VINAYAGA SADHURTHI QUESTION & ANSWERS PART 2

woman in gold and pink floral crown

விநாயகரை இலைகள் (பத்ரம்) கொண்டு பூஜிப்பதேன்? மண் பிள்ளையார் வயிற்றிலே நாணயம் வைப்பதேன்? கணேசனின் விக்கிரஹத்தை நீர்நிலையிலே விடுவது எதற்காக? பாம்பை ஏன் பூணூலாக அணிந்திருக்கிறார்? எலியை வாகனமாக கொண்டதேன்? யானைத்தலை எதற்க்காக? ஒரு தந்தம் உடைந்திருப்பது எதனால்? அரச மரத்தடியில் வீற்றிருப்பதேன்? ஆனைமுகனுக்கு முச்சந்தியில் கோவில் எதற்கு? வீடுகளில் விக்னராஜனுக்கு கோவில் எதற்காக? பானைவயிற்றுக்கு காரணமென்ன? கொழுக்கட்டை கொப்பரை கரும்பு விசேஷம் ஏன்? பிள்ளையாருக்கு குடை வைக்க காரணம் யாது? பெருமாள் கோவிலிலும் பிள்ளையார் சன்னதி இருக்கிறதே எப்படி? கணநாதன் கையிலே குடம் வைத்திருக்கிறாரே எதற்கு? அறிந்துகொண்டு அர்த்தபுஷ்டியோடு விநாயக சதுர்த்தியை கொண்டாடி வளம்பல பெறுவோம் வாருங்கள்.

இலைகளை (பத்ரம்) கொண்டு பூஜிப்பதேன்? விஷ்ணுவுக்கு துளசி சிவனுக்கு பில்வம் அம்மனுக்கு வேப்பிலை என்று இலைகளை கொண்டு பூஜிப்பதை போல, விநாயகருக்கு மிகச்சிறந்த பயன்தரும் 21 தாவரங்களின் இலைகளை கொண்டு பூஜிக்கிறோம் . நம் பெயரிலும் மனை வீடு என சொத்துக்களின் பத்திரம் கிடைக்க விநாயகரை பத்ரம் கொண்டு பூஜிக்கலாம் . நாமும் நம் உலகமும் பத்ரமாய் இருக்க பிரார்த்தித்து பிள்ளையாரை பத்ரத்தால் அர்ச்சிக்கலாம் .

மண் பிள்ளையார் வயிற்றிலே நாணயம் வைப்பதேன்? அக்காலத்திலே தங்கம் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திலிருந்தது. அந்நாணயத்தை கௌரி புத்ரனுடைய நாபியிலே வைத்து நீர்நிலையிலே விட்டுவிட , நீர்வற்றிய கோடைகாலத்திலே பிள்ளையார் காசு கிடைக்குமென மக்கள் நீர்நிலையை தோண்டி இந்நாணயங்களை எடுத்துக்கொள்வர். இந்நிகழ்வு தூர்வாறுவதுபோல் ஆகி நீராதாரம் மேம்பட அதன்மூலம் விவசாயம் செழிக்க காரணமாய் இருந்தது .

கணேசனின் விக்கிரஹத்தை நீர்நிலையிலே விடுவது எதற்காக? கணபதியின் திரு உருவம் மண்ணினாலே செய்யப்பட்டு மனதாலே நம்பப்பட்டு மஹோன்னதமாக அலங்கரிக்கப்பட்டு மந்திரங்களாலே அர்ச்சிக்கப்பட்டு மலர்களாலே பூஜிக்கப்பட்டு மடியாய் செய்த பிரசாதம் படைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு மகத்தானவரால் உபன்யாசம் சொற்பொழிவு ஆற்றப்பட்டு மத்தாப்பு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு குதூகலமாக கொண்டாடப்பட்டு, கடைசியாக தண்ணீரிலே கரைக்கப்பட்டு தோன்றிய இடத்திற்கே மண்ணோடு மண்ணாக சங்கமிக்கிறது . நம் வாழ்க்கையும் இது போலத்தான். அதனால் வாழும் சொற்ப காலத்திலே அன்பு கருணை இரக்கம் பக்தி ஒழுக்கம் தர்மம் கடைபிடித்து நற்கதி அடைய விநாயகர் உணர்த்துகிறார் . மேலும் ஓடும் நீரிலே பிள்ளையாரின் மண் விக்கிரஹத்தை விடும்போது பூஜை மந்திரங்கள் இவற்றால் உருவேற்றப்பட்ட சக்தியால் அந்நீரை புழங்கும் அனைவருக்கும் பிள்ளையார் அருள் கிடைக்கப் பெறுகிறது.

பாம்பை ஏன் பூணூலாக அணிந்திருக்கிறார்? தண்டிக்கக்கூடிய சக்தி ஒன்று நம்மை கவனிக்கிறது, மனசாட்சியாக நம்மோடு கட்டபட்டிருக்கிறது என்பதை உணர்ந்து தர்ம வழி நடக்கவேண்டும் . தான் என்று தலை நிமிர்த்தக்கூடிய, பலமுள்ளவன் என்று சப்திக்கக்கூடிய, மாயைகளை அடக்கி கட்டி கட்டுப்படுத்திவிட்டால் இறைவனை அடையலாம் . மேலும் நாகங்களை தொடர்பு படுத்தி சொல்லப்படக்கூடிய தோஷங்களுக்கும் தீர்வாக விநாயகர் வழிபாடு அமைந்துள்ளது .

எலியை வாகனமாக கொண்டதேன்? சதா சர்வ காலமும் அலைந்து திரியக்கூடிய அனைத்தையும் அடையக் துடிக்கின்ற சில சமயம் அழிக்கின்ற கட்டுப்பட மறுக்கின்ற எலியை போன்ற நம்மனதை அடக்கினால் நம் வசப்படுத்தினால் முழுமையான மனிதராக, முதன்மையான இடத்தை அடையலாம். இதை உணர்த்த எலி வாகனம் கொண்டுள்ளார் மூஷிக வாகனன் .

யானைத்தலை எதற்காக ? ‘கற்றலின் கேட்டலே நன்று’ கல்வி கேள்விகளிலே, கேள்வி அறிவு மிகச்சிறந்தது . யார் நிறைய கேட்கிறார்களோ அவர்கள் ஞானவான்களாக இருப்பார்கள் . விலங்குகளிலேயே பெரிய காதுகளை கொண்டது யானை . பெரிய உருவம் கொண்ட யானை சிறிய கண்களை கொண்டுள்ளது . மேலோட்டமாக போகிற போக்கிலே பார்த்தால் முழுமை இராது, எதையும் கூர்ந்து உற்று கவனித்து பார்க்க வேண்டும் அப்போதே சரியான புரிதல் தெளிவு இருக்கும் . மனிதரை போன்று கையை கொண்டுள்ளது யானை. மிகப்பெரியதும் பலம்கொண்டதாகவும் இருந்தபோதும் சாதுவாக இருக்கும் மிருகம் யானை . பொறுமை அமைதி சகிப்புத்தன்மை ஞானம் இவற்றை நாம் அடைய வேண்டும் என்பதை உணர்த்த யானைத் தலையை கொண்டுள்ளார் .

ஒரு தந்தம் உடைந்திருப்பது எதனால்? மயிலுக்கு தோகை அழகு சேவலுக்கு கொண்டை அழகு யானைக்கு தந்தம் அழகு . பாரதம் எழுதவும் அசுரனை அழிக்கவும் அத்தந்தத்தையே உடைத்து தியாக உணர்வை நமக்கு உணர்த்துகிறார் . நம் உடலிலே ஏதாவதொரு ஊனம் இருந்தாலும் கூட வெற்றி முதலிடம் முன்னேற்றம் சாதனை சாத்தியமே என்று உணர்த்துகிறார்.

அரச மரத்தடியில் வீற்றிருப்பதேன்? அரசமரத்தை சுற்றி வர புத்திரப்பேறு கிடைக்கும். செல்வங்களில் உயர்ந்த செல்வமான மக்கட் செல்வத்தை நாம் பெற அவ்வரசமரத்தின் கீழே ஆனைமுகன் இருந்து நமக்கு அருள்கிறார். மரங்கள் பிராணவாயுவை தரும், அதிலும் அரசமரம் கூடுதலாக தரவல்லது. அதனால் அரசோடு சேர்ந்து இருக்கும் விநாயகரை வலம் வர ஆரோக்கியமும் கிடைக்கும். நாம் ஆரோக்கியம் பெற சந்தான பாக்கியம் பெற உமாசுதன் அரசடி விநாயகராக வீற்றிருக்கிறார் .

ஆனைமுகனுக்கு முச்சந்தியில் கோவில் எதற்கு? மூன்று தெருக்கள் சேரும் இடங்களிலே கழிப்பு திருஷ்டி சில பரிகாரங்கள் கழிக்கப்பட்டிருக்கும். அவை நம்மை பாதிக்காவண்ணம் கணேசர் அமர்ந்து காக்கிறார் .

வீடுகளில் விக்னராஜனுக்கு கோவில் எதற்காக? வாஸ்து சாஸ்திர குறைகள் அதிலும் குறிப்பாக தெருக்குத்து தோஷங்கள் நம்மை பாதிக்காமல் இருக்க வீடுகளிலே விநாயகருக்கு சிறிய கோவில்கள் அமைக்கப்படுகிறது. ஆனால் கோவில் இல்லா ஊரிலே குடியிருந்தாலோ ??? அன்றாடம் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை என்றாலோ கூட ஆலயம் தொழுதல் தடைபடக்கூடாது. அதிலும் குழந்தைகளுக்கு கோவில் தொடர்பு குறைந்துவிடக்கூடாது என்பதற்காக வீடுகளில் பிள்ளையாருக்கு சிறு கோவில் அமைக்கப்படுகிறது. வேறு தெய்வங்களுக்கு கோவில் அமைத்தால் ஆகம விதிகள் நியம நிஷ்டைகள் மிகச் சரியாக இருக்க வேண்டும். விநாயகரோ அனைத்தையும் பொருத்தருள்வார், ஏற்றுக்கொள்வார் .

பானைவயிற்றுக்கு காரணமென்ன? உணவின்றி உயிரில்லை, ஆகாரமின்றி ஆரோக்கியமில்லை, பசி வந்தால் பத்தும் பறந்து போகும். நம் உடல் உறுப்புகளிலே வயிற்றை மட்டும் ( பசியை ) வஞ்சிக்கக்கூடாது. தானங்களில் சிறந்தது அன்னதானம். மனிதர் மட்டுமல்லாமல் மற்ற ஜீவராசிகளுடைய பசியையும் ஆற்றி, பிறகு நாம் புசிக்க வேண்டும். நம்மை போன்றே பிறருக்கும் வயிறு ( பசி ) இருக்கின்றது. விநாயகரின் பெரிய வயிற்றை பார்க்கும்போதெல்லாம் நம் பெற்றோருடைய சுற்றத்தாருடைய உலகத்தோருடைய பசியை ஆற்ற வேண்டியது நம் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

கொழுக்கட்டை/மோதகம் கொப்பரை கரும்பு விசேஷம் ஏன்? கொழுக்கட்டையின் உள்ளே பூரணம் இருக்கும். அதுபோல நாமும் பூரணத்துவம் அடைய வேண்டும் . கொப்பரை – சுவையான நீர் வற்றி ஓட்டோடு இருக்க கூடிய தொடர்பு அற்று தனியாக இருப்பது கொப்பரை. அப்படி நம் வாழ்க்கையில் குடும்பம் உறவு இன்ப துன்பம் அனைத்தயும் அனுபவித்து , கடந்து பற்றற்ற நிலையை அடைய வேண்டும் . கரும்பு – பிறரின் தோற்றம் செய்கை பேச்சு கடினமாக இருந்தாலும் கூட எல்லோருக்குள்ளும் இனிமையான ஒரு பாகம் உண்டு. அதுபோல எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு. எனவே சண்டை சச்சரவு, கோப தாபம், வழக்கு விரோதம், கவலை துக்கம் தவிர்த்து ஷண்முக சோதரனிடத்திலே சரணாகதி அடைவோம் .

பிள்ளையாருக்கு குடை வைக்க காரணம் யாது? கோவில்களிலே புறப்பாடு நடக்கும் போது, ஸ்வாமி வீதி உலா வரும்போது குடைப்பிடிப்பர். விநாயகர் சதுர்த்திக்கு மண் பிள்ளையாரோடு குடையையும் சேர்த்து வாங்குவதிலிருந்து, வீதி உலாவாக ஊர்வலமாக கணபதியை கொண்டு செல்ல வேண்டும் ( நீர் நிலையில் சேர்க்க ) என்பது புலனாகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முறைப்படி கொண்டாடி முழுமையான பலனை அடைவோம் .

பெருமாள் கோவிலிலும் பிள்ளையார் சன்னதி இருக்கிறதே எப்படி? இணையற்ற இதிகாசமான, கண்ணனின் காவியமான, கீதையின் பிறப்பிடமான மாஹாபாரதத்தை வேத வியாசரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுதி அருளியதால் பெருமாள் கோவில்களிலே பிள்ளையாருக்கு இடம் உண்டாகியது .

கணநாதன் கையிலே குடம் வைத்திருக்கிறாரே எதற்கு? ‘தாயைச் சிறந்த கோவிலும் இல்லை’ ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ அகிலத்தாருக்கு இதை உணர்த்த, அனுதினமும் அம்மை அப்பனுக்கு பாத பூஜை செய்ய எப்போதும் தன் கையிலேயே, தும்பிக்கையிலேயே தங்கக்குடத்தை கொண்டிருக்கிறார். பல பிறவிகள் எடுத்தும் தாகம் தீராமல், மோகம் தணியாமல், ஆசை அகலாமல் பிறவிப் பெருங்கடலிலே சிக்கித் தவிக்கும் நமக்கான அமிர்தத்தை அத்தங்கக் குடத்திலே வைத்திருக்கிறார். நாம், உயர் கல்வி நல்லழகு அதிகாரப் பதவி நிறைந்த செல்வம் வஜ்ர தேகம் இவை எல்லாம் பெற்றிருந்தாலும், அடக்கத்தோடும் பெருந்தன்மையோடும் நல்லொழுக்கத்தோடும் நிறைகுடம் போல் இருக்க வேண்டும் ( குறைகுடம் கூத்தாடும் நிறை குடம் நீர் தளும்பாது ) .

விநாயகப் பெருமான் நமக்கு உணர்த்தக்கூடிய அறிய பல தத்துவங்களை எளிமையாக கடந்த பதிவிலும் இப்பதிவிலும் பார்த்தோம். மேலும்…

விநாயக சதுர்த்தியை எப்படி கொண்டாடுவது ? பிள்ளையார் சதுர்த்தி பூஜை வழிபாட்டு முறை என்ன ? அவசியம் செய்ய வேண்டியது என்ன ? கட்டாயம் தவிர்க்க வேண்டியது எவையெவை ? இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அடுத்த பதிவிலே அறிந்து கொள்வோம் .

கணபதி ஹோமம் திருமணம் கிரஹபிரவேஸம் செய்து வைக்க , ஜோதிடம் வாஸ்து திருமண பொருத்தம் பார்க்க பிள்ளையார் சதுர்த்தி பூஜை செய்து வைக்க அணுகவும் .

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading