செவ்வாய் தோஷ பாதிப்பு எது? செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? செவ்வாய் தோஷம் ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் என்ன? பரிகாரங்கள் என்ன???

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? ஜாதகத்திலே செவ்வாய் எங்கே எப்படி இருந்தால் தோஷம்? இதற்கு பரிகாரம் என்ன? செவ்வாய் தோஷத்திற்கு விதிவிலக்குகள் உள்ளதா? செவ்வாய் தோஷம் கொண்ட வரனை திருமணம் செய்து கொள்ளலாமா? செவ்வாய் தோஷம் இருக்கக்கூடியவருக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? புத்திரப் பேறு கிடைக்குமா? சொத்துக்கள் அமையுமா? உத்தியோகம் கிடைக்குமா? ஆரோக்கியம் இருக்குமா? செவ்வாய் தோஷம் இருக்கக்கூடியவருக்கு, செவ்வாய் தோஷம் இருக்கக்கூடிய வரனை தான் திருமணம் செய்து வைக்க வேண்டுமா? செவ்வாய் தோஷம் இருக்கக்கூடியவர்கள் பழகுவதற்கு நட்புக் கொள்வதற்கு ஏற்றவர்களா? இவர்களை விட்டு விலக வேண்டுமா? தவிர்க்க வேண்டுமா? இவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உண்டாகுமா?

இப்படியாக செவ்வாய் தோஷம் பற்றி நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கிறது. ஜாதகம் பார்க்க வரும்போதும், அலைபேசியில் பேசும்போதும் கேட்கிறார்கள். அதனால் செவ்வாய் தோஷம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள, மேற்கண்ட கேள்விகளுக்கு உண்டான விளக்கங்களை தர இருக்கிறோம். இந்த பதிவில் செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி செயல்படுவார்கள்? இவர்களுடைய குணாதிசயம், நடத்தை எப்படி இருக்கும்? செவ்வாய் தோஷம் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன? இப்படியானவற்றை பார்ப்போம்.

நம்முடைய வழக்கப்படி உதாரணங்களைக் கொண்டு சூட்சுமங்களை புரிய வைப்போம். இரகசியங்களை உணர்த்துவோம். ஜோதிட தகவல்களைக் கொண்டு குறியீடுகள் வழியாக விளக்கங்கள் தருவோம். அப்படியாக…. ஜோதிட சாஸ்திரத்திலே செவ்வாயை பூமி காரகனாக சொல்லி இருக்கிறார்கள். இதை எடுத்துக் கொண்டு செவ்வாய் தோஷம் கொண்டவர்களுடைய குணாதிசயத்தை சொல்ல தொடங்குகிறோம். நாம் பூமியை பார்க்கும்போது அது எப்படிப்பட்ட தன்மை கொண்டது என்பதை அறிய இயலாது. அதாவது மிகவும் கடினமான பூமியா? மிருதுவான பூமியா? அந்த பூமியிலே பெரிய கட்டிடங்களை எழுப்பலாமா, கூடாதா? என்பதை பார்க்கும் போதே தெரிந்து கொள்ள முடியாது. மண் பரிசோதனைகள் போன்ற விஷயங்களை செய்து தான் இதை புரிந்து கொள்ள முடியும். விவசாயிகளும் கூட தங்களுடைய அனுபவ அறிவின் படி, இந்த பூமியிலே இந்த தானியம் தான் விளையும். இந்த பயிர் தான் இங்கே இட முடியும். இதையிட முடியாது, இந்த பூமி பயிரிடுவதற்கே தகுதியற்றது என்பதாக தெரிந்து விவசாயம் செய்வார்கள்.

இப்படி செவ்வாய் தோஷம் கொண்டவர்களை அனுபவஸ்தர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். நல்ல ஒரு அனுபவம் அறிவு திறமை முக்கியமாக பக்குவம் பொறுமை இருக்கக்கூடியவர்கள் தான் செவ்வாய் தோஷம் கொண்டவர்களோடு ஒத்துப்போக முடியும். மற்றவர்களால் ஒத்துப்போக முடியாது. மற்றவர்களால் செவ்வாய் தோஷம் கொண்டவருக்கு பிரச்சனையோ அல்லது செவ்வாய் தோஷம் இருக்கக்கூடியவர்களால் மற்றவர்களுக்கு தீங்கோ பிரச்சனையோ உண்டாகும்.

பூமியின் உள்ளே (கீழே) தண்ணீர் இருக்கிறதா? நிலக்கரி இருக்கிறதா? தங்கம் இருக்கிறதா? வைரம் இருக்கிறதா அல்லது அந்த பூமி புதைகுழியா? அந்த பூமிக்குள்ளே நச்சு தன்மை வாய்ந்த வாயுக்கள் இருக்கிறதா? இப்படியான விஷயத்தை மேலே பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. இதுபோல செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படியே நேர் மாறாக கூட இருக்கலாம்.

தண்ணீருக்காக கிணறு எடுக்க அந்த பூமியை தோண்ட போனால் அதிலிருந்து விஷவாயு கசிந்து ஆபத்து ஏற்படலாம். அல்லது ஒரு வீட்டை கட்டுவதற்காக கடகால் போட பூமியை தோண்டினால் புதையல் கிடைக்கலாம். வேறு பணிகளுக்காக தோண்டும் போது தங்கமே அகப்படலாம். வைரமே கண்டெடுக்கப்படலாம். இப்படியாக…. எப்படி வேண்டுமானாலும் செவ்வாய் தோஷம் கொண்ட நபர் இருக்கலாம். அதனால் செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்று தெரிந்து விட்டால், பெற்றோர் உடன் பிறந்தோர் அவரை மிகச் சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். பக்குவமாக அவரை கையாள வேண்டும். இது பெற்றோருடைய மூத்தவர்களுடைய பொறுப்பு. பூமிகாரகனாக செவ்வாய் இருக்கிறார், இதைக்கொண்டு செவ்வாய் தோஷத்தினுடைய கெடுபலனையோ நற்பலனையோ, இயல்பையோ தன்மையோ புரிந்து கொள்வதற்காக இப்போது சில உதாரணங்களை சொன்னோம்.

செவ்வாய் கால புருஷ தத்துவத்தினுடைய முதல் வீடான மேஷ ராசியிலே ஆட்சி பெறக் கூடியவராகவும் கால புருஷ தத்துவத்தினுடைய அஷ்டமஸ்தானமான, ஆயுள்தனமான (விருச்சிக ராசி) எட்டாம் இடத்திலே ஆட்சி பெறக் கூடியவராகவும், நான்காம் இடத்திலே (கடக ராசி) நீச்சமும், பத்தாம் இடத்திலே (மகர ராசி) உச்சமும் பெறக்கூடியவராக இருக்கிறார். இதிலிருந்து சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் என்று சொல்லக்கூடியது தலை, அதனால் தான் தலையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். புலிக்கு வாலாக இருப்பதை விட, எலிக்கு தலையாக இருப்பதே மேல் என்ற எண்ணம் கொண்டவர்களாக செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் இருப்பார்கள். இவர்களால் இறங்கிப் போக முடியாது, விட்டுக்கொடுத்து போக முடியாது, அடங்க முடியாது, சகிப்புத்தன்மை குறைவாகவே இருக்கும். அல்லது இருக்காது தன்னைக் கொண்டே எல்லாம் நடக்க வேண்டும். தான் முக்கியமானவராய் இருக்க வேண்டும். தனக்குரிய மரியாதை கிடைக்க வேண்டும் . என்ற ஒரு எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அது கிடைக்காத போது எந்த ஒரு நிலையிலும் வெளிவருவதற்கு தயாராக இருப்பார்கள். பெரிய பதவியாக இருந்தாலும் அப்படியே தூக்கிப்போட்டு வெளியே வருவார்கள். பெரிய சொத்தாக இருந்தாலும் துச்சமாக மதித்து வெளியே வருவார்கள். சுய கௌரவத்தை அதிகம் பார்க்கக் கூடியவர்களாக, தன்மானம் ரோஷம் கொண்டவர்களாக, இவர்கள் இருப்பார்கள்.

அதேசமயம் ஜாதகத்திலே லக்னம் பலம் இழந்து, யோகத்தை விட தோஷங்கள் அதிகமாக இருந்து, தசா புத்தி, கோச்சார சூழ்நிலை பாதகமாக இருந்தால்…. தான் என்று அகந்தை கொண்டவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, எவரையும் மதிக்காதவர்களாக, பிறரை துச்சமாக நடத்தக் கூடியவர்களாக, சுயநலம் அதிகம் கொண்டவர்களாக, குறுக்கு வழியிலே உயர்வதற்கு தயாராக இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இதை புரிந்து கொண்டு இவர்களை நாம் அணுகும் போது, இவர்களோடு சேர்ந்து இயங்கும் போது பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஏன் இதை சொல்கிறோம் என்றால் செவ்வாய் தோஷம் கொண்டவர்களோடு சீக்கிரமாக சண்டையோ வாக்குவாதமோ பகையோ விரோதமோ, வழக்கோ ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. திருமண வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்படக்கூடிய அம்சம் இருக்கிறது. அதனால் இவர்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் தோஷம் கொண்டவர்களும், இந்த விஷயங்களை தெரிந்து, சுய பரிசோதனை செய்தோ வேண்டியவர்கள் எடுத்து சொல்லும்போதோ, நல்லதை வளர்க்க தீயதை குறைக்க பாடுபட வேண்டும். அதற்குண்டான பரிகாரங்களையும் தீர்வுகளையும் நாம் கடைசியாக சொல்லுவோம்.

அடுத்து கால புருஷ தத்துவத்தினுடைய எட்டாம் இடத்திலே செவ்வாய் ஆட்சி பெறுகிறார். இது விருச்சிக ராசி, மறைவிடம் என்று சொல்லப்படுகிறது, மர்மஸ்தானம் என்று சொல்லப்படுகிறது, மறைபொருளை சொல்லக்கூடியது, பால் உறுப்புகளை சொல்லக்கூடியது. அதனால் செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் லக்னம் பலம் பெற்று நல்ல திசை நடந்து நல்ல கிரக யோகம் இருந்தால் மறைபொருள் ஆராய்ச்சி என்ற விஷயத்திற்குள்ளே போவார்கள். மருத்துவம் பயில்வார்கள். நோயை கண்டுபிடிக்க கூடியதிலே தேர்ந்த மருத்துவராக, தீர்வை தரக்கூடியவராக, அறுவை சிகிச்சை செய்து நோயை போக்க கூடியவராக, ஆராய்ச்சிகள் செய்து அறிவியல் சம்பந்தமான விஷயங்கள் மருத்துவம் சம்பந்தமான விஷயங்களை கண்டுபிடிக்க கூடியவர்களாக, பழங்காலத்து விஷயங்களை கண்டுபிடிக்க கூடியவராக, புதைபொருள் ஆராய்ச்சியாளராக ஆர்க்கியாலஜிஸ்ட் ஆக, ஆன்மீக சம்பந்தமான தேடல் கொண்டவர்களாக, தியானம் உடற்பயிற்சி யோகாசனம் போன்ற விஷயங்களில் மிகவும் கரை கண்டவர்களாக இருப்பார்கள்.

லக்னாதிபதி பலமிழந்து தசாநாதன் சாதகமாக இல்லாத போது, ஜாதகத்திலே யோகத்தை விட அவயோகம் அதிகமாக இருக்கும் போது…. தீய வழியிலே பொருளை ஈட்டக் கூடியவர்களாக, அதற்காக எந்த ஒரு பாதகமும் செய்யக்கூடியவர்களாக, பழி பாவத்திற்கு அஞ்சாதவர்களாக, நினைத்துக்கூட பார்க்க முடியாத வேலைகளை செய்து பொருளை ஈட்ட கூடியவர்களாக, பிறர் பொருளை அபகரிக்க கூடியவர்களாக, தண்டனைக்கு அஞ்சாதவர்களாக, குறுக்கு வழியை இலக்காகக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதுபோல சில கிரக இணைவுகள் ஜாதகத்தில் ஏற்பட்டு, மேற்சொன்னவாறு தோஷம் அதிகமாக இருந்து, லக்னபலம் தசாநாதன் பலம் இல்லாதவர்களாக இருக்கும்போது தீய பழக்கங்கள் மது போதை வஸ்துக்கள் லாகிரி வஸ்துக்கள் இவற்றிலே அதிக நாட்டம் கொண்டவர்களாக, இதற்காக எதையும் செய்ய தயங்காதவர்களாக, எப்படிப்பட்ட தீங்கையும் செய்யக் கூடியவர்களாக போவதற்கு இடம் உண்டு. அதுபோல ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அதிகமான காமத்திலே ஈடுபடக் கூடியவர்களாக, அதன் காரணமாக குற்றம் இழைக்கக் கூடியவர்களாக, தீங்கு புரியக்கூடியவர்களாக, தன்னுடைய வாழ்க்கையையோ பிறருடைய வாழ்க்கையையோ கெடுக்கக் கூடியவர்களாக, கெடுத்துக் கொள்ளக் கூடியவர்களாக ஆவார்கள்.

அடுத்து கடக ராசியிலே நீச்சம் பெறக்கூடியவராக இந்த செவ்வாய் இருக்கிறார். கடகம் என்று சொல்லக்கூடியது சந்திரனுடைய ஆட்சி வீடு சந்திரன் மனோகாரகன் கால புருஷ தத்துவத்தினுடைய நான்காம் இடமாக கடகம் வருகிறது. கடத்திலே புனர்பூசத்தினுடைய ஒரு பாதம் (குருவுடைய நட்சத்திரத்தின் ஒரு பாதம்) மட்டுமே இருக்கிறது. மற்றபடி சனியுடைய புதனுடைய நட்சத்திரங்கள் இருக்கிறது. அதனால் சீக்கிரமாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். எமோஷனல் கேரக்டர்களாக இருப்பார்கள். உணர்ச்சிவசப்படும்போது தன் நிலை மறக்கக் கூடியவர்களாக தன்னிலை இழக்க கூடியவர்களாக இருப்பார்கள். அதிகம் கற்பனை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். கற்பனையிலே வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். பிறரை நம்பி ஏமாந்து போகக் கூடியவர்களாக, சொத்து சுகங்களை பிறர் அபகரிப்பதற்கு வாய்ப்பாக இவர்கள் ஏமாந்து போகக் கூடியவர்களாக இருப்பது, காதல் வயப்பட்டு விரும்பி அதனால் ஏமாற்றமடைந்து விரக்தி வெறுப்பு சோகம் எதிர்மறையான எண்ணங்கள் என்ற ஒரு நிலைக்குப் போகக் கூடியவர்களாக, உறவினர்கள் உடன் பிறந்தவர்களிடத்திலே அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவது, இப்படி புத்தியை உபயோகிக்காமல் உணர்வுபூர்வமாக செயல்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டு, தன்னுடைய சொத்தை தன்னுடைய தொழில் வியாபாரத்தை நம்பிக்கையை இழக்க கூடியவர்களாக போவது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் கொஞ்சமும் பின் விளைவு பற்றி சிந்திக்காது கோபத்திலே முடிவெடுப்பது, பேசி விடுவது சண்டையிடுவது அடித்து விடுவது கைகலப்பிலே ஈடுபடுவது, குற்றங்களை புரிந்து விடுவது, சபித்து விடுவது வாய் தகறாரு கைத்தகராறு முற்றி பெரிய பிரச்சினையிலே போய் விடுவது இப்படியான பாதகமான நிலையை கூட பெறுவார்கள். பிறருடைய சொத்துக்களுக்கு பினாமிகளாக இருப்பது, இப்படியான நிலையும் கூட இவர்களுக்கு உண்டாகும். மனசாட்சியே கொஞ்சம் கூட இல்லையா? ஒரு முறை கூட சிந்தித்து பார்க்க கூடாதா? என்று பிறர் நினைக்கக் கூடிய அளவிற்கு, கேட்கக் கூடிய அளவிற்கு, ஈரமற்ற நெஞ்சம் கொண்டவர்களாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு.

அடுத்து மகர ராசியிலே உச்ச பலம் பெறக்கூடியவர் செவ்வாய், கால புருஷ தத்துவத்தினுடைய பத்தாமிடம் மகர ராசி. இங்கே செவ்வாய் சூரியனுடைய நட்சத்திரத்திலும் சந்திரன் நட்சத்திரத்திலும் தன்னுடைய சொந்த நட்சத்திரமான அவிட்டத்திலும் சஞ்சரிப்பார். உத்திராடம் இரண்டு மூன்று நான்கு பாதங்கள் திருவோண 4 பாதங்கள் அவிட்டம் ஒன்று இரண்டு பாதங்கள் இந்த மகரத்தில் வரும். இந்த குறிப்பிட்ட ராசியிலே எந்த நிலையிலே உச்சம் பெறுகிறார் என்பதெல்லாம் இன்னமும் உள்ளே சென்று பார்க்கக் கூடியது. பொதுவாக மகரத்திலே உச்சம் பெறுகிறார். இது கால புருஷ தத்துவத்தின் பத்தாம் வீடு, அதனால் மிகப்பெரிய பதவி கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது. அதாவது செவ்வாய் தோஷம் இருந்து, லக்னாதிபன் பலமாய் இருந்து, நல்ல தசை நடந்து, பத்தாமிடமும் வலுத்திருந்தால், பிறர் ஏற்றுக் கொள்ள தயங்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்புகளையும் கூட ஏற்றுக் கொள்வார்கள். காவல்துறையில் உயர்ந்த அதிகாரியாக இருந்து மிகப்பெரிய பிரச்சனைகளை கையாளக்கூடிய மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். தீயணைப்பு துறையில் பணிக்கு சேர்ந்து பல உயிர்களை காக்கக்கூடிய முடிவுகள் எடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். ராணுவத்திலே பணியிலே சேர்ந்து பல உயிர்கள் எடுக்கக்கூடியதோ, பல உயிர்களை காக்கக்கூடியதோ, மிகப்பெரிய அபாய நிலையில் இருந்து ஆபத்துகளில் இருந்து நிறைய பேரை காக்க வேண்டிய பொறுப்பையும் துணிந்து எடுத்துக் கொள்வார்கள். ஒரு நீதிபதியாக இருந்து ஒருவருக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு எழுதக்கூடிய மன உரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படி செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் சாதாரணமானவர்களால் செய்ய முடியாத, மன உறுதி கொண்டவர்களால் மட்டுமே செய்ய முடிந்த பெரிய பொறுப்புகளை வகிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அரசாங்க பதவிகளிலே உயர் பதவி, ஒரு மாவட்டத்திற்கு ஆட்சியாளராக இருந்து அங்கு நடக்கக்கூடிய இயற்கை சீற்றங்களோ , தீவிரவாத செயல்களோ, பெரிய குற்றங்களோ, பெரிய நோய் தொற்றோ அதற்கு எதிராக செயல்படுவது, இப்படியான விஷயங்களை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அரசியலிலே நிறைய எதிர்ப்புகளை கஷ்டங்களை எல்லாம் கடந்து பெரிய மந்திரி பிரதானிகளாக வந்து ஆட்சி அதிகாரம் செய்யக் கூடியவர்களாக வருவார்கள்.

செவ்வாய் தோஷம் இருந்து லக்னாதிபன் பலம் இழந்து தசாநாதன் பாதகம் செய்யக்கூடியவராய் இருந்து கோச்சாரம் கைவிடும் போது, அப்படிப்பட்டவர்கள் தன்னுடைய பதவியை கொண்டு தவறு செய்யக் கூடியவர்களாக, மிகப் பெரிய ஊழல் புரியக்கூடியவர்களாக, அவர்கள் செய்த தவறுகளுக்கு எல்லாம் பல ஆயுள் தண்டனையை ஒன்றாக சேர்த்து பல நூறு முறை தூக்கிலே போட வேண்டிய தண்டனை கொடுக்கக்கூடிய அளவிற்கு கூட தயங்காது செயல்படுவார்கள். தன்னுடைய பதவியை தவறான முறையில் அடைவது, அடைந்த பதவியிலே தவறான காரியங்களை செய்வது அதன் மூலமாக பெரிய குற்றங்கள், நம்பியவர்களுக்கு, தன்னுடைய தேசத்திற்கு கூட தீங்கு செய்வது இப்படியான நிலைக்கும் போக தயங்காதவர்களாக இருப்பார்கள். மேலும் இது போன்ற நிலை வெளியே தெரிந்தால் தன்னுடைய பெயர் என்ன ஆவது? குடும்ப கௌரவம் என்ன ஆவது ? தன்னுடைய புகழ் என்னாவது? என்பதையெல்லாம் துளியும் சிந்திக்காது செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இப்படி செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் தன்னுடைய சுய ஜாதகத்திலே லக்னத்தை பலமாக கொண்டிருக்கிறார்களா? மற்றபடி பூர்வ புண்ணிய அதிபதி, பாக்யாதிபதி, காப்பாற்ற வேண்டிய கைகொடுக்க வேண்டிய கிரகங்கள் பலமாய் இருக்கிறதா? நல்ல தசை நடக்கிறதா? என்பதை பொறுத்து நற்பலனும்,

லக்னம் பலமாக இல்லாது, பூர்வ புண்ணியாதிபதி பாக்யாபதி பலமாக இல்லாது பாதகமான தசைகளும் நடந்து, கோச்சாரமும் கைவிடும்போது கெடுபலனும் ஏற்படும்.

இப்படியாக செவ்வாய் தோஷம் கொண்டவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவர்களாக இருப்பார்கள், இவர்களுடைய மனோபாவம் எப்படி இருக்கும், சாதக பாதகங்கள் என்ன, ஏற்ற இறக்கங்கள் என்ன, செவ்வாய் தோஷம் கொண்டவருக்கு மட்டும் தான் தீங்கா, அவரால் பல பேருக்கு கூட தீங்கு ஏற்படுமா, இவர்களை எப்படி கண்டு கொள்ள முடியும், எப்படி கையாள முடியும், கையாள வேண்டும் என்பதை,

செவ்வாயை பூமிகாரகனாக உருவப்படுத்தியதிலிருந்தும், செவ்வாய்க்கு ஆட்சி வீடுகள் நீச்ச வீடு உச்ச வீடு என்பதாக ஏற்பட்டதிலிருந்தும், செவ்வாய் தோஷ விளைவுகளை பலன்களை தீங்குகளை இப்போது எடுத்துரைத்தோம்.

செவ்வாயை ராசியாக கொண்டவர்கள்…. அதாவது மேஷ ராசியிலே, விருச்சிக ராசியிலே பிறந்தவர்கள், செவ்வாயை லக்னமாகக் கொண்டவர்கள்…. மேஷ லக்னத்தில், விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள், சுய ஜாதகத்திலே செவ்வாய் கடகத்தில் , மகரத்தில் இருக்க பிறந்தவர்கள், செவ்வாய் திசை நடக்கக் கூடியவர்கள், லக்னத்தில் செவ்வாய் இருக்கக் கூடியவர்கள், லக்னத்தை செவ்வாய் பார்க்கக் கூடியவர்கள், லக்னாதிபதிக்கு செவ்வாயுடைய தொடர்பு ஏற்பட்டவர்கள், சந்திரனுக்கு செவ்வாய் உடைய தொடர்பு சம்பந்தம் ஏற்பட்டவர்கள், இவர்களுக்கும் கூட இப்போது நாம் சொன்ன பலன்கள் ஏற்படும். அதாவது மற்ற கிரகங்கள் எப்படி இருக்கிறது, லக்னாதிபதி எப்படி இருக்கிறார், என்ன தசை நடக்கிறது, யோகங்கள் அதிகமாக இருக்கிறதா, அவயோகங்கள் அதிகமா இருக்கிறதா, பூர்வ புண்ய அதிபதி பாக்கிய அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்து நல்ல பலனோ கெட்ட பலனோ ஏற்படும்.

செவ்வாய் தோஷம் பற்றிய நிறைய கேள்விகளை தலைப்பில் கேட்டிருக்கிறோம். அதிலே ஒருசில விஷயங்களை இந்த பதிவிலே பார்த்தோம். இது பொதுப்பலனே…. பொதுவாக சொல்லப்பட்டது சுய ஜாதகத்திற்கு ஏற்றவாறு, பலன்கள் உண்டாகும். அதனால் செவ்வாய் தோஷம் இருந்தாலே இப்படித்தான் என்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம் இது பொதுப்பலன். ஆரம்பத்திலே கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அடுத்தடுத்த பதிவுகளிலே அறிந்து கொள்வோம்.

லக்ஷ்மி கடாக்ஷம் தரும் ரகசியங்கள் , பித்ருக்கள் ஆசி கிடைக்க செய்யவேண்டியவை, பண்டிகை விரத வழிபாட்டு முறைகள், திருமண பொருத்த சூட்சுமங்கள், பயனுள்ள கேள்வி பதில்கள், பலன்தரும் ஜோதிட தகவல்கள், வளம்தரும் வாஸ்து விதிமுறைகள், மாதபலன்கள், பெயர்ச்சி பலன்கள், நீதிக்கதைகள், அர்த்தமுள்ள நம்பிக்கைகள்…. போன்ற அறிய தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள http://www.beemarajaiyer.com என்ற இந்த இணைய தளத்தை SUBSCRIBE செய்யுங்கள்.

SUBSCRIBE to WWW.BEEMARAJAIYER.COM . to know more information BOOKMARK this site and set as HOMEPAGE .

TO VISIT MY YOUTUBE CHANNEL CLICK THE LINK BELOW

YOUTUBE CHANNEL LINK 1 https://www.youtube.com/channel/UCJCmHaMnWPIxhHKu-RbDFTg

(Beemaraja Iyer’s ARTHAMULLA JOTHIDAM )

YOUTUBE CHANNEL LINK 2 https://www.youtube.com/channel/UCzCHMC3slzm7-LZTPWRBjqQ

( Beemaraja Iyer’s ARTHAMULLA NAMBIKKAIGAL )

ஜாதக பலன் அறிய வாஸ்து பார்க்க திருமணப் பொருத்தம் பார்க்க

கணபதி ஹோமம் கிரஹபிரவேசம் திருமணம் செய்து வைக்க

தொடர்பு கொள்ளவும்.

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading