேறு. இத்தினங்களையும் இப்பக்க்ஷத்தையும் தவறாது சக்திக்கேற்றவாறு கடைபிடித்து நாமும் நற்கதியடைந்து நம் முன்னோர்க்கும் (பித்ருக்களுக்கும்) உதவுவோம்.
இதுபோன்று, தொடர்ச்சியாக வரக்கூடிய விரதங்கள் பண்டிகைகள், ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமான பயனுள்ள தகவல்களை இவ்வலைத் தளத்திலே குருவருளாலும் திருவருளாலும் தொடர்ந்து பதிவிடுவோம். படித்து பயன் பெறுங்கள்.
கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜோதிடம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, ஸ்ரார்தம் (திவசம்) செய்து வைக்க அணுகவும் .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply