வாஸ்து விதிகள் கட்டிடத்திற்கா? மனை/பூமிக்கா? எங்கெல்லாம் மனை வாங்கக்கூடாது?

lord ganesha figurine

வாஸ்துவும் மனையும்

வீடு/கட்டிடம் வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட வேண்டியது முக்கியமா? அவ்வீடு அமைந்துள்ள மனை/பூமி தோஷமற்றதாக இருக்கவேண்டியது முக்கியமா? வீடு எப்படி கட்டவேண்டும் என்பதைப்போல மனை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் வாஸ்துவில் விதிகள் இருக்கிறதா? வாஸ்துவில் மனை அமைப்பை பற்றிய சில பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்வோம்.

‘சுவற்றை வைத்தே சித்திரம்’ என்பார்கள், அதாவது சித்திரத்திற்கு சுவர் ஆதாரம். அச்சுவற்றிற்கே/வீட்டிற்கே பூமி ஆதாரமாக உள்ளது. அந்த பூமியானது தோஷமற்றதாக பூரணமானதாக இருக்கவேண்டியது அத்தியாவசியம்.

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ அதுபோல மனை அமைவதும் இறைவன் கொடுக்கும் வரமே.

ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மிகச்சரியாக வாஸ்துபடி வீடு கட்டினாலும், வீடு கட்டப்பட்ட மனையிலே குற்றம் குறை இருந்தால் அவ்வீட்டிற்கு, வீட்டில் வசிப்போருக்கு வாஸ்து பலமோ வளமான வாழ்வோ சாத்தியமாகாது.

மனை தோஷமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் வாஸ்து சாஸ்திரப்படி மிகச்சரியாக வீடு கட்டமுடியாது. ஒருவேளை மிகுந்த பிரயாசைப்பட்டு மிக கவனமாக ஒவ்வொன்றையும் கவனித்து பெரியோர் அறிவுரைப்படி நிபுணரின் ஆலோசனைப்படி வீடு கட்டப்பட்டால், மனை தோஷத்தால் ஏற்படவேண்டிய பிரச்சனையின் தீவிரம் குறையும். அதாவது தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும்.

இப்படியாக நம்முடைய வளமான நல்வாழ்விற்கு வீட்டிற்கு ஆதாரமாய் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மனையை சரியாக தேர்ந்த்தெடுத்து வாங்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

எந்த மனையையெல்லாம் வாங்கக்கூடாது – கோவில் சொத்துக்களாக இருக்கும் மனையை வாங்கக்கூடாது. கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கும் மனை வாங்கக்கூடாது.

மயானத்திற்கு (சுடுகாடு/இடுகாடு) அருகாமையிலிருக்கும் மனையை வாங்கக்கூடாது.மயானப்புகை வரும்படியான தூரத்திலே இருக்கும் மனையை வாங்கக்கூடாது. சுடுகாட்டில் சடலம் எரியக்கூடியதை பார்க்கும் படியான அமைப்பிலுள்ள மனையை வாங்கக்கூடாது.

தொழிற்சாலைக்கு அருகிலுள்ள மனையை வாங்கக்கூடாது. தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகை துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளில் மனையை வாங்கக்கூடாது.

நெடுஞ்சாலையை ஒட்டியோ அருகிலோ மனையை வாங்கக்கூடாது. தொடர்வண்டி தடம் (தண்டவாளம்) அருகில் மனையை வாங்கக்கூடாது.

LAST BUT NOT LEAST நீர்நிலையை வற்றவைத்து ஆக்கிரமித்து ஏற்படுத்தப்பட்ட மனையை வாங்கக்கூடாது. நீர்வழித்தடங்களில் இருக்கும் மனையை வாங்கக்கூடாது.ஏரிக்கரை ஆற்றங்கரையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மனையை வாங்கக் கூடாது. நீர்நிலைக்கு அருகாமையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட மனையை வாங்கக்கூடாது.

மிக மிக முக்கியமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தோ, குறைந்த விலைக்கு விற்கும்படியாக செய்தோ ஏற்படுத்தப்பட்ட மனையை வாங்கக்கூடாது. வாங்கவே கூடாது. கட்டாயம் வாங்ககூடாது.

மூன்று கோணங்கள் கொண்ட முக்கோண மனை நான்கு கோணங்கள் கொண்ட சதுர நீள்சதுர மனை ஐங்கோண மனை அறுகோண மனை வட்ட வடிவ மனை இப்படியாக மனையின் வடிவங்களைக் கொண்டு வாங்கத் தகுந்தது எது? வாங்கத் தகாதது எது? என்பன போன்ற முக்கியமான தகவல்களை அடுத்தடுத்த பதிவிகளிலே பார்ப்போம்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்.

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading