ஆன்மீகம் சம்பந்தமான விஷயங்களில் ஆராய்ச்சிகள் தேவையா ? அறிவியல் பூர்வமாக நம்முடைய ஆன்மீகம் இருந்தால்தான் நாம் இறை வழிபாடு செய்ய வேண்டுமா? இப்படியான ஒரு கேள்வி மனதில் எழுகிறது. இருந்த போதும் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு நமது சடங்கு சம்பிரதாயங்களை தொடர்ந்து செய்வதற்கு உண்டான ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த, அவர்களுக்கு புரிதலை தர அவர்களுடைய, குறிப்பாக குழந்தைகள் சிறுவர்களுடைய கேள்விகளுக்கு பதில்களை தர வேண்டியுள்ளது.
அதனால் நம்முடைய பூஜை நோன்பு பண்டிகை விரதம் இவற்றை நாம் கடைபிடிக்கக் கூடிய சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிய சில விளக்கங்களை நாம் அவ்வப்போது சொல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக ஒரு கூற்று இருக்கிறது நம்புகிறவர்களை சந்தேகிக்கக் கூடாது சந்தேகப்படக் கூடியவர்களை நம்ப கூடாது என்பதாக அப்படி நாம் நம்முடைய கடவுளை நம்முடைய பக்தி மார்க்கத்தை ஆன்மீகத்தை சந்தேகிக்கக் கூடாது ஆனால் ஆர்வத்தின் பொருட்டு அதை தெரிந்துகொள்ள முனையலாம்.அப்படியாக …
கும்பாபிஷேகங்கள் நடக்கின்ற போது கருடன் வந்து வட்டமிடுகிறது. இது ஏன் என்ற ஒரு கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் தருகிறேன் என்பதாக சிலர், மக்கள் அதிகமாக கூடுகிற இடத்திலே இதுபோல கருடன் வரும். என்று அதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மக்கள் அதிகமாக கூடக்கூடிய அனைத்து இடங்களிலும் இது போல கருடன் வருவதில்லை.
உதாரணமாக தேர்தல் வரக்கூடிய சமயத்திலே பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கின்றதே அதை பார்ப்போம். அப்போது ஆயிரக்கணக்கான, சில இடத்தில் இலட்சக்கணக்கில் கூட மக்கள் கூடுகிறார்கள். அந்த இடத்திலெல்லாம் கருடன் வந்து வட்டம் விடுவது கிடையாது. சரி நம்முடைய பண்டிகைகளின் போது நாம் பிரபலமான நகரங்களில் உள்ள கடைவீதிக்கு செல்கிறோம். அப்போது ஏராளமான கூட்டம் கூடுகிறது, இப்போது தீபாவளி வரப்போகிறது அந்த தீபாவளிக்கு துணி மணிகளை எடுப்பதற்காக சென்னையிலேயே மாம்பலத்தில் லட்சக்கணக்கான பேர் கூடுகிறார்கள். அங்கே வந்து கருடன் வட்டமிடுவது கிடையாது. மக்கள் கூடுகின்ற இடத்தில் எல்லாம் இதுபோன்ற கருடன் வட்டமிட வேண்டும் என்றால் ஏன் இங்கே எல்லாம் வருவது இல்லை? என்பதாக சிந்திக்கும்போது இந்த பக்தி மார்க்கத்திலே நமக்கு ஒரு ஈடுபாடு உண்டாகும். அதாவது பக்தி பரவசம். பக்தர்கள் அதிகமாக கூடக்கூடிய இடம் இறைவனுக்கு செய்யப்படக்கூடிய கும்பாபிஷேகம் இந்த இடத்திலேயே கருடன் வருகிறது.
கருடன் என்று சொல்லக்கூடியது ஏதோ ஒரு சாதாரணமான பக்க்ஷி கிடையாது. அது பக்க்ஷி ராஜன். ஸ்கந்த புராணம் விஷ்ணு புராணம் போல கருட புராணம் என்று இருக்கிறது. நம்மை காக்க கூடிய கடவுளாக இருக்கக் கூடிய ஹரியின் வாகனமாக இருக்கிறது. அதனால் கும்பாபிஷேகம் நடக்கின்ற இடத்திலேயே இந்த கருடன் வந்து வட்டமிடுகிறது. அந்த பூஜை திருப்தியாக இருந்தது, நல்லபடியாக நடந்தது, அந்த இடத்திற்கு புனிதம் கிடைத்தது, அங்கே வரக்கூடியவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணனுடைய மஹாலக்ஷ்மியுடைய அனுகிரஹம், கடாட்சம் கிடைக்கும் என்பதாக இது நமக்கு உணர்த்துகிறது.
இப்படி சொல்லும்போது, சரி . பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் கருடன் வந்து வட்டமிடுகிறது. பெருமாளுடைய வாகனம் அது, அதனால் இதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். சிவாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தாலும் இதுபோன்ற விநாயகப் பெருமான் அம்பாள் முருகன் என்று எந்த ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தாலும் கருடன் வந்து வட்டமிடுகிறதே அது ஏன்?
இப்போது நம்முடைய வீட்டிலேயே ஒரு நல்ல விஷயம் நடக்கிறது, சுப நிகழ்ச்சி நடக்கிறது. மிக முக்கியமானவர்களை நாம் அழைப்போம். கட்டாயம் நம்முடைய பெண்ணை திருமணம் செய்து கொடுத்து இருந்தால் நம்முடைய வீட்டு மாப்பிள்ளை அங்கே இடம் பெறுவார். முதல் பத்திரிகை யையே அவருக்குத்தான் வைத்து நாம் அழைப்போம். அப்படியாக பெருமாள் என்று சொன்னாலும் அவருடைய வாகனம் கருடன் என்று சொன்னாலும் பெருமாளுடைய வீட்டு மாப்பிள்ளையாக சிவபெருமான் இருக்கிறார். சிவபெருமானுடைய மகனாக விநாயகப் பெருமான் முருகப்பெருமான் இருக்கிறார்கள். பெருமாளுடைய சகோதரியாக அம்பிகை இருக்கிறாள். இப்படியாக சிவாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தாலும் கருடன் வருவதற்கு இது காரணமாய் இருக்கிறது.
எந்த ஒரு ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தாலும் அங்கே மகாவிஷ்ணு எழுந்தருள்கிறார். அவர் எழுந்தருளும் போது கருடன் கட்டாயம் இருக்கத்தானே வேண்டும்! எப்போது விஷ்ணுவானவர் ஒரு இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலே மஹாலக்ஷ்மி அவருடைய இருதயத்திலே எப்போதும் வாசம் செய்கிறாள். அதனால் லக்ஷ்மி தேவியும் வந்துவிடுகிறார். லக்ஷ்மி நாராயணர் இருக்கின்ற இடத்திலே அவருடைய வாகனமான கருடாழ்வார் கட்டாயம் இருப்பார். அதனால் கும்பாபிஷேகங்கள் கும்பாபிஷேகங்கள் நடக்கின்ற போது கருடன் வட்டமிடுவது மிகச்சிறந்த ஒரு ஆன்மீக அற்புதம். இதை நாம் பரவசத்தோடு பயபக்தியோடு ஏற்றுக்கொண்டு இறைவழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் இதுபோன்ற மிக விசேஷமான உற்சவங்கள் நடக்கின்ற இடத்திலேயே கருடனை வழிபடுகிறோம். அதைத் தாண்டி கருடனை வேறு எப்போதெல்லாம் வழிபடவேண்டும் எப்படி வழிபட வேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் நிறைய இருக்கிறது. அதையும் கூட நாம் அவ்வப்போது இதுபோன்ற பதிவுகளின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
ஜாதகம் பார்க்க வாஸ்து பார்க்க திருமண பொருத்தம் பார்க்க கணபதி லக்ஷ்மி நவக்கிரஹ ஹோமங்கள் செய்து வைக்க அணுகலாம் .
பீமராஜா ஐயர்
விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply