நாகங்களை நாம் ஏன் வணங்க வேண்டும்? ஏன் பூஜிக்க வேண்டும்? எதற்காக புற்றிலே பாலூற்ற வேண்டும்? அப்பாலை பாம்பு குடிக்குமா? நாகதோஷம் அங்காரக (செவ்வாய்) தோஷம் எதனால் ஏற்படுகிறது? சர்ப்பதோஷத்தின் விளைவு யாது? நாக/சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? பாம்பு பழி வாங்குமா? தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
பிரதிமாதம் வளர்பிறை சதுர்த்தி, சுக்ல சதுர்த்தி விரதம் என்று விரதநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதிலே ஆடிமாத வளர்பிறை சதுர்த்தி, ஐப்பசி மாத வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தி விநாயக சதுர்த்தி.
ஆடி 27 (12.08.2021) வியாழக்கிழமை நாகசதுர்த்தி. ஆடி 28 (13.08.2021) வெள்ளிக்கிழமை நாகபஞ்சமி. இந்நாளில் வீடுகளிலும் ஆலயங்களிலும் குறிப்பாக புற்றுள்ள கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடக்கும்.
ஆலயம் சென்று அங்குள்ள புற்றுகளுக்கு மஞ்சள் குங்குமமிட்டு அலங்கரித்து பூஜை நைவேத்யங்கள் செய்து பாலூற்றி பிரார்த்தனை செய்துவருவர்.
புற்று பூஜை முடிந்து வீடுவந்து வாசலுக்கும் பூஜை செய்து பிராசதம் வைத்து வழிபடுவர்.
இல்லத்திலே பூஜையறையில் மஞ்சளால் பாம்புருவம் வரைந்தோ வெள்ளி நாக ப்ரதிமைகளுக்கோ நாகராஜ பூஜை செய்வர்.
பூஜித்த நோன்புகயிற்றை அணிந்துகொள்ளும் சடங்கும் உண்டு.
வரலக்ஷ்மி நோன்பு, கேதாரகௌரி நோன்பு, காரடையான் நோன்புகளில் வரமாக கோரும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையே, இந்த நாகசதுர்த்தியிலே புற்று பூஜையின்போதும், இல்லத்தில் செய்யும் பூஜையிலும் நாகங்களிடம் பிராதனமாக வேண்டுவர். மேலும் தங்களுடை குழந்தைகள் குடும்ப நபர்களை எக்காலத்திலும் எக்காரணத்திற்காகவும் தீண்டக்கூடாது, சர்ப்பங்களான உங்களால் ஆபத்து வரக்கூடாது, நாக தோஷங்கள் இருந்தாலும் அது விலகவேண்டும் என்று பயபக்தியோடு வேண்டிக்கொள்வர்.
அதுபோலவே நாங்களோ எங்களது குடும்பத்தாரோ புற்றை இடிக்கவோ உங்கள் இனத்தவறை அடிக்கவோ துன்புறுத்தவோ கொல்லவோ மாட்டோம் என வாக்கும் அளிப்பர்.
சரி, நாகசதுர்த்தி வழிபாடு பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம். இனி மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக் குண்டான விளக்கத்தை பார்ப்போமா.
நாகங்களை நாம் ஏன் வணங்க வேண்டும்? ஏன் பூஜிக்க வேண்டும்? நாம் வணங்கும் பெரும்பாலான தெய்வங்களுடன் இந்த சர்ப்பங்களானது சேர்ந்து இருக்கிறது. முழுமுதற்கடவுள் விநாயகர் யஜ்ஞோபவீதமாக பாம்பை அணிந்துள்ளார். முருகப்பெருமானின் திருப்பாதக் கமலங்களுக்கு அருகில் எப்போதும் நாகமானது இருக்கும். உமாமகேஸ்வரனோ கழுத்திலேயே நாகாபரனமாக சர்பத்தை அணிந்திருப்பார். ஆதிபராசக்தியோ பாம்பை குடையாக கொண்டிருக்கிறாள். மகாவிஷ்ணுவோ ஆதிசேஷன் மீது சயனம் கொண்டிருக்கிறார். அஷ்ட நாகங்களோடு கருடாழ்வார் சேவை சாதிக்கிறார்.கண்ணனுடைய காளிங்க நர்த்தனம் பிரசித்தியானது.
நம்முடைய புராண இதிகாசங்களிலே நாகங்களுக்கு முக்கிய இடமுள்ளது. பாற்கடல் கடைய வாசுகி எனும் பாம்பை கயிராக கொள்வது, ஆலகாலவிஷம் வெளிப்படுவது ,சிவபெருமான் உண்டு திருநீலகண்டர் ஆவது, ஸ்வர்பானு எனும் அசுரன் அமிர்தம் பெற தேவ உருக்கொள்வது, சூரிய சந்திரரால் மோஹினியான விஷ்ணுவிற்கு அடையாளங் காட்டப்படுவது, அசுரன், ராகு கேதுவாக, பாம்பின் தலை உடலாக உருப்பெறுவது, சூரிய சந்திராளை பிடித்து க்ரஹனம் ஏற்படுத்துவது
இராமாயணத்திலே இந்திரஜித்தின் நாகாஸ்திர பிரயோகம், நாகாஸ்திர கட்டை விடுவிக்க ஹனுமான் சஞ்சீவி மலையை கொணர்வது, இளையபெருமாள் லக்ஷ்மனரே ஆதிசேஷனுடைய திரு அவாதரமாக சொல்லப்படுவது
மஹாபாரதத்திலே சர்ப்பயாகம் தொடங்கி பீமனின் நாகலோக பிரவேசம் விசேஷ சக்தி, கர்ணனின் நாகாஸ்திரம், பரிக்க்ஷித்தை பூநாகம் தீண்டும் வரையிலும் எவ்வளவோ இடங்களில் நாகங்களுடைய தொடர்பு வியாபித்திருக்கிறது.
சரி, இக்காலத்திற்கு வருவோம். நடைமுறையிலே அறிவியல் வளர்ச்சியடைந்த மருத்துவத் துறையிலே, நம்முடைய கோவில்களிலே நாகப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிற, பாம்பு பின்னிப்பிணைந்த உருவம் குறியீடாக கொள்ளப் பட்டிருக்கிறது. இக்குறியீட்டிற்கு பின்னே பல கதைகள் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவற்றிற்கும் பாம்புகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
பண்டைய நாகரீகம் கொண்ட கிரேக்கத்திலே பாம்புகளுக்கு மதிநுட்பம் குணப்படுத்துதல் உயிர் கொடுத்தல் உயிர்த்தெழுதல் இப்படியான சக்திகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
பிராணாயாமம் , குண்டலினி யோகம் இப்படியானவற்றிற்கு பாம்பு தொடர்பு படுத்தி சொல்லப்படுகிறது.
இப்படியாக கடவுளோடு இருத்தல், புராணங்களில் , இதிகாசங்களில் பிராதான இடம் பெறுதல் தியானம் யோகம் மூலம் சக்திபெறுதல் போன்றவற்றிற்கு குறியீடாக மாதிரியாக நாகங்கள் அமைந்திருக்கிறது. எனவே வழிபடத் தக்கதாகவும் பூஜிக்கத் தக்கதாகவும் நாகங்கள் இருக்கின்றன.
எதற்காக புற்றிலே பாலூற்ற வேண்டும்? அப்பாலை பாம்பு குடிக்குமா? நாகதோஷம் அங்காரக (செவ்வாய்) தோஷம் எதனால் ஏற்படுகிறது? சர்ப்பதோஷத்தின் விளைவு யாது? நாக/சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் உண்டா? பாம்பு பழி வாங்குமா? என்பதற்கான மேலும் சில விளக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொடரும் …
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்
Leave a Reply