பெருமாள் கோவிலில் நவக்ரஹங்கள் ஏன் இல்லை ?

gray concrete buildings under blue and white cloudy sky

சிவாலயம் அருகில் இல்லாத அல்லது செல்லாத, செல்லமுடியாத நபர்கள் நவக்ரஹ தோஷத்தை போக்கிக்கொள்ள வழி யாது?

நவக்ரஹ தோஷம் அகல, யோகம் கிடைக்க, செய்யவேண்டிய க்ரஹ ஷாந்தி ப்ரீதி வழிபாடு பரிகாரங்களுக்கும், பெருமாள் கோவிலுக்கும் சம்மந்தம் இல்லையா?

காக்கும் கடவுளான விஷ்ணு, க்ரஹங்கள் படுத்தும் பாட்டிலிருந்து, தரும் துன்பத்திலிருந்து நம்மை காக்க மாட்டாரா? பெருமாள் கோவில்களில் பெரும்பாலும் நவக்ரஹ சன்னதி இல்லையே ஏன்? வாருங்கள் சிந்திப்போம்.

நமது சனாதன தர்மத்திலே காணாபத்யம் சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் என ஷண்மதங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவற்றிலே காணாபத்யம் எனும் கணபதிக்கான கோவில், சைவம் எனும் சிவாலயம், சாக்தம் எனும் அம்பாள் கோவில், கௌமாரம் எனும் முருகர் கோவில்களில் நவக்ரஹ சன்னதிகளும் வழிபாடுகளும் பிரசித்தியாக இருக்கிறது.

சௌரம் என்பது சூரியனை வழிபடக்கூடியது. நவக்ரஹ நாயகனாக சூரியனே இருக்கிறார்.

வைஷ்ணவம் எனும் பெருமாள் கோவில்களில் பெரும்பாலும் நவக்ரஹ சன்னதிகள் இல்லை. (சில கோவில்களில் உண்டு) மேலும் தீவிரமாக நாராயணனை வழிபடுபவர்கள் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ வேறு தெய்வங்களையோ க்ரஹங்களையோ பெரும்பாலும் வழிபடுவதில்லை.

இதனாலும் இதையொட்டி ஆகமவிதி போன்ற காரணங்களாலும் பெரும்பாலான வைணவ ஸ்தலங்களிலே நவக்ரஹ சன்னதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் கலியுகக் கடவுளான காக்கும் தெய்வமான ஸ்ரீமந்நாராயணனை வழிபட நவக்ரஹ தோஷமானது பகலவனைக் கண்ட இருள்போல விலகும்.

விஷ்ணுவிற்கும் வைணவ ஸ்தலத்திற்கும், நவக்ரஹங்களுக்கும் உண்டான சம்மந்தம் பற்றியும், அனைத்துவிதமான தடை தாமதங்கள் பினி பிரச்சனைகள் விலகவும் தாரித்ரிய நிலை விலகி தன்யனாகவும், நவக்ரஹ தோஷம் அகலவும், ஏராளமான அம்சங்கள் தாராளமாக பெருமாள் கோவிலில் அருளப்பட்டிருப்பதையும் தெரிந்து கொள்வோம்.

மகாவிஷ்ணு உடைய விசேஷ அவதாரங்கள் பலவற்றுள் தசாவதாரம் ப்ரசித்தியானது. தசாவதாரங்களில் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு க்ரஹமானது சொல்லப்படுகிறது. அதாவது (குறிப்பிட்ட ஒரு க்ரஹ அம்சமாக ஸ்ரீஹரி அவதரித்தார் என்று எண்ணிவிடக்கூடாது) புருஷோத்தமனுக்குள் ஈரேழு பதினான்கு லோகங்களும் அடக்கம்.

மத்ஸ்யாவதாரம் – கேது , கூர்மாவதாரம் – சனி , வராஹாவதாரம் – ராகு , நரசிம்மாவதாரம் – செவ்வாய் , வாமனாவதாரம் – குரு , பரசுராமாவதாரம் – சுக்ரன் , ராமாவதாரம் – சூரியன் , கிருஷ்ணாவதாரம் – சந்திரன் , கல்கியவதாரம் – புதன் .

தீராத நாகதோஷம் கால சர்ப்பதோஷம் இத்யாதிகள், நாகராஜன் ஆதிசேஷன் மீது சயனம் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதனை வழிபட தீரும்.

பக்க்ஷிராஜன் கருடனை (பெரிய திருவடி) வாகனமாக கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசனை தரிசித்தாலே பக்க்ஷிதோஷம் நாகதோஷம் அகலும்.

‘அசாத்ய சாதக ஸ்வாமி’யான ஹனுமனுடைய (சிறிய திருவடி) புஜத்திலும் ஹ்ருதயத்திலும் எப்போதும் வீற்றிருக்கும் ஸ்ரீராமனை வழிபட இப்பிறவி (ஜனனஜாதக) தோஷம் மட்டுமல்லாமல் பலபிறவி தோஷமும் பறந்தோடும்.

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி தாயாரை ஹ்ருதயத்திலே கொண்ட ஸ்ரீநிவாசனை சேவித்து லக்ஷ்மி கடாக்க்ஷம் கிடைக்கப் பெற்றால்

நம்முடைய பலஜென்ம பாவ வினைகள் காரணமாக ஜனன ஜாதகத்திலே தோஷங்கள் ஏற்பட்டு தரித்திர நிலை பீடை திருமணத்தடை புத்திரப்பேரின்மை பொருளாதார பின்னடைவு கடன் நோய் பகை வழக்கு கண்டங்கள் விபத்துகள் வீன்விரயங்கள், அனைத்துமிருந்தும் அனுபவிக்க முடியாமை மனநிம்மதியின்மை அனைத்தும் அகன்று திருமகளின் அருட்பார்வையால் சகல சம்பத்துக்களும் சௌபாக்கியங்களும் பெற்றுய்யலாம் என்பது நிச்சயம்.

பிரத்யட்ச தெய்வமாக உள்ள சூரிய பகவானை, சூரியநாராயணன் என்றே சொல்கிறோம். மாலைநேரத்திலே லக்ஷ்மிநாராயணரே சூரியனாக இருக்கிறார்.

குருவாக லக்ஷ்மி ஹயக்ரீவர் இருக்கிறார்.

சிவாலயம் அருகில் இல்லாத அல்லது செல்லாத, செல்லமுடியாத நபர்கள் வைணவ ஸ்தல வழிபாடு மூலம் நவக்ரஹ தோஷம் மட்டுமல்லாது நானிலத்தின் அனைத்து தோஷங்களிலிருந்தும் விடுபட்டு லக்ஷ்மி கடாக்க்ஷம் பெறுவோம்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading