ஆடிப்பூர வழிபாட்டு முறை எது? திருவாடிப்பூரத்தின் ஐதீகம் யாது? பிரார்த்தனைகள் என்னென்ன?கிடைக்கும் பலன்கள் எப்படிப்பட்டவை? ஆடிப்பூர மகத்துவங்கள் எவையெவை? ஆடிப்பூர சந்தேகமும் விளக்கமும் . இவ்வாண்டு திரு ஆடிப்பூரம் என்றைக்கு வருகிறது? இவற்றை அறிந்துகொள்ள அக்கறையோடு வாருங்கள் ஆவலோடு வாசியுங்கள்.
நமக்கு பூமியையும் அதில் வாழ சக்தியையும் தருகின்ற பூமாதேவியின் அம்சமான ஆண்டாள் தாயாரும் சக்திக்கு இருப்பிடமான பார்வதிதேவியும் அவதரித்த திருநாளாக ஆடிப்பூர நன்னாள் இருக்கிறது.
ஆடிமாதம் அம்பாள் மாதம் என்றே சொல்லப்படுகிறது. இம்மாதம் முழுக்க அம்பிகைக்குண்டான விசேஷங்கள் ஏராளம். களத்திர காரகனாகவும் சுக சௌபாக்கியங்களை தரக்கூடியவராகவும் இருக்கின்ற சுக்கிரனுடைய பூர நக்க்ஷத்ரம் ஆடிமாதத்தில் ஆடிப்பூரம்.
சில விசேஷங்கள் சிவாலயத்தில் விமர்சையாக கொண்டாடப் படுவாதகவும் , சில விசேஷங்கள் வைணவ ஸ்தலங்களில் சிறப்பாக கொண்டாடப் படுவாதகவும் அமைந்திருக்கும். இவ்வாடிப்பூரமானது சைவ வைணவ ஸ்தலங்கள் இரண்டிலுமே கோலாகலமாக கொண்டாடப்படுவதாக இருக்கிறது.
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையை மார்கழி மாதத்தில் மட்டுமே செப்பவேண்டும் என்பாதாக பெரும்பாலானவர் எண்ணுகின்றனர். ஆனால் அப்படி கிடையாது வருடம் முழுவதும் வாழ்நாள் முழுவதும் திருப்பாவையை பாடவேண்டும்.
அதுபோல மார்கழி மாதம் மட்டும் அதிகாலையில் எழுந்தால் போதுமானது என நினைத்து மார்கழி முடிந்ததும் தாமதமாக எழுகின்றனர். அதுவும் கூடாது. அனுதினமும் அதிகாலையில் எழவேண்டும்.
கீதை மூலமாக கிருஷ்ணன் நமக்கு செய்யத்தக்கன தகாதன உபதேசித்ததை போல திருப்பாவை மூலம் கோதை நமக்கு செய்யத்தக்கன தகாதனவற்றை உபதேசித்திருக்கிறார்.
கோதை அவதரித்த இவ்வாடிப்பூர திருநாளிலிருந்து நமக்கும் பிறர்க்கும் பயனுள்ளவற்றை செய்து பாதகமானதை தவிர்த்து சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளின் அருளுக்கு பாத்திரமாவோம்.
இந்நாளிலே அம்பிகைக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்து புதுப்புடவை சாற்றி கண்ணாடி வளையல்களை மாலையாக சாற்றி இவ்வளையல்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து சர்க்கரைப் பொங்கல் பால்பாயசம் பக்க்ஷணங்கள் பலவிதமான கலவை சாதங்கள் (சித்ரான்னம்) நைவேத்யம் செய்து வழிபடவேண்டும்.
அம்பாளின் சொரூபமாக இருக்கும் பெண்மணிகளுக்கு, அம்பிகைக்கு சாற்றப்பட்ட வளையல்களை பிரசாதமாக கொடுப்பது இவ்வாடிப்பூரத்தின் சிறப்பு.
வளையல் சாற்றுதல் அதைப்பெற்று அணிந்து கொள்ளுதல் இதற்காக ஒரு பண்டிகையா? சாதாரண கண்ணாடி வளையலுக்கு அப்படியென்ன சிறப்பு? என்றெண்ணி ( நிறைய பேருடைய எண்ணம் கேள்வி) ஆராய்ந்து பார்த்தோமேயானால், இச்சடங்கிற்கு பின்னே இருக்கும் அறிய சூக்க்ஷுமம் நமக்கு தெரியவரும்.
கன்னிப் பெண்கள் கால்கொலுசு வளையல் கழுத்துச்சங்கிலி மூக்குத்தி கம்மல் நெற்றியிலே குங்குமம் அணிந்து கொள்வதிலும், இவற்றோடு சேர்த்து சுமங்கலிப் பெண்கள் நெற்றி வகிட்டிலே குங்குமம் மெட்டி அணிந்து கொள்வதிலும் அறிவுப்பூர்வமான (அறிவியல் பூரவமான ஆராய்ச்சிப் பூர்வமான) அறிய பல இரகசியங்கள் இருக்கிறது.
வளர்ந்த மேலைநாட்டிலே வசிப்பவர் உடல்ரீதியாக நோய்வாய்ப் படுவதைக் காட்டிலும் மனரீதியான நோய்க்கு அதிகம் ஆளாகிறார்கள். ஆனால் பாக்கியம் செய்து பாரத தேசத்திலே பிறந்த நாம் உடல்ரீதியாகவும் குறிப்பாக மனரீதியாகவும் பலமாகவும் நலமாகவும் இருக்கிறோம். அதற்கு நம் முன்னோர் நமக்கு அருளிச்செய்த உணவு ஆடை அணிகலன் அலங்காரம் பழக்க வழக்கம் பண்பாடு கலாச்சாரம் இவை முழுமுதற் காரனாமாயிருக்கிறது.
அப்படியாக அம்பாளின் ப்ரசாதமான இவ்வளையல்களை அணிந்து கொள்ளும்போது உடல்ரீதியாக சில நன்மைகளும் அதைக்காட்டிலும் மனரீதியாக பல நனமைகளும் கிடைக்கும். உதாரணமாக மிக விசேஷமாக கோலாகலமாக பல தாய்மார்கள் ஒன்றுகூடி தங்களுடைய மகளுக்கே வளைகாப்பு செய்வதாக மனதார நினைத்து செய்வது, அதிலும் வேத மந்திரங்கள் முழங்க புனிதமான திருக் கோவில்களிலே செய்வது, அதையும் கூட்டுப் பிரார்த்தனையாக செய்வது இவ்வாடிப்பூர வளைகாப்பு வைபவங்கள். இதன் பலனாக தங்களுடை இல்லத்திலும் இப்படியான வளைகாப்பு நிச்சயமாக நடக்கும் என்ற நம்பிக்கை மணமான பெண்ணுக்கும் தாய்க்கும் கிடைக்கும்.
மனரீதியான சங்கல்பத்திற்கு மனோபலத்திற்கு இருக்கும் சக்தி இவ்வுலகிலே வேறெதற்கும் இல்லை. மேலும் வாயால் பேசுவதை விட, காதால் கேட்பதைவிட, கண்ணால் பார்ப்பதற்கு விசேஷ பலம். SARVENDRIYANAM NAYANAM PRADHANAM ஆக, குதூகலமாக கொண்டாட்டமாக நடத்தப்படும் வளைகாப்பை, அதிலும் சர்வலோக நாயகியான அம்பிகைக்கே நடக்கும் வளைகாப்பை கண்ணார காணும்போது அக்காட்சி மனதிலே பதிந்து மணமான ஸ்திரீக்கு கர்ப்பஸ்திரீ ஆகும் யோகத்தை தருகின்றது.
இவ்வாடிப்பூரத்தின் அதில் நடத்தப்படும் வளைகாப்பின் மகத்துவத்தை இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வளைகாப்பு என்ற எந்த பெயரிலேயே அது இருக்கின்றது. அதாவது காப்பு என்றால் காப்பது. இந்த வளையல் ஸ்திரீயின் கர்பத்தை காக்கும். வளைகாப்பு நடத்த மேற்கொள்ளப்படும் பூஜை மந்திரங்கள் சடங்குகள் ஸ்திரீயையும் கர்பத்தையும் காக்கும்.
ஆடிப்பூர நாள் – ஆடி 26, 11.08.2021 புதன்கிழமை திரு ஆடிப்பூரம்
ஆடிப்பூர அன்று செய்யவேண்டியது – அதிகாலை எழுந்து தலைக்கு ஸ்நானம் செய்து வீட்டிலே விளக்கேற்றி நிதயபடி பூஜைகளை செய்து திருப்பாவை சொல்லி ஆண்டாள் தாயார், அம்பிகைக்கு விசேஷ பூஜைகள் செய்யவேண்டும்.
வைணவ ஸ்தலம் சென்று ஆண்டாள் தாயாருக்கு திருமஞ்சனம் விசேஷ பூஜைகளில் கைங்கர்யம் செய்து வழிபட்டு வருவது.
சிவாலயம் சென்று அம்பிகைக்கு அபிஷேகம் விசேஷ பூஜைகளில் கைங்கர்யம் செய்து கண்ணாடி வளையல்களை மாலையாகவோ சரமாகவோ தாராளமாக ( எல்லோர்க்கும் கிடைக்கும் பொருட்டு) கொடுத்து வழிபட்டு வருவது.
அக்கண்ணாடி வளையல்களை பிரசாதமாக தரக்கூடிய சமயத்திலே ஆலயம் சென்று அதைப் பெற்று மகளுக்கும் மருமகளுக்கும் கொடுத்து தானும் அணிந்து கொள்ளவேண்டும். அக்கம் பக்கத்தவர்க்கும், வேண்டுபவர்க்கும் தாராளமாக கொடுக்கலாம்.
ஆலயம் செல்ல முடியாத போது இல்லத்திலேயே வளையல்களை பூஜையில் வைத்து அணிந்து கொள்ளலாம்.
மஞ்சள் குங்குமம் வளையல் கண்ணாடி சீப்பு தாலி சரடு வெற்றிலை பாக்கு பழங்கள் புஷ்பம் புடவை இரவிக்கை இவற்றை சாக்க்ஷாத் அம்பிகையின் சொரூபமான பெண்மணிகளுக்கு கன்னிப்பெண்களுக்கு கொடுக்கலாம். சுமங்கலி பூஜை செய்யலாம்.
சந்ததி தழைக்க வீட்டிலே புத்திரப்பேறு உண்டாக அம்பாளுக்கு மடியிலே பயறு கட்டி பிரார்த்தித்து ப்ராசாதமாக பெரும் வேண்டுதலும் இருக்கிறது.
ஆடிப்பூர பிரார்த்தனையும் பலன்களும் – கன்னிப் பெண்களுக்கு விவாஹம், மணமான பெண்களுக்கு புத்திரப்பேறு, தீர்க்க சுமங்கலி பாக்கியம், தம்பதிகள் அன்யோன்யம், குடும்ப ஒற்றுமை, லக்ஷ்மி கடாக்க்ஷம் மற்றும் சகல சௌபாக்கியங்களையும் பிரார்த்தித்து பலனாகப் பெறக்கூடிய திருநாள் ஆடிப்பூர நன்னாள்.
மிக முக்கியமாக பிள்ளைப்பேறு என்றாலே, பெரும்பாலும் அறுவைசிகிச்சை (CESAREAN) என்றாகிவரும் இக்காலத்திலும் ஆடிப்பூர நன்னாளிலே அம்பிகைக்கு வளைகாப்பு செய்து பிரார்த்தித்துக் கொண்டால் சுகப்பிரசவம் நடக்குமென்பது நம்பிக்கை.
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply