அற்புதமான ஆடிப் பெருக்கு

body of water between mountain formation

ஆடி18ஆம் பெருக்கு வழிபாட்டு முறை, ஆடிமாதத்தில் புதியன தொடங்கலாமா? ப்ரார்த்தனை மூலம் கிடைக்கும் பலன்கள், இவ்வாண்டு ஆடிப்பெருக்கு மகத்துவம் மேலும் பல நல்ல தகவல்களை பார்ப்போம்.

விநாயக சதுர்த்தி கருட பஞ்சமி ரத சப்தமி ஜன்மாஷ்டமி ஸ்ரீராம நவமி விஜய தசமி நரக சதுர்த்தசி (தீபாவளி)

சதுர்த்தி சஷ்டி அஷ்டமி ஏகாதசி(வைகுண்ட ஏகாதசி) த்ரயோதசி (பிரதோஷம்) சதுர்த்தசி (கிருஷ்ண பக்க்ஷ சதுர்த்தசி சிவராத்திரி) சித்ரா பௌர்ணமி ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை (மஹாளய அமாவாசை) தை அமாவாசை

திங்கள் (கார்த்திகை சோமவாரம்) ஆடி செவ்வாய் ஆடிவெள்ளி தைவெள்ளி புரட்டாசி சனி ஆவணி ஞாயிறு

மஹாபரணி ஆடி கிருத்திகை கார்த்திகை கிருத்திகை திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) தைப்பூசம் மாசிமகம் ஆடிப்பூரம் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் மார்கழி கேட்டை (ஜேஷ்டாபிஷேகம்) மூலம் (ஹனுமத் ஜெயந்தி) திருவோணம் (ஓணம் பண்டிகை)

மேற்கண்டவாறு திதி வார நக்ஷத்திர அடிப்படையிலேயே நம்முடை பெரும்பாலான பண்டிகைகளும் விரதங்களும் வரும். எண்ணிக்கை அடிப்படையிலே வரக்கூடிய விசேஷம் ஆடி 18 ஆம் பெருக்கு .

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களில் நம்மை தாங்கக்கூடிய பூமியை நாம் தினந்தோறும் வழிபடவேண்டும் பூமித்தாய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

கொஞ்ச காலத்திற்கு முன்புவரை சிறுவர்கள் தான்யங்கள் பக்ஷணங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பூமியிலே சிந்திவிட்டாலோ விழுந்துவிட்டாலோ அது பூமாதேவிக்கு என்று சொல்லக்கூடிய ஒரு பழக்கம் இருந்தது. ஆதலால் பூமித்தாய்க்கு அனுதினமும் நன்றி சொல்லவேண்டும். வீடு கட்டிடங்கள் கட்டத் தொடங்கும்போது பூமிபூஜை செய்துவிட்டால் மட்டும் போதாது.

பஞ்ச பூதங்களில் அக்னிபகவானை திருக்கார்த்திகை தீபம் சொக்கப்பனை போகி இப்படியாகவும் தினசரி வீட்டிலும் கோவிலிலும் விளக்கேற்றும்போதும் வழிபடுகிறோம் இதோடு சேர்த்து ஒவ்வொரு நாளும் பொழுதும் அடுப்பு மூட்டும்போதும் அக்னிபகவானை வழிபட்டு அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் .

பஞ்ச பூதங்களில் காற்றை பிராணாயாமம் மூலமும் குளிர்ந்த காற்றை பிராணவாயுவை நமக்கு தருகின்ற வ்ருக்க்ஷங்களை ஸ்தல வ்ருக்க்ஷங்களை பூஜிப்பதன் மூலமும் வழிபடுகிறோம். ஹோமங்கள் யாகங்கள் செய்தும் காற்று மண்டலத்தை சுத்தம் செய்கிறோம்.

பஞ்ச பூதங்களில் ஆகாயத்தை தினசரி சூர்ய நமஸ்காரம் குறிப்பிட்ட நாட்களில் சந்திர தரிசனம் க்ரஹனம் விட்டபிறகு திருமணத்திலே அருந்ததி பார்த்தல் இடி இடிக்கும்போது அர்ஜுனா பீமா என்றும் பொதுவாக ஆகாயத்தை பார்த்து வழிபடுவதும் எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக் கொள்வான் என்றும் வழிபடுகிறோம்.

பஞ்ச பூதங்களில் நீரை ஏனயதை காட்டிலும் மிக அதிகமாக வழிபட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலே ஆடிப்பெருக்கு விசேஷமானது. நதிகளிலே புதுவெள்ளம் பெருக்கெடுத்து வருவதை வரவேற்கும் விதமாயும் கொண்டாடும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும் ஆடிப்பெருக்கு விழா அமைந்திருக்கின்றது.

நதிக்கரைகளில்தான் நாகரீகம் தோன்றியது என்று வரலாறு சொல்கிறது. நதிகளே நாட்டின் ஜீவநாடியாக இருக்கின்றது. ‘நீரின்றி அமையாது உலகு’ தண்ணீரே இல்லாத தேசங்கள் உலகத்திலே இருக்கின்றது . மூன்றாம் உலகப்போர்கூட நீருக்காகத்தான் உண்டாகுமென்று கூறுகிறார்கள். ஆனால் நம்முடைய பாரத தேசம் உலகின் புண்ணிய பூமி கர்ம பூமி. வற்றாத ஜீவா நதிகள் இங்குண்டு.

உலகிலே எண்ணற்ற தொழில்கள் இருந்தாலும் விவசாயமே முதன்மையான முக்கியமான தொழிலாக இருக்கின்றது . அப்படிப்பட்ட நம் பிராணனுக்கு ஆதாரமாய் இருக்கின்ற விவசாயத்திற்கு ஆதாரமாய் இருப்பது தண்ணீர் . அந்த தண்ணீர் நமக்கு வந்து சேரக்கூடியதாக இந்த ஆடி 18 ஆம் பேருக்கு அமைகின்றது.

உத்தராயன புன்யகால ஆரம்பமான தைத்திருநாளிலே அறுவடை செய்ய வேண்டுமென்றால் தக்ஷ்ணாயன புண்யகால ஆரம்பமான ஆடி மாதத்திலே விதைவிதைக்க வேண்டும். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ இதற்கு இறைவன் நமக்கு அளிக்கக்கூடிய கொடையாக வெள்ளம் பெருக்கெடுத்து வரக்கூடிய ஆடிப்பெருக்கு இருக்கின்றது.

ஜோதிட ரீதியாக பார்த்தோமேயானால் ஆடிப்பெருக்கு அன்றைக்கு ரோஹினி நக்க்ஷத்ரம். இது சந்திரனுடை நக்க்ஷத்ரம் அதிலும் சந்திரன் ரிஷப ராசியிலே உச்சம் பெறுகிறார் நவக்ரஹங்களிலே சந்திரன் நீர்க்கோள் கடகம் ஜலராசி. மேலும் சூரியனை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் ஏற்படுகிறது. ஜல ராசியான கடக ராசியிலே சூரியன் சஞ்சரிக்கின்ற மாதமே ஆடிமாதம். பஞ்சபூதங்களிலே நீருக்கு நன்றி செலுத்தவேண்டிய பூஜிக்க கொண்டாடவேண்டிய இவாடிப்பெருக்கு ஜல சம்பந்தமான இவ்வளவு கூடுதல் சிறப்பை பெறுவது விசேஷம். அதோடு ஆடிப்பெருக்கு ஆடி செவ்வாய் அன்று வருவது மேலும் சிறப்பு.

பொதுவாக ஆடி மாதத்திலே சுபகாரியங்களை செய்வது கிடையாது.

ஆடிப்பெருக்கு அன்று தொடங்கக்கூடிய காரியங்கள் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். எனவே ஆடிமாதத்தை முன்னிட்டு தள்ளிபோட வேண்டிய காரியங்களை தாமதிக்க அவாகாசமில்லாதவர்க்கு உடனடியாக செய்தாகவேண்டிய நிலையிலுள்ளோர்க்கு இந்நாள் ஒரு வாய்ப்பாக வரப்ப்ரசாதமாக அமைகிறது.

ஆடிப்பெருக்கு வழிபாட்டு முறை : எல்லாவிதமான பண்டிகை விரதநாள் சடங்குகள் இவற்றில் ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பத்திற்கென்று வழி வழியாக முன்னோர்கள் கடைபிடித்துவந்த வழிமுறை இருக்கும். அதை அறிந்து கடைபிடிப்பதே சரி.

பொதுவாக ஆடிப்பெருக்கு ஆடி 18 ( 03.08.2021 ) அன்று அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து (தாய்மார்கள் மஞ்சள்பூசி குளிக்க வேண்டியது) வீட்டிலே விளக்கேற்றி நித்யபடி பூஜைகளை செய்து பிறகு இனிப்பு பக்க்ஷனங்கள் பாயசம் வடை எலுமிச்சை சாதம் புளியோதரை எள்ளோரை தேங்காய் சாதம் தயிர்சாதம் (சித்ரான்னங்கள்) இவைகளை மடியோடு பய பக்தியோடு பரிசுத்தமாக தயார்செய்து , பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு குடும்ப நபர்கள் அனைவரும் அருகிலுள்ள ஆற்றங்கரை (இல்லையேல் ஏதாவதொரு நீர்நிலைக்கு ) சென்று (கரையிலோ அருகிலோ உள்ளஆலய தரிசனம் வழிபாடு செய்வர்)

நதியை புண்ய தீர்த்தத்தை பூஜித்து கொண்டுசென்ற சித்ரான்னங்களை நைவேத்யம் செய்து புதுவெள்ளம் பெருக்கெடுத்து வரக்கூடிய ஆடிப்பெருக்கை போல வாழ்க்கையிலே அனைத்து மங்களங்களும் பெருகவேண்டும் இவ்வாண்டு மழைவளம் நீர்வளம் சிறப்பாக இருக்க வேண்டும் விவசாயம் செழிக்கவேண்டும் கன்னிப்பெண்களுக்கு விவாஹம் ஆகவேண்டும் விவாஹமானவர்க்கு நற்புத்திரப்பேறு கிடைக்கவேண்டும் என்று ப்ரார்த்தித்து விளக்குகளை நதியிலே விட்டு ( மங்கள பொருட்களையும் விடுவர்) அனைவரும் கூடி சித்ரான்ன பிரசாதங்களை மகிழ்ச்சியோடு உண்டு அளவளாவி மனநிறைவோடு வீடு வந்து சேர்வர்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

3 responses to “அற்புதமான ஆடிப் பெருக்கு”

  1. […] வரக்கூடிய ஆடிப்பெருக்கு https://beemarajaiyer.com/2021/07/23/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae… இம்மாதத்திலே வருகிறது. அதாவது […]

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading