குழந்தைகளைப் போல, சில பறவைகளை சில விலங்கினங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாமா என்ற ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கும். உதாரணமாக கிளிகளை புறாக்களை பார்த்துக்கொண்டிருக்க நிறைய பேருக்கு பிடிக்கும். நீர்நிலைகளில் குறிப்பாக குளக்கரையில் அமர்ந்து அதில் துள்ளி குதிக்க கூடிய மீன்களை பார்ப்பது மிகவும் பிடித்தமானதாக பலருக்கு இருக்கிறது. குரங்கு யானை இவற்றை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் சலிப்பு ஏற்படாது.
இயற்கையைப் பார்த்து நாம் ரசிப்பது நம்முடைய மனதிற்கு உற்சாகத்தை புத்துணர்ச்சி தருவது போல பறவைகளைப் பார்ப்பதும் நமக்கு பிடித்தமான ஒன்று. அதனால் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீட்டிலே கிளிகளை வளர்ப்பார்கள், புறாக்களை வளர்ப்பார்கள். ஆனால் இயற்கையாக நடக்கக் கூடிய விஷயங்களை நாம் செயற்கையாக மாற்றும் போதுதான் அந்த இடத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இயற்கைக்கு எந்த வகையிலும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது. இயற்கையை மாற்ற நினைக்கக் கூடாது. இறைவன் இயற்கையாகவும் இருக்கிறார். இயற்கையை இறைவனாகவும் பார்க்கலாம். அந்த இயற்கைக்கு எதிராக நாம் செயல்படும்போது கட்டாயம் அது நமக்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது.
கிளியையோ புறாவையோ எதாவது ஒரு பறவையோ வீட்டிலே வளர்க்கிறோம் என்று சொன்னால், அதை ஒரு கூட்டிலே போட்டு நாம் அடைத்து வைக்கிறோம். பூட்டி வைக்கிறோம். அதற்கு மிகச்சரியாக நாம் ஆதாரங்களை கொடுத்தாலும், குடிநீரை கொடுத்தாலும், கொஞ்சம் வசதியான பெரிய கூண்டாக அமைத்தாலும் கூட, அதனுடைய சுதந்திரத்தைப் பறித்துவிடுகிறோம்.
பறவைகள் என்று சொன்னாலே பறந்து திரியவேண்டும். அதனால்தான் அது பறவைகள். அதை பறக்க விடாமல் செய்து விட்டோம். அதனுடைய இனத்தோடு சேராமல் செய்து விட்டோம். என்றால் அது தவறுதானே.
நமக்கு எப்படி நம்முடைய சுதந்திரம் முக்கியமோ, யாரும் நம்முடைய சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என நினைக்கிறோமோ, பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் இப்படி எவ்வளவோ விஷயங்களில் சுதந்திரம் தேவை என்று நாம் போராடிப் பெற்றோமோ , இன்னமும் சிலவற்றிற்காக போராடிக் கொண்டிருக்கிறோமோ, அதுபோலத்தான் பிற உயிர்களுக்கும். அதனால் எந்த ஒரு ஜீவராசியுடைய சுதந்திரத்தையும் நாம் பறிக்கக்கூடாது. ஆக, பறவைகளை கூண்டில் அடைத்து நம்முடைய வீட்டில் வளர்ப்பது தவறு. இது நமக்கு தோஷத்தை பாவத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு நம்முடைய புராணங்களிலும் கூட எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.
பெரும்பாலானவர்களுக்கு நாகதோஷம் தெரியும். சர்ப்ப தோஷம் என்றும் கால சர்ப்ப தோஷம் என்றும் சொல்லக்கூடியதாக இந்த நாக தோஷம் இருக்கிறது. அதுபோல பசுவை அடிக்க கூடாது. துன்புறுத்தக்கூடாது. அது தோஷம். பைரவருடைய வாகனமாய் இருக்கக்கூடிய நாயை அடிக்கக்கூடாது. துன்புறுத்தக்கூடாது. இது தோஷம். இது ஒரு வகை. அதுபோல, பறவைகளால் சில தோஷங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு கூட இருக்கிறது. இதை பக்க்ஷி தோஷம் என்று சொல்வார்கள். இது மற்றொரு வகை. குழந்தைகளுக்கு பக்க்ஷி தோஷங்கள் ஏற்படும். அதனால் உடல் நிலை பாதிக்கும்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மை இருக்கிறது. அப்படி பறவைகள் சூரிய உதயத்தில் தன்னுடைய கூட்டைவிட்டு, தான் வசிக்கக்கூடிய மரத்தை விட்டு, இடத்தை விட்டு செல்கிறது. மாலை சூரிய அஸ்தமன சமயத்தில் மறுபடியும் வந்து தன்னுடைய கூட்டுக்குள்ளே அடங்கிவிடுகிறது. நம்முடைய தாத்தா பாட்டி, அதற்கு முன்பாக வாழ்ந்த தலைமுறை, இது போலவே சூரியனை கொண்டு தன்னுடைய காரியங்களை அமைத்துக் கொண்டார்கள். சூரிய உதயத்தில் எழுந்து அன்றாட கடமைகளை செய்து, சூரிய அஸ்தமன சமயத்தில் வீட்டிற்கு வந்து சீக்கிரமாக உண்டு, படுத்து உறங்கினார்கள். அந்த காலத்தில் வேண்டுமானால் கூட பறவைகளை வீட்டிலே வளர்த்து இருக்கலாம். அப்போது கூட நம்முடைய முன்னோர்கள் வீட்டிலே பறவைகளை வளர்க்கவில்லை. ஆனால் இப்போது நமக்கு இரவுதான் மாலையாக இருக்கிறது ! நள்ளிரவுதான் இரவாகவே இருக்கிறது. வீட்டிற்குள்ளே பறவைகள் இருக்கும்போது, அதற்கு நம்முடைய பேச்சு, மின்சார விளக்குகள், தொலைக்காட்சி போன்றவை பறவைகளுக்கு இடையூறாக இருக்கிறது பொதுவாக மின்சார உபகரணங்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோன் கணினி .இதனால் அவை பாதிக்கப்படுகிறது.
மேலும் இதுபோல பறவைகள் வீட்டிலே இருந்தால், அவை இடக்கூடிய முட்டைகளுக்காக பாம்பு வர வாய்ப்பு இருக்கிறது. நாமே நம்முடைய வீட்டிற்கு விஷ ஜந்துக்கள் வருவதற்கு காரணத்தை ஏற்படுத்தி தருவதாக ஆகிவிடுகின்றது. அதனால் பறவைகளை நாம் வீட்டில் வளர்ப்பதை தவிர்ப்போம்.
இப்படி சொல்லும்போது, பிற உயிரிடத்திலே கருணைகொண்டு அன்பு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு, எங்களை பெற்றவர்கள் எங்களுக்கு பிறந்தவர்களை தாண்டி பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு, பிறரோடு சேர்ந்து வாழ்வதற்கு அதிக விருப்பம் இருக்கிறது. அதனால் இதுபோல பறவைகள் விலங்கினங்களை நாங்கள் வீட்டிலே வளர்க்கிறோம். என்று சொல்லும் பட்சத்தில், அப்படி செய்யும் பட்சத்தில், வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்கினங்கள் பறவையினங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆனால் கூண்டில் அடைத்து வைக்கக் கூடாது. நம்முடைய குழந்தைகளை அப்படியா நாம் அடைத்து வைக்கிறோம் ?
பறவைகளை பார்க்க பிடிக்கும், அது மனதிற்கு உற்சாகத்தை ஆறுதலையும் நிம்மதியை சந்தோஷத்தை தருகிறது என்று சொன்னால், பழைய கோவிலுக்கு சென்றால் அங்கே நிறைய பறவைகள், உதாரணமாக பழைய கோவில் கோபுரங்களில் புறாக்கள் இருக்கும். மாடப் புறாக்கள் என்று சொல்லப்படும். அதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். தானியங்களை நாம் எடுத்துப் போய் கொடுத்து அவைகளுக்கு ஆகாரமாக பயன்படுத்த சொல்லலாம்.
அதுபோல வீட்டிற்கு வெளியிலோ வீட்டின் மாடியிலோ பறவைகள் சாப்பிடக்கூடிய தானியங்களை தினந்தோறும் வைக்கும் போது, பறவைகள் வந்து அந்த தானியங்களை சாப்பிடும். அந்த இடத்திலே அதற்காக குடிநீர் ஏற்பாடு செய்தால் அதை அருந்தும். அப்போது நாம் பார்த்து ஆனந்த படலாம். அவைகள் சுதந்திரமாக வந்து நம்முடைய தானியங்களை ஏற்றுக்கொண்டு, சாப்பிட்டு பிறகு சுதந்திரமாக பறந்து சென்றுவிடும்.
வீட்டிற்கு வெளியே நிறைய மரங்களை வளர்த்தால் பறவைகள் அம்மரங்களிலே கூடுகட்டி வசிக்கும். பறவைகளுக்கு இருப்பிடமாக, ஆகாரம் தரக்கூடியதாக அம்மரங்கள் அமையும். இதுபோன்ற இன்னமும் பல சிறந்த வழிமுறைகளை நாம் கையாளலாம். உயிரினங்கள் என்று சொன்னாலே அவை சுதந்திரமாக இருக்க வேண்டும். நம்முடைய கட்டுப்பாட்டிலேயே, ஒரு கூண்டுக்குள்ளேயே, வீட்டுக்குள்ளேயே அதை நாம் வைக்கிறோம் என்று சொன்னால் அவை பொருட்களாக ஆகிவிடுகிறது. நாம் பயன்படுத்தக் கூடிய கைத்தொலைபேசி போல, நாம் பார்க்கக்கூடிய தொலைக்காட்சி போல. உயிரில்லாத ஜட வஸ்துக்களையே நாம் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த முடியும். உயிருள்ள ஜீவராசிகளுக்கு சுதந்திரம் முக்கியம். அதை நாம் கெடுக்கக் கூடாது.
அதனால் வீட்டிலே கிளியோ புறாவோ எதாவது பறவையையோ வளர்ப்பதை தவிர்க்கலாம். இவை வீட்டிற்குள்ளே அவ்வப்போது வருகிறது என்று சொன்னால், எந்த பறவை வந்தது என்பதை பார்த்து, அது வீட்டிற்கு உள்ளே வரலாமா ? என்பதை பெரியவர்களிடத்தில் கேட்டு அறிந்து, தோஷமாக இருந்தால் தகுந்த பரிகாரம் செய்யும்போது அந்த தோஷம் போகும்.
நம்முடைய வீட்டிலே கிளி புறா பறவைகள் வளர்க்கலாமா ? வீட்டிற்குள்ளே பறவைகள் வரலாமா ? என்பதை இப்பதிவிலே பார்த்தோம். இதுபோன்ற நிறைய பேருக்கு இருக்கக்கூடிய சந்தேகம் ! பெரும்பாலானவர்கள் கேட்ட கேள்வி ? இதற்கான பதில்களை அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்ந்து நாம் பார்ப்போம்.
ஜாதகம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க கணபதிஹோமம் கிரஹப்பிரவேசம் திருமணம் செய்ய அணுகவும்.
விக்னேஷ் ஜோதிட நிலையம்
பீமராஜா ஐயர்

Leave a Reply