கிருஷ்ண ஜெயந்தியும் நவக்ரஹ தோஷமும் அஷ்டமியும் PART 3

art space pattern texture

அஷ்டமியிலே நற்காரியங்கள் செய்யலாமா? கூடாதா? நவக்ரஹ காரகத்துவங்கள் யாது? நவக்ரஹ தோஷங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் எவை? எளிய நவக்ரஹ பரிகாரம் எது? அறிந்துகொள்வோம் வாருங்கள்.

ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியும் ரோஹினி நக்ஷத்திரமும் வரும்நாள் கோகுலாஷ்டமி. கண்ணனுடைய திரு அவதாரம் நடந்ததால் அஷ்டமி திதிக்கு தோஷமில்லை. அவ்வஷ்டமியிலே அனைத்தையும் செய்யலாம் என்ற கருத்து நிறையபேரிடத்திலே சமீபகாலமாக ஏற்பட்டு இருக்கிறது. இது சரியா?

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டிலே வரக்கூடிய நாள் அமாவாசை. நேரெதிராக சமசப்தமத்திலே இருக்கும் நாள் பௌர்ணமி. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வர பதினைந்து நாள். பௌர்ணமியில் இருந்து அமாவாசை பதினைந்து நாள். இப்பதினைந்திலே எட்டு (அஷ்டமி) என்பது இப்படியுமல்லாமல் அப்படியுமல்லாமல் இரண்டிற்கும் நடுவே இரண்டும்கெட்டானாக இருக்கிறது.

சூரியன் தந்தை, சந்திரன் தாய், பூமி (பூமியிலே வாழும் நாம்) குழந்தை. தாய் தந்தைக்கு இடையிலே பிணக்கு ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்கும். அப்படியாக சூரிய சந்திர சஞ்சாரத்திலே ஏற்படும் இவ்வஷ்டமி நிகழ்வானது நம்முடைய மனநிலையிலும் உடல்நிலையிலும் சாதகமற்ற நிலையினை ஏற்படுத்தும்.

முக்கிய காரியங்களை ஆற்ற மனநிலையும் உடல்நிலையும் தெளிவாக கட்டுக்கோப்பாக இருக்கவேண்டியது அவசியம். எனவே அஷ்டமி திதியை சுபகாரியத்திற்கு விலக்கி வைத்தார்கள். இப்படியிருக்க கிருஷ்ணஜெயந்தியை காரணமாக கொண்டு அஷ்டமி அனைத்திற்கும் ஆகும் என்று கொள்ளக்கூடாது.

ஜென்மாஷ்டமியைக் கொண்டு அஷ்டமியையும் ஸ்ரீராமநவமியைக் கொண்டு நவமியையும் யுகாதியைக்கொண்டு பிரதமையையும் விநாயக சதுர்த்தியைக்கொண்டு சதுர்த்தியையும் முருகனைக்கொண்டு சஷ்டியையும் சிவராத்திரியைக் கொண்டு சதுர்த்தசியையும்

ஆடிப்பூரம் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டு ஆடிமாதத்தையும் விஜயதசமியைக் கொண்டு புரட்டாசியையும் ஹனுமத்ஜெயந்தியைக் கொண்டு மார்கழியையும் பங்குனி உத்திரத்தைக்கொண்டு பங்குனியையும்

இப்படியாக காரண காரியங்களை தேடிக் கண்டுபிடித்து நம்முடைய காரியங்களான திருமணம் வீடுகட்டுதல் கிரஹபிரவேசம் தொழில் வியாபாரம் என்பனவற்றையே செய்து கொண்டிருந்தால் சுயநலப்போக்கை குறைப்பது எப்படி? பற்றை துறப்பது எவ்வாறு? இறைவழிபாட்டை செய்வது எக்காலத்தில்?

நாமே இப்படி வழிபடவேண்டிய நாளையெல்லாம் மாதங்களையெல்லாம் வருமானத்திற்க் குண்டானதாக மாற்றிவிட்டால் அடுத்து வரக்கூடிய சந்ததிகளுக்கு விரதம் பூஜை பண்டிகை நோன்பு தேர் திருவிழா இவற்றிற்கெல்லாம் நாளேது? மாதமேது? இவற்றால் கிடைக்கும் குதூகலம் கொண்டாட்டம் அதுதரும் அமைதி ஆனந்தம் அளப்பரிய பேறுகளை பெருவதெவ்வாறு?

இவ்வழியிலே சிந்தித்து அஷ்டமி என்றாலே அது ஆலிலைக்கண்ணனையோ அஷ்டபைரவரையோ வழிபடவேண்டிய நாள் என்பதாக கடைப்பிடித்து கடைத்தேருவோம்.

ஜென்ம பத்திரிகை எனப்படும் ஜெனன ஜாதகத்திலே ஏற்பட்ட தோஷங்களின் விளைவை தாங்கிக்கொள்ள முடியாமலும் அத்தோஷங்களை போக்கிக்கொள்ளும் வழி அறியாமலும் அவதிப்படுபவர் அல்லலுருபவர் அவணியிலே ஏராளம்பேர் இருக்கின்றனர்.

சூரியன் பித்ருகாரகன் சந்திரன் மாத்ருகாரகன் பிறக்கும்போதே தாய் தந்தை சிறையில். அங்காரகன் சகோதரகாரகன் மூத்தவர்களாக பிறந்தோரில் பலராமன் தவிர ஏனையோர் கம்சனாலே கொல்லப்பட்டனர். புதன் மாதுலகாரகன் தாய்மாமன் கம்சனே ஜென்ம விரோதியாக ஆகிவிட்டான்.

(பெரும்பாலானவர்கள் அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காக வாழ்க்கைத்துணை உடன்பிறந்தோர் உறவினர் நண்பர் அவ்வளவு ஏன் பெற்றோர் பிள்ளைகளிடத்திலும் விரோதம் பாராட்டுகின்றனர். ஜென்மவிரோதி களாக அவர்களை கருதுகின்றனர். ஆனால் ஜென்மவிரோதி என்ற நிலை கம்சனுக்கு மட்டுமே பொருந்தும். ஜென்மம் எடுக்கும் முன்பே கருவாக இருக்கும்போதே கொல்லத்துடித்த ஜென்மவிரோதியாக இருந்தான்)

குரு, குருவிடத்திலே கல்வி வித்தை கற்கும் பேருகூட தாமதமாகவே கிடைத்தது. சுக்ரன் சுகாதிபதி நிரந்தரமாக ஒருவீட்டிலே ஏன் ஒரு ஊரிலே கூட வசிக்கமுடியவில்லை. நிறைய யுத்தங்கள் செய்யவேண்டியுருந்தது. சனி ஆயுட்காரகன் பிறந்தது முதல் நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையே இருந்தது. தர்மத்தை கடைபிடித்தும் வீண் பழி பாவங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. ராகு கேது பூதகியிடத்திலே விஷப்பாலை அருந்தியதிலிருந்து காளிங்க நாகத்தின் விஷம் வரைக்கும்,மேலும் பற்பல அசுரர்களை (தனக்காக அல்ல இத்தரணிக்காக) அழிக்க வேண்டியிருந்தது.

இப்படியிருக்க. நமக்கு நவக்ரஹங்களுமா (ஒன்பதும்) பாதகமாயிருக்கப் போகிறது? ஒன்றோ சிலவோ தோஷம் தரும் நிலையிலே இருக்கும். புண்ய காரியங்கள் செய்து புருஷோத்தமனை பூஜிக்க மா தவம் இருந்து மாதவனை வழிபட குறையொன்றுமில்லாமல் கோகுலாஷ்டமியை கொண்டாட இப்பிறவி தோஷம் மட்டுமல்லாமல் பல ஜென்ம பாவங்களும் மிச்ச சொச்சமில்லாமல் விலகும். இகபர சௌபாக்கியம் நமக்கு கிட்டும்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

கிருஷ்ண ஜெயந்தியின் மகிமைகளை அடுத்த பதிவிலும் தொடர்ந்து பார்ப்போம்.

ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மிகுபேர நவக்ரஹ ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்துவைக்க ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பூஜை சந்தானகோபாலக்ருஷ்ண ஹோமம் செய்ய அனுகவும்.

கிருஷ்ணஜெயந்தி பண்டிகையிலே பாதச்சுவடுகளை போடுவதேன்? கண்ணன் குழந்தையாக தவழ்ந்து வருவாரா? நடந்து வருவாரா? பாரிஜாதம் ஏன் விசேஷம் ? எந்த ஸ்லோகங்களை சொல்லவேண்டும்? அவல் ஏன்? பக்தி விரதம் பூஜை தானே முக்கியம். பக்க்ஷனங்கள் அவ்வளவு முக்கியமா? இக்கேள்விகளுக்கான விளக்கங்களையும், கிருஷ்ணஜெயந்தி வழிபாட்டிலே அவசியம் செய்யவேண்டியது எது? கட்டாயம் தவிர்க்கவேண்டியது எது? இவற்றையும் அடுத்த பதிவிலே அறிந்துகொள்வோம்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading