க்ரஹண தோஷம் பித்ருதோஷம் புனர்பூதோஷம் பாபகத்தரி தோஷம் செவ்வாய்தோஷம் குருசண்டாள தோஷம் களத்திரதோஷம் 7 1/2, அஷ்டம சனி தோஷம் நாகதோஷம் தாரதோஷம் காலசர்ப்பதோஷம் இப்படியாக ஒன்பது க்ரஹங்கள் மூலம் ஏற்படக்கூடிய தோஷங்களால் அனுபவிக்கக்கூடிய கஷ்டங்கள் தடை தாமதங்கள் நிவர்த்தியாக நவக்ரஹங்களுடைய நல்லாசி கிடைக்கப்பெற, ஒரு சுலபமான எளிய வழியை பார்ப்போம். கணபதியும் கோள்களும் ….
விநாயகப் பெருமான் முழுமுதற்கடவுள் என்பதிலே , முதற் கடவுள் என்பதை உணர்ந்து எந்த ஒரு பூஜை நோன்பு விரதம் பண்டிகை வழிபாட்டின்போதும் முதலில் விநாயகரை வணங்குகிறோம். முழு முதற்கடவுள் என்பதிலே, அண்ட சராசரங்களையும் தன்னுள்ளே கொண்ட முழுவதுமான, முழுவதற்குமான கடவுள் என்பதும் அடங்கியிருக்கிறது.
இதையுணர்ந்து ஆனைமுகனை வழிபட, முழுவதற்குமான, முழுமையான வழிபாடாக அவ்வழிபாடு இருக்கும். அதாவது ஆரம்பத்திலே பூஜிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல, அனைத்திற்கும் பூஜிக்கப்பட வேண்டியவர் பிள்ளையார்.
‘வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப ‘ கோடி சூர்யனை போன்ற வினாயகனுக்குள் சூரியன் அடக்கம். மூஷிகவாகனனை சங்கடஹர சதுர்த்தி வ்ரதம் பூஜையால் மகிழ்வித்து பலம் பெற்றவர் சந்திரன். மேலும் ஸோமஸூர்யாக்னிலோசனாய (சூரிய சந்திர அக்னியாக) விக்னேஸ்வரன் இருக்கிறார். கணநாதனை பூஜித்தே க்ரஹ பதவி பெற்றவர் அங்காரகன் (செவ்வாய்). கல்விக்கடவுளாக சரஸ்வதிதேவி தக்ஷ்ணாமூர்த்தி ஹயக்ரீவர் இருப்பினும் சித்தி புத்தியாகிய ஞானத்தை, புத்திகாரகன் புதன் உடைய காரகத்துவத்தை தரக்கூடியவர் ஞானகணேசன். நமக்கு ஏற்படும் தடைகளை இடையூறுகளான விக்கினங்களை களைந்து நல்வழியைக் காட்டக்கூடிய குரு வாக விக்னராஜனாக, ஜேஷ்டராஜனாக (ஜேஷ்ட/பெரிய = குரு) விநாயகன் இருக்கிறார். களத்திரகாரகன் சுக்ரன் காரகத்துவமான திருமனப்பேற்றை வேண்டி பெண்கள் வழிபடக் கூடியவராகவும், பலகாரங்களை பக்க்ஷனாதிகளை விரும்பி ஏற்கக் கூடியவராகவும், ‘சுக்லாம் பரதரம் ‘ வெண்ணிற ஆடை, அணிந்தவராகவும் ‘சசிவர்ணம்’ பால்நிலா போல வெண்ணிறம் உடையவராகவும் கௌரீபுத்ரன் இருக்கிறார். சனி பிடிக்காத (சனியை கண்டால் பிடிக்காத அல்ல, சனிக்கு பிடிக்காத அல்ல, சனியால் பிடிபடாத ) கடவுளாக கஜானனன் இருக்கிறார். ராகு எதையும் பெரிதுபடுத்துபவர் பெரிய பானைவயிறு பெரிய உருவம் கொண்டவராக ஜேஷ்டராஜன் இருக்கிறார். கேது பலவண்ணம் பல்துறை ஞானம் பல்பொருள் இப்படியாகயிருக்க தேவ மிருக பூதகன அம்சமாக கணநாதன் இருக்கிறார். மேலும் ராகு கேது சர்ப்ப க்ரஹங்கள் ‘நாகராஜ யஜ்ஞோபவீதவதே’ என நாகத்தை அணிந்தவராக மகேஷ்வரபுத்ரன் இருக்கிறார்.
‘ஒன்பது கோளும் ஒன்றாய்க்காண பிள்ளையார்பட்டி’ வரவேண்டும். வலது தொடையில் செவ்வாயும், இடது தொடையில் கேதுவும், வலது கீழ் கையில் புதனும், இடது கீழ் கையில் சுக்ரனும், வலது மேல் கையில் சனியும், இடது மேல் கையில் ராகுவும், நாபியில் (தொப்புள்) சந்திரனும், நெற்றியில் சூரியனும், சிரசில் (உச்சந்தலை) குருவும் இப்படியாக நவக்ரஹங்களும் மஹாகணபதிக்குள் அடக்கம்.
அனுதினமும் ஆனைமுகனை வழிபட ஒன்பது கோள்களினால் வரும் தீங்கனைத்தும் அகன்று விலகி ஆனந்தமான நல்வாழ்வு கிட்டும்.
‘சுழலும் கோள்கள் அவன்சொல் கேட்கும் ‘ ‘ஆனைமுகனை தொழுதால் நவக்ரஹங்களும் மகிழும் ‘ ‘நவக்ரஹ நாயகன் கணபதியே ‘ ‘நவசக்தி விநாயகர்’ நம்மெல்லோருக்கும் அருளட்டும் .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply