பிள்ளையார் சதுர்த்தி PART 4 DON’TS OF VINAYAGA CHATHURTHI :

food wood love people

விநாயக சதுர்த்தி சம்பந்தமான கேள்வி பதில்கள், பிள்ளையார் சதுர்த்தியை எப்படி கொண்டாடுவது? பூஜை வழிபாட்டு முறை யாது? அவசியம் செய்யவேண்டியவை எவையெவை? என்பனவற்றை கடந்த மூன்று பதிவுகளிலே பார்த்தோம். பண்டிகையிலே கட்டாயம் தவிர்க்கவேண்டியவை என்னென்ன? என்பதை இப்பதிவிலே அறிந்து கொள்வோம். வாருங்கள்.

DON’TS OF VINAYAGA CHATHURTHI :

பிள்ளைகளும் பிள்ளையார் சதுர்த்தியும் – விநாயக சதுர்த்தி பூஜையிலே சில்மிஷம் சேட்டை இடையூறு மடிகெடும் இப்படியாக ஏதாவதொரு காரணத்திற்காக குழந்தைகளை தவிர்த்துவிட்டு பூஜை செய்யக்கூடாது. குழந்தைகளுக்கு பிடித்த பிள்ளையார் பூஜையிலே பிள்ளைகள் கலந்து கொள்ளாவிட்டால் அது எப்படி நிறைவுறும்? அதுபோலவே பிள்ளைகளும், பூஜை வழிபாட்டிற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை அது பெரியோர் பொறுப்பு என இருக்கக்கூடாது.

கடை பலகாரம் – ‘கடையிலே வாங்கி மனையிலே வைப்பது’ என்பதை தவிர்க்கவேண்டும். விநாயகருக்கு மோதகம்/கொழுக்கட்டை அப்பம் பிடித்தமானது. ஆனால் செய்யத்தெரியாது என்பதற்காக பலகாரங்களை கடையில் வாங்கி ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யக்கூடாது. செய்ய சக்தியில்லை வசதி வாய்ப்பில்லை என்றால் ஒரு கரும்புத்துண்டையோ வெல்லக்கட்டியையோ கூட பக்தியோடு படைத்தால் போதுமானது கஜகர்ணன் அதை ஏற்றுக்கொள்வார்.

கடைக்காரர்களுக்கும் பண்டிகை – கடையிலே பலகாரங்களை வாங்கவே கூடாது என்று கூறவில்லை . கடையில் வாங்கி நைவேத்யம் செய்யக்கூடாது என்றுதான் அறிவுறுத்தி இருக்கிறோம். அதானால் கடையிலே விற்கப்படும் பலகாரங்களை வாங்கி சாப்பிடலாம். பிறருக்கு கொடுக்கலாம். கடைக்காரர்களும் பிழைக்க வேண்டுமல்லவா? எல்லோரின் பொருட்டு தானே பண்டிகைகள் வருகிறது.

பூஜை முழுமைபெற – வசதி படைத்தவர்கள் வீட்டிலே சாப்பிடுவதற்கு ஆளில்லை என்று சாஸ்திரத்திற்கு, கொஞ்சமாக பிரசாதங்களை செய்து நைவேத்யம் செய்தால் பூஜை நிறைவுறாது. அடப்பாவமே இதென்ன புதிதாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? பதில் சொல்கிறேன்.

யானைப்பசிக்கு சோளப்பொறியா – ஏகதந்தன் கஜகர்ணன் கஜாநனன் ஸூர்ப்பகர்ணன் என்பதாக அர்சிக்கிறோம். யானையை விநாயகராக பார்க்கிறோம், வழிபடுகிறோம். யானையாக வந்து காப்பார் என நம்புகிறோம். இப்படியிருக்க ‘யானைப் பசிக்கு சோளப்பொறியாக’ கொஞ்சமான நைவேத்யம் செய்தால் எப்படி திருப்தி அளிக்கும்?

(கரும்புத்துண்டையோ வெல்லக்கட்டியையோ கூட பக்தியோடு படைத்தால் போதுமானது என்பது இல்லாதவருக்கு வறியவருக்கு சொல்லப்பட்டது)

எவ்வளவு நைவேத்யம் – பொருள்கொண்ட பாக்கியவான்கள், நைவேத்யம் செய்யும் பிரசாதங்களை ஒரு யானை அசைந்து அசைந்து தனது துதிக்கையால் சாப்பிடுவதாக நினைத்து அதற்கேற்ப தாரளமாக நைவேத்யம் செய்ய வேண்டும். சாப்பிட வீட்டிலே ஆளில்லை என்றால் என்ன? வெளியில்தான் ஏராளம்பேர் இருக்கிறார்களே. பிரதி தினமும் இல்லாவிட்டால்கூட பண்டிகை தினத்திலாவது அவர்களை கவனிக்கலாமே.

எது பாவம் தரும் – இயற்கைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட பிள்ளையாரை வாங்கக்கூடாது. அப்படி செய்து விற்றால் , வாங்கினால் பலன் பெறவேண்டிய பண்டிகை நாளிலே பாவத்தை பெற்றதாகிவிடும்.

எதை செய்யவே கூடாது – பூஜைக்கு பிறகு களிமண் பிள்ளையாரை தப்பித்தவறியும் அசுத்தமான நீரிலே விட்டுவிடக்கூடாது.

பரிகாரமே இல்லாத தோஷத்தை தருவது எது – கடமையாக நினைத்தும், புண்ணியத்தை பெரும் பொருட்டும், கொண்டாட்டமாகவும், அறியாமல் செய்த பாவம் போகவும், பெற்றோர்/முன்னோர் சொல்லிக்கொடுத்து தொடர்ந்து கடைபிடிக்க அறிவுறுத்திய தற்காகவும், என ஒவ்வொருவர் ஒவ்வொன்றிற்காக விநாயக சதுர்த்தி விரதம் பூஜை பண்டிகையை கொண்டாட முற்படும்போது, அதை தடுக்கும் கெடுக்கும் செயலானது விமோசனமே இல்லாத தோஷத்தை ஏற்படுத்தும்.

விநாயக சதுர்த்தி – கடந்த மூன்று பதிவிலும், இப்பதிவிலும் ஆகமொத்தம் சதுர்த்தி நாயகன் பற்றி நான்கு பதிவுகளில் சிந்தித்தோம். மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம், ஆவணி மாதம் 25 ஆம் (1௦.௦9.2௦21) தேதி வெள்ளிக்கிழமை அன்று விநாயக சதுர்த்தியை பயபக்தியோடு பக்தி ஸ்ரத்தையோடு குழந்தைகளோடு கொண்டாடி ஆனைமுகனின் அருளை பெறுவோம்.

குறிப்பு – இதுபோன்று, தொடர்ச்சியாக வரக்கூடிய விரதங்கள் பண்டிகைகள் ஜோதிடம் வாஸ்து சாஸ்திரம் சம்பந்தமான பயனுள்ள தகவல்களை இவ்வலைத் தளத்திலே குருவருளால் திருவருளால் பதிவிடுவோம். படித்து பயன் பெறுங்கள்.

தொடர்புகொள்ள கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜோதிடம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க, பிள்ளையார் சதுர்த்தி பூஜை செய்து வைக்க அணுகவும் .

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading