பாதச்சுவடுகளை போடுவதேன்? கண்ணன் குழந்தையாக தவழ்ந்து வருவாரா? நடந்து வருவாரா? பாரிஜாதம் ஏன் விசேஷம் ? எந்த ஸ்லோகங்களை சொல்லவேண்டும்? அவல் ஏன்? பக்தி விரதம் பூஜை தானே முக்கியம்… பக்க்ஷனங்கள் அவ்வளவு முக்கியமா? இக்கேள்விகளுக்கான விளக்கங்களையும், கிருஷ்ணஜெயந்தி வழிபாட்டிலே அவசியம் செய்யவேண்டியது எது? கட்டாயம் தவிர்க்கவேண்டியது எது? இவற்றையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.
கோகுலாஷ்டமியின் மகத்துவம் ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் வீட்டு குழந்தையின் பிறந்தநாளை போல கொண்டாடப்படுவது கோகுலாஷ்டமி. குழந்தை இல்லாதவரும் தங்கள் இல்லத்திற்கு கண்ணனே பிள்ளையில்லா குறையைப்போக்க, பிள்ளை வரம்தர குழந்தையாக வருவதாக நினைத்து கொண்டாடுவது இப்பண்டிகையின் சிறப்பு. இப்படி குழந்தையாக கடவுள் கிருஷ்ணனை கொண்டாடடிய வீடுகளில் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி வருவதற்குள்ளாக புத்திரப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அப்பேற்றை பெற்ற பாக்கியவான்கள் ஏராளம்.
ஜென்மாஷ்டமி பண்டிகையின் விசேஷமான பல அம்சங்களிலே விரதம் பிரதானாமாக உள்ளது. ஏகாதசி விரத மகிமையானது நம் எல்லோருக்கும் தெரியும். அதுபோல ஜென்மாஷ்டமி விரதமானது விரதங்களில் மிக முக்கியமானதாக இருக்கிறது.
கிருஷ்ணஜெயந்தி வழிபாட்டு முறை பொதுவாக கோகுலாஷ்டமி அன்று அதிகாலை எழுந்து தலைக்கு ஸ்நானம் செய்ய வேண்டும். மாலையோ, இரவோ வீட்டு வழக்கப்படி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை காலையிலிருந்தே செய்துகொள்ள வேண்டும். கண்ணனை குழந்தையாக கொண்டாடுவதால் பக்க்ஷனங்கள் முக்கியாமான இடத்தை பிடிக்கிறது.
கண்ணனுக்கு பிடித்த பிரசாதங்கள் பால் திரட்டுப்பால் தயிர் நெய் வெண்ணை அவல் பாயசம் வெல்ல சீடை உப்பு சீடை தேங்குழல் முறுக்கு கைமுறுக்கு தட்டை இயன்ற இனிப்பு வகைகள் கார வகைகள் பழவகைகள் …
நம் வீட்டு வாசலிலிருந்து பூஜையறை வரை குழந்தை கண்ணனின் பிஞ்சு பாதங்களை மாக்கோலத்தினால் வரைந்து கிருஷ்ணருடைய விக்ரஹத்தையோ படத்தையோ வைத்து நறுமணமிக்க மலர்களால் ஆன மாலைகள் துளசி மாலை மிக விசேஷமாக பாரிஜாதம் கொண்டு அலங்காரங்கள் செய்து, பூஜைகளை மேற்கொண்டு மேற்சொன்ன பக்க்ஷனங்களை நைவேத்யம் செய்து பக்தியோடு பாடல்களை பாடி ஹாரத்தி எடுத்து பூஜையை செய்யலாம்.
மாட்டுப்பொங்கல் அன்று எருது மாடு கன்றுகளை எப்படி பூஜிப்போமோ, கொண்டாடுவோமோ அதுபோல கிருஷ்ணஜெயந்தி அன்று செய்வது பன்மடங்கு புண்ணியம்.
கோகுலாஷ்டமியின் மிகமுக்கிய அம்சம் ஆதரவற்ற அல்லது ஏழ்மை நிலையிலுள்ள குழந்தைகளை இல்லத்திற்கு அழைத்துவந்து அவர்களை கிருஷ்ணனாகவே பாவித்து புத்தாடைகளை அணியக்கொடுத்து சுவையான விருந்தளித்து கல்விபயில தேவையானவை விளையாட்டு சாமான்கள் நைவேத்யம் செய்த பக்க்ஷனங்கள் இயன்ற தக்க்ஷணை கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்பது இப்பண்டிகையின் மிகமுக்கியமான அம்சம்.
ஜென்மாஷ்டமி செய்ய/தவிர்க்கவேண்டியது மாலை அல்லது இரவு பூஜை என்பதால் அதுவரையும் பூஜைக்குப்பின்னும் கேளிக்கை அம்சங்கள் வீன் அரட்டை வெற்றிலை போடுவது புகையிலை வேறு தீய பழக்கங்கள் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
உபவாசம் இல்லாதவர்கூட பகல் போஜனத்தை எளிமையாக தூயதாக உட்கொள்ளவேண்டும்.
உபவாசம் இருப்பவர் பூஜைக்கு பிறகு வெண்ணை சாப்பிட்டோ, பிரசாதங்கள் சாப்பிட்டோ விரதம் பூர்த்தி செய்யலாம். சிலர் மறுநாள் விரதம் முடிப்பர். (வழக்கப்படி செய்யவேண்டியது)
கண்ணனின் பாதச்சுவடுகளை பெரியதாக போடக்கூடாது. குழந்தைகள் விரும்பி போடமுன்வந்தால் அனுமதிக்கவேண்டும். அப்போது அளவு முக்கியமில்லை.
வீட்டிலே குழந்தைகள் இருந்தால் அவர்களை தவிர்த்துவிட்டு பூஜையை செய்யக்கூடாது. அவர்களே விரும்பி பூஜையிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கண்ணனின் கதைகளை சொல்லி பாடல்களை கற்றுக்கொடுத்து ஆர்வத்தை தூண்டி தயார் செய்யவேண்டும்.
பக்க்ஷனங்களை பேசிக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு செய்யக்கூடாது.ஆனால் கண்ணணின் லீலைகளை பேசி சொல்லி பாடல்களை பாடி ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டு செய்யலாம்.
பக்க்ஷனங்களை செய்ய முடியாதபோது பால் தயிர் நெய் வெண்ணை அவல் இவற்றையோ இவற்றில் ஒன்றை மட்டுமோகூட நைவேத்யம் செய்தால் போதுமானது. அனால் கடையிலே பலகாரங்களை வாங்கி நைவேத்யம் செய்யக்கூடாது.
கடையிலே பலகாரங்களை வாங்கி ( விரதமெடுக்காதவர் பூஜை முடிந்தபிறகு) சாப்பிடலாம். பிறருக்கு (கடையில் வாங்கியது என சொல்லி) கொடுக்கலாம்.
ஆண்குழந்தைக்கு கிருஷ்ணனாக பெண்குழந்தைக்கு ராதையாக அலங்காரம் செய்யலாம். அலங்காரம் செய்வதற்காக குழந்தைகளை படுத்தி எடுக்கக்கூடாது. இந்நாளிலே (எந்நாளும்தான்) குழந்தைகளின் மகிழ்ச்சி மிக முக்கியம்.
கண்ணன் ராதை வேடமிட செயற்கையான ரசாயனங்களை கனமான ஆடைகளை தவிர்த்து இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது உத்தமம்.
பக்தி விரதம் பூஜை தானே முக்கியம். பக்க்ஷனங்கள் அவ்வளவு முக்கியமா? குழந்தையாக கண்ணனை கொண்டாடுவதால் குழந்தைகளுக்கு பிடித்தது என்பதால் பக்க்ஷனங்கள் முக்கியம்.
பால் தயிர் நெய் வெண்ணையை மிக முக்கியமாக சொல்கிறீர்களே ஏன் ? பசுமாடு கன்றுகள் என்றால் கோகுலகண்ணனுக்கு விருப்பம். மேலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் காலம்வரை ஆவினங்கள் பூஜிக்கப்படும். ஆவினங்கள் பூஜிக்கப்படும் வரை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் அதற்காக.
அவல் ஏன்? குசேலன் கிருஷ்ணனுக்கு வறுமையிலும் இயன்றதை கொடுத்தார்.இதுவும் கிருஷ்ணனின் லீலைகளிலே பிரசித்தியான சுவையான ஒன்று. குசேலன் பிரதிபலனையும் கோரவில்லை எதிர்பார்க்கவில்லை. அப்படி நாம் இருக்க.
பாதச்சுவடுகளை போடுவதேன்? கண்ணன் வெண்ணையை சாப்பிட்டு போனபிறகு சிந்திய வெண்ணையிலே பாதச்சுவடுகள் தெரியும் அதைப்பார்த்து கோகுலவாசிகள் மகிழ்வர். நம் உள்ளத்திலும் இல்லத்திலும் அம்மகிழ்ச்சி உண்டாக.
பாரிஜாதம் ஏன் விசேஷம் ? பாரிஜாதம் பற்றிய சுவையான கதை ஒன்று கண்ணனின் லீலைகளிலே பிரபல்யமாக இருக்கின்றது. மேலும் தேவலோக பாரிஜாதம் என்றும் இப்புஷ்பத்தை சிறப்பித்து கூறுவர். பூக்களை பறிக்கக்கூட மனம் வராத மெல்லிய இளகிய மனம் கொண்டவர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள். எக்காலத்திலும் இருப்பார்கள். அவர்கள் புஷ்பம் பறிக்காத காரணத்தால் பூஜை செய்ய முடியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக இப்புஷ்பம் தானாக முன்வந்து உதிர்கிறது. பாரிஜாத மரத்தின் கீழ் பகுதியை நாம் சுத்த பத்தமாக வைத்திருந்தால் போதும் . காலையிலே பூமியிலே இப்பூவானது விழுந்து படர்ந்திருக்கும். தானாகவே பூதேவியை அர்சித்தது போல . அதானால் கூட இப்பாரிஜாதத்தை கண்ணனுக்கு பிடித்திருக்கலாம்.
கண்ணன் குழந்தையாக தவழ்ந்து வருவாரா? நடந்து வருவாரா? நம்முடைய வீட்டு வாசலிலிருந்து பூஜை அறைக்கு கண்ணனின் பிஞ்சு பாதங்களை போட்டு ஆனந்தப்படுகிறோமே அப்பாதங்களை ஸ்ரீ பாதம் எனவும் கூறுவர். கிருஷ்ண ஜெயந்தியை ஸ்ரீ ஜெயந்தி எனவும் கொண்டாடுவோம். ஸ்ரீ எனில் லக்ஷ்மி . ஆதலால் லக்ஷ்மி நம் இல்லத்திற்கு எழுந்தருளும் நன்னாளாகவும் இந்நாள் இருக்கின்றது. லக்ஷ்மி இருக்குமிடத்தில் நாராயணனும் எழுந்தருள்வார்.
எந்த ஸ்லோகங்களை சொல்லவேண்டும்? இன்னதுதான் சொல்லவேண்டும் என்றில்லை, கிருஷ்ணாஷ்டகம் பாலமுகுந்தாஷ்டகம் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீமத் பாகவதம் பகவத்கீதை ஸ்ரீ கிருஷ்ணருடைய மந்திரங்கள் ஸ்லோகங்கள் இப்படியாக சமுத்திரத்திலே கொட்டிகிடக்கும் முத்துக்களிலே எதுவெல்லாம் நமக்கு குரு மூலமாக கிடைத்த சொத்தோ அவற்றை பாராயணம் செய்வது உத்தமம். தெரியாதவர்கள்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்றோ கிருஷ்ணா முகுந்தா முராரே என்றோ ஜபித்துக் கொண்டிருந்தாலோ கிருஷ்ணருடைய பாடல்களை (சாரீரம்,ஸ்வரம் எல்லாம் அவசியம் சரியாக இருக்கவேண்டும் என்பது முக்கியகில்லை) பக்தியோடு மனமுருகி ஆனந்தமாக பாடிக்கொண்டிருந்தாலோ மட்டும் கூட போதுமானது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மிகுபேர நவக்ரஹ ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்துவைக்க ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜை சந்தானகோபாலக்ருஷ்ண ஹோமம் செய்ய அனுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply