மனக்குறைகளை மாய்க்கும் மதுசூதனனை மகிழ்வித்து குழந்தை வரம் அருளும் கோபாலனை கொண்டாடி பாலாரிஷ்ட தோஷம் போக்கும் பார்த்தசாரதியை பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்.
எந்த ஒரு பூஜையை செய்ய வேண்டுமென்றாலும் கலசத்திலோ படத்திலோ விக்ரஹத்திலோ தெய்வத்தை எழுந்தருளுமாறு (ஆவாஹனம்) வேண்டி பூஜையை தொடங்குவோம். வரலக்ஷ்மி பூஜையிலே வாசலிலிருந்து அலங்கரித்த வரலக்ஷ்மி கலசத்தை பாடல்கள் பாடி பூஜைக்கு, பூஜையறைக்கு எழுந்தருள செய்வோம். மிக சிறப்பாக கோகுலாஷ்டமி பண்டிகையிலே நம்வீட்டு வாசலிலிருந்து குழந்தை கிருஷ்ணனை பூஜைக்கு, பூஜையறைக்கு அழைத்துச் செல்வதாக ஆலிலைக்கண்ணன் நடந்து வருவதாக மாக்கோலத்திலே திருப்பாதக் கமலங்களை வரைந்து பூஜையை ஆரம்பிக்கிறோம்
பெரும்பாலான பண்டிகைகள் காலையில் கொண்டாடக்கூடியதாக இருக்கும். பெயரிலேயே ராத்திரி இருக்கக்கூடிய நவராத்திரி பண்டிகை கூட மாலையிலே பூஜைகள் நடந்து இரவுக்குள்ளாக முடிந்துவிடும். வைகுண்ட ஏகாதசிக்கு இரவுமுழுக்க கண்விழித்தாலும் அதிகாலையிலே சொர்க்கவாசல் தரிசனம் விசேஷமானதாய் இருக்கும். மஹாசிவராத்திரிக்கும் இரவுமுழுக்க கண்விழித்தாலும் இரவிலே நான்கு ஜாம பூஜைகள் நடந்து மறுநாள் காலை பூஜை நிறைவுறும்.
விசேஷமாக ஜென்மாஷ்டமி பண்டிகையானது மாலையிலே இரவிலே குறிப்பாக நள்ளிரவிலே கொண்டாடக்கூடியதாக இருக்கிறது.
நம்மை பிறவி எனும் விடுதலை இல்லாத (ஒருபிறவி முடிந்தாலும் மறுபிறவி) சிறையிலிருந்து விடுவித்து நமக்கு வைகுண்டம் எனும் பேற்றை அருள சிறையிலே தோன்றினான் சின்னக் கண்ணன்.
எண்ணற்ற அசுரர்களை சம்ஹாரம் செய்கிறார் பால பருவத்திலேயே. எண்ணிப்பாருங்கள்… அசுரர்களை அழித்தது அவரைக் காத்துக்கொள்ளவா? அவனியைக் காக்கவல்லவா. ஒருவேளை அவ்வசுரர்கள் இப்போது இருந்தால் நம் கதியென்ன? மானுடர்களாய் இருக்கும் அரக்கர்களையே நம்மால் சமாளிக்க முடியவில்லையே, மஹாசக்தி கொண்ட அசுரர்களிடத்திலிருந்து எங்கனம் தப்புவோம்.
அப்போது வந்த முகுந்தன் இப்போது வந்து அசுரரை அழிக்க மாட்டாரா? என்ற கேள்வி எழலாம். கலியுகத்தின் கடைசியிலேயே கல்கி பகவானாக (நேரிடையாக/அவதாரமாக) வருவார். ஆக துவாபர யுகத்திலே உதித்த துவாரகா நாதன் இப்போது நாம் நல்வாழ்வு வாழ அப்போதே வழிவகுத்தார்.
கலியுகத்திலே யாரை வணங்கவேண்டும்? ஏன் பக்தி செய்யவேண்டும்? எப்படி பூஜை செய்யவேண்டும்? எதற்கு வழிபாடு செய்யவேண்டும்? என்ற கேள்விகளை கிளர்ச்சிகளை குழப்பங்களை சூழ்ச்சிகளை அறிவு வாளி கள் மே தாவி கள் உண்டாக்குவார்கள். பக்தர்கள் அதற்கு பணிந்துவிடவோ பயந்துவிடவோ கூடாது என்பதற்காக கிருஷ்ணாவதாரத்திலே பலவிடங்களிலே பற்பல லீலைகளை புரிகிறார். கீதையையும் உபதேசிக்கிறார் வாசுதேவன்.
இப்போது சிந்தித்து பார்ப்போம். இறை மறுப்பு பேசப்ப்படும் வரை கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இங்கே இயற்கை வளங்கள் பவித்ரமாக பத்திரமாக பயபக்தியோடு பாதுகாக்கப்பட்டன. மலைகள் தெய்வங்களாகவும் தெய்வங்களின் இருப்பிடமாகவும் பார்க்கப்பட்டன. அதானால் (மலையால்) மழைபொழிந்தது. விவசாயம் செழித்தது. இப்போது காணாமல் போனவர் பட்டியலிலே நிறைய மலைகள் இருக்கிறது,
நீர்நிலைகள், புண்ய தீர்த்தங்களாக தெய்வங்களாக கருதப்பட்டவரை அவை வற்றாமலும் அழியாமலும் மறையாமலும் இருந்தன. நம்மை வாழ்வித்தன. அன்னியர் படையெடுத்து அடிமைப்படுத்தி ஆட்சி செய்தபோதும் மலைகளோ நீர்நிலைகளோ அழிக்கப்படவில்லை. ஆறுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் மணல் சுரண்டப்படவில்லை கொள்ளையடிக்கப்படவில்லை. சுதந்திரத்தின்போது இருந்த பெரும்பாலான நீர்நிலைகள் கூட இன்றைக்கு இல்லை. இன்று பெரும்பாலான ஆறுகள் நீர்நிலைகள் வரைபடத்தில் மட்டுமே எஞ்சியுள்ளது.
குறைதீர்க்கும் கோகுலாஷ்டமி ஜெயம் தரும் ஜென்மாஷ்டமி சகலமும் அருளும் ஸ்ரீ ஜெயந்தி – என்று தலைப்பிட்டுவிட்டு மலைவளம் மழைவளம் மண்வளம் என்று எழுதிக்கொண்டு போகிறீரே ? இதற்கும் கிருஷ்ண ஜெயந்திக்கும் என்ன தொடர்பு? ஒருவேளை தலைப்பை மறந்து வேறு விஷயத்தை எழுதுகிறீரா? இப்படி எண்ணம் எழுகிறதா?
கிருஷ்ணாவதாரத்திலே நமக்காக புரிந்த பல லீலைகளிலே ஒரு இடத்திலே யமுனை நதியை ஆக்கிரமித்து மக்கள் தேவைகளுக்காக நீர் புழங்குவதையும் ஆவினங்கள் நீரருந்துவதையம் தடுத்த தன்னுடைய விஷத்தால் நதிக்கரையிலே மரங்களைக்கூட வளரவிடாமல் பட்டுப்போக வைத்த காளிங்கனை அடக்கி காளிங்க நர்த்தனம் பரிகிறார்.
ஒரு இடத்திலே பக்தர்களை மலைக்கு பூஜை செய்ய சொல்லி, அப்போது தேவேந்திரனை கொண்டு கிருஷ்ண லீலை புரிந்து கோவர்த்தன கிரிதாரி ஆகிறார் கோகுல கண்ணன். அதாவது இயற்கை வளங்களை அபகரிக்கக்கூடாது பாழ்படுத்தக்கூடாது நஞ்சாகக்கூடாது , இயற்கை வழிபாடும் இறைவனை போய்ச்சேரும். இறை வழிபாடோ இயற்கையை காக்கும். இயற்கையை அழித்தால் இறையருள் கிடைக்காது. இறைவனை (தர்மத்தை ஒழுக்கத்தை) மறுத்தால் இயற்கை வளம் இருக்காது, இயற்கை சீற்றம் உண்டாகும். என்பதை நமக்கு இதற்கு முன்னே வந்த துவாபர யுகத்திலேயே உணர்த்திவிட்டார்.
ஆகையால் நம்முடைய பண்டிகைகளை கொண்டாட்டமாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அப்பண்டிகையின் வரலாறு கதை பூஜைமுறை ஐதீகம் இப்படியாக சொல்லப் படக்கூடிய கருத்துகளையும் உட்பொருளையும் ஆராய்ந்து அறிந்து அர்த்தபுஷ்டியோடு அனுஷ்டிக்கவேண்டும்.
நம்முடைய தாயைப்போன்ற தமிழ் மொழியை நம் பாரத தேசத்தின் பூமியை மண்ணை எப்படி உயிருக்கு நிகராக பார்ப்போமோ காப்பாற்றுவோமோ அதுபோலவே நம்மண்ணில் நமக்கான வாழ்வாதாரமாக உள்ள மலைகளையும் நீர்நிலைகளையும் காப்போம்.
அதற்கான புத்தியையும் சக்தியையும் நம் பாரததேச மக்களுக்கு இன்னமும் இவ்வுலகத்தாருக்கு பரமாத்மாகவுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் அருளட்டும்.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பூஜை விரதம் வழிபாடு முக்கிய பிரார்த்தனை பலன்கள் பிரசாதங்கள் அவசியம் செய்யவேண்டியது கட்டாயம் தவிர்க்கவேண்டியது இப்படியான தகவல்களை தொடர்ந்து அடுத்த பதிவிலே பார்ப்போம்.
சந்தானகோபாலக்ருஷ்ண பூஜை ஹோமம் செய்துவைக்க அணுகவும்.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply