சர்வரோக நிவாரணி என்பதுபோல, சகல கிரஹ தோஷங்களுக்கும் தீர்வைத் தரக்கூடிய விரதம் எது? வழிபாடு யாது? அறிந்து ஆனந்தம் கொள்வோம் வாருங்கள்.
நவக்ரஹங்களில் முழுமையான சுபரான குரு புத்ரகாரகன், தன காரகன். இவர் ஜனன ஜாதகத்திலே தோஷம் அடைந்திருந்தால் குழந்தைகள் விஷயத்திலும் பொருளாதாரத்திலும் பிரச்சனைகள் ஏற்படும். செவ்வாய் தோஷமிருந்தால் திருமணத்தடை கடன் சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனை ஏற்படும். இப்படியாக ஒவ்வொரு க்ரஹத்திற்கும் சில காரகத்துவங்கள் இருக்கின்றது. க்ரஹங்கள் தோஷமடைந்தால் அக்காரக பலன்கள் தடைபடுகிறது அல்லது அதிலே இன்னல் உண்டாகிறது.
சாதகபலன் தரவேண்டிய க்ரஹம் பலமாகவும் பாதகம் செய்யவேண்டிய க்ரஹம் பலம் குறைந்தும் இருக்கவேண்டியது அவசியம். எனவே சூரியன் முதல் கேது வரை அனைத்து க்ரஹங்களுக்கும் உண்டான ஷாந்தி பரிகாரங்களை செய்ய வேண்டியுள்ளது.
ஒரு க்ரஹத்தை ப்ரீதி செய்யவே நிறைய ஸ்ரத்தை பொருள் மற்றும் நேரம் தேவைப்படுகிறது. இப்படியிருக்க ஒன்பது க்ரஹங்களை ப்ரீத்தி செய்ய எவ்வளவு நேரம் ஒதுக்கி ப்ரயாணங்கள் செய்து பொருள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
வசதி படைத்தவர்க்கு இது சாத்தியமாகும் ஆனால் வசதியற்றவர், வறியவர் என்செய்வர்? எல்லோர்க்கும் இயன்ற எளிய வழி ஏதாவது இருக்கிறதா?
ஆம். இருக்கின்றது. இராமாயணத்தில் இருந்து இவ்வழி நமக்கு தெரிய வருகின்றது. இராமாயணத்திலிருந்து என்றால், இராவனேஸ்வரன் மூலமாக…
இராம+அயனம் (இராமனின் வழி) இராமாயணம். அப்படியிருக்க இராவணன் மூலமாக தெரிந்து கொள்வதா? என்ற வினா மனதிலே எழலாம்.
நல்லோரிடத்திலே இருக்கும் சிறு குற்றத்தை தீமையை எப்படி எடுத்துக்கொள்ளக் கூடாதோ, அதுபோல தீயோரிடத்திலே சிறிதளவு நல்லதிருந்தாலும் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இராவனேஸ்வரன் சிறந்த சிவபக்தன்.தன்னுடைய தவம், பக்தியாலும் இன்னிசையாலும் (வீணாமிர்தம்) நிறைய வரங்களை பெற்றான். நவக்ரஹங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தீய எண்ணம் செயல் மூலம் அழிந்தான் என்றாலும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது…
சிவபெருமானை பக்தி செய்ய பிரார்த்திக்க பூஜிக்க நற்றுணையாவது நமசிவாயவே என சரணடைய, ஸோமாவார வ்ரதம் , கார்த்திகை ஸோமாவார வ்ரதம் , அஷ்டமி வ்ரதம் , பிரதோஷ வ்ரதம் , சிவராத்திரி வ்ரதம் ,மஹா சிவராத்திரி வ்ரதம் , திருவாதிரை வ்ரதம் ,ஆருத்ரா தரிசனம் , கேதார கௌரி வ்ரதம், பங்குனி உத்திரம் இவற்றுள் இயன்றதை பய பக்தியோடு பக்தி ஸ்ரத்தையோடு ஆத்மார்த்தமாக முழுமனதுடன் நம்பிக்கையுடன் கடைபிடிக்க…
நவக்ரஹ தோஷங்கள் அனைத்தும் அகன்று நன்மை தரும் யோகங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று இவ்வையகத்திலே வாழ்வாங்கு வாழலாம்.
நண்பகலிலே ஈஸ்வரன் சூரியனாக இருக்கிறார். திங்களை முடியில் சூடி சந்திரசேகரனாக அருள்கிறார். மேலும் சிவாலயங்களிலே எம்பெருமானை த்யானித்தவாறு மூலவருக்கு நேரெதிரிலே வலப்புறத்திலே சூரியனும் இடப்புறத்திலே சந்திரனும் இருப்பார்கள். செவ்வாய் ரௌத்ரம் போர் இவற்றிற்கு உண்டானவராய் இருக்கிறார், சிவபெருமான் ருத்ர தாண்டவம் புரியக்கூடியவராகவும் சம்ஹார மூர்த்தியாகவும் இருக்கிறார். புதன் பரிகார ஸ்தலாமாக மதுரை உள்ளது, மீனாக்க்ஷி சுந்தரேஸ்வரர். தென்முகக்கடவுள் கடவுள் தக்ஷ்ணாமூர்த்தி மௌனகுரு வாக உள்ளார். சுக்ரன் களத்திர காரகன். பெண் க்ரஹம், சிவபெருமான் உமைக்கு இடபாகம் கொடுத்து அம்மையப்பனாய் விளங்குகிறார். ஆயுட்காரகன் சனி, காலனை சம்ஹாரம் செய்து காலசம்ஹார மூர்த்தியாயும் , எளிமையாக மயானத்திலே இருப்பவராகவும் ஈஸ்வரன் இருக்கிறார். ராகு மற்றும் கேது சர்ப்ப க்ரஹங்கள் விஷ க்ரஹங்கள், சர்பத்தை கழுத்திலே மாலையாக அணிந்தவராகவும் ஆலகால விஷத்தை கண்டத்திலே அடக்கியவராகவும் திருநீலகண்டர் இருக்கிறார்.
இப்படியாக நவக்ரஹங்களும் எம்பெருமான் ஈஸ்வரனுக்குள் அடக்கம். ஆலகால நஞ்சிலிருந்து அகில உலகத்தையும் காத்து வானவர்க்கு அமிர்தம் அருளியதைப்போல நமக்கு ஏற்பட்ட நவக்ரஹ தோஷங்கள் அனைத்தையும் அகற்றி சகல சௌபாக்கியங்களையும் அருள்வார் சர்வேஸ்வரன்.
எல்லாம் அவன் செயல் , அவனின்றி ஓரணுவும் அசையாது , ஈஸ்வரோ ரக்ஷது , தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி , நற்றுணையாவது நமசிவாயவே .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply