வரலக்ஷ்மி விரதம்/நோன்பு யார் எப்படி எதற்கு எப்போது செய்யனும்?

வரலக்ஷ்மி நோன்பு பழக்கமிருப்பவர்க்கு மட்டுமா? புதிதாகவும் தொடங்கலாமா? பூஜையை நாமே செய்து கொள்ளலாமா? புரோஹிதர் தான் செய்து வைக்கனுமா? வரலக்ஷ்மி விரதத்தின் மகத்துவங்கள் எப்படிப்பட்டவை? பலன்கள் என்னென்ன? பூஜைமுறை யாது? வரலக்ஷ்மி நோன்பு ஒவ்வோராண்டும் எப்போது வரும்? படித்து பயனடைய வாருங்கள்.

வரலக்ஷ்மி நோன்பு பழக்கமிருப்பவர்க்கு மட்டுமா? புதிதாகவும் தொடங்கலாமா? நாம் நோற்றுக்கொள்ள வேண்டிய நோன்புகள் நிறைய இருக்கிறது. அவற்றில் காரடையான் நோன்பு, கேதார கௌரி விரதம், வரலக்ஷ்மி நோன்பு பிரசித்தியானவை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் இருப்பதுபோல ஆண்டுதோறும் நோற்றுக்கொள்ள வேண்டிய நோன்பு குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும்.

அந்நோன்பை எக்காரணத்திற்காகவும் விட்டுவிடக்கூடாது. தவறாமல் அனுஷ்டித்து அடுத்த சந்ததியினர் கடைபிடிக்க வழிகாட்ட வேண்டியது அவசியம். இப்படி ஏதாவது ஒரு நோன்பு இருக்கக்கூடியவர், வரலக்ஷ்மி விரதநாளிலே லக்ஷ்மிபூஜை மட்டும் செய்தாலும் போதுமானது.

எந்த ஒரு நோன்பும் இல்லாதவர் வீட்டுப் பெரியவர்களிடத்திலே அனுமதி பெற்று இவ்வரலக்ஷ்மி நோன்பை முறைப்படி தொடங்கி தொடர்ந்து செய்யலாம். லக்ஷ்மியுடையதோ கௌரியுடையதோ அருள் நம் குடும்பத்திற்கு கட்டாயம் தேவை. அவ்வருளை இவ்விரதங்கள் நமக்களிக்கும்.

நம்முடைய பண்டிகை விரதம் நோன்பு சடங்கு சம்பிரதாயங்களில் நற்பலன்களை அடையக்கூடிய வழியிருந்தும், அதை கடைபிடிக்க சக்தி இருந்தும் எங்களுக்கு பழக்கமில்லை என்பதாக நினைத்து, சொல்லி…

(ஒரு தரித்திரனுடைய வறுமையை போக்க பார்வதிதேவியின் கோரிக்கைக்கிணங்கி பரமசிவனார் தங்க வைர ரத்தினாதிகள் அடங்கிய மூட்டையை அவன் வரும் வழியிலே போட கண்ணில்லாதவர் எப்படி நடப்பர்? என்றெண்ணிய அவன் கண்களை மூடி கையை துழாவிக்கொண்டு குபேரனாக்கும் அம்மூட்டையை கடந்ததை போல)

நிறையபேர் நிறைய நல்ல விஷயங்களை தவிர்க்கிறார்கள்.பலனை இழக்கிறார்கள். இதில் பலர் வேண்டுமென்றே எங்களுக்கு பழக்கமில்லை என கூறவில்லை. இவர்கள் அறிந்து குடும்பத்திலே நடக்காதவற்றையே வழக்கமில்லை பழக்கமில்லை என்கிறார்கள். ஆனால் சிந்தித்து பார்த்தால்,

இடைப்பட்ட காலத்திலேயே பிள்ளைகளுக்கு கருத்து தெரியும் முன்னரே பெரியோர் இறந்து போன குடும்பங்கள், இடமாற்றம் பொருள்தான் பெரிதென்ற கருமித்தனம் வறுமை முக்கியமாக குடும்ப தலைவரின் நாத்திக வாதம் இப்படியான பலவற்றுள் ஏதாவதொரு காரணத்தால், மூதாதையர் கடைபிடித்துவந்த நல் வழக்கமானது (சில இடங்களில் ஒழுக்கமானது) விட்டுப்போயிருக்கும்.

ஆதலால் பெற்றோரை பெரியோரை குருவை கலந்தாலோசித்து அனுமதி பெற்று வரலக்ஷ்மி விரதம் போன்ற நிறைய நற்சடங்குகளை தொடங்கி கடைப்பிடித்து வரம்பெறலாம், வளம்பெறலாம்.

பூஜையை நாமே செய்து கொள்ளலாமா? புரோஹிதர் தான் செய்து வைக்கனுமா? சில முக்கிய சடங்குகளை குருமுகமாக செய்வதே உத்தமம். வசதி வாய்ப்பு இருப்பவர் புரோஹிதர் மூலமாக வரலக்ஷ்மி பூஜையை செய்துகொண்டு தான பொருட்கள் பக்ஷணங்கள் திருப்தியான தட்சணை இவற்றை அவருக்கு கொடுக்கவேண்டியது.

வசதி வாய்ப்பு குறைந்தவர் தாங்களாகவே பெரியோர் வழிகாட்டுதல்படி பூஜையை செய்து விரதம் அனுஷ்டிக்கலாம். அப்படி தாங்களாகவே செய்து கொண்டாலும், குருதட்சனை, என சக்திக்கேற்றதை எடுத்து வைத்து அன்றோ முடியும்போதோ ஒரு அந்தனருக்கு கொடுத்து விட வேண்டும்.

குரு இல்லா வித்தை பாழ் என்பதுபோல குரு தட்சணை ஆசியோடு செய்யும் காரியங்கள் முழுமையான பலனை தரும். மேலும் நம்முடைய பூஜையிலே குற்றம் குறை இருந்தாலும் அது அகலும். தோஷமேற்படாது.

வரலக்ஷ்மி விரதத்தின் மகத்துவங்கள் எப்படிப்பட்டவை? பலன்கள் என்னென்ன? லக்ஷ்மிதேவி தனலக்ஷ்மியாக செல்வ வளத்தை அருளக் கூடியவளாக சொல்லப்பட்டாலும் பொருளைத்தாண்டி, சந்தானலக்ஷ்மியாக புத்திரப்பேற்றையும், வித்யாலக்ஷ்மியாக கல்வி வித்தை கீர்த்தியையும், கஜலக்ஷ்மியாக கால்நடை செல்வங்களையும், தான்யலக்ஷ்மியாக விவசாய வளத்தையும், வீரலக்ஷ்மியாக பலத்தையும் தைரியத்தையும், விஜயலக்ஷ்மியாக எடுத்த காரியமனைத்திலும் வெற்றியையும், ஆதிலக்ஷ்மியாக அனைத்திற்கும் முதன்மயாய் மூலமுமாய் ஆதாரமாயுள்ளவள், மிக விசேஷமாய் வரங்களை அருளக்கூடிய வரலக்ஷ்மியாக நம் இல்லங்களுக்கு எழுந்தருளி சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடிய வரலக்ஷ்மி விரதம்/நோன்பு எனும் இப்பண்டிகை நமக்கு கிடைத்த வரம் வாய்ப்பு .

கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடுதல், மணமானவர்க்கு புத்திரப்பேறு கிடைத்தல் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைத்தல், அஷ்டலக்ஷ்மி அருளால் அஷ்ட ஐஸ்வர்யம் பெறுதல் பெருகுதல், சர்வ மங்களமும் உண்டாகுதல் இவ்வரலக்ஷ்மி விரத பலன்களாகும்.

வரலக்ஷ்மி விரத/நோன்பு பூஜைமுறை யாது?

வரலக்ஷ்மி நோன்பு ஒவ்வோராண்டும் எப்போது வரும்? ஒவ்வொரு தமிழ் வருட ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரக்கூடிய வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் வரும். இவ்வாண்டு ஆவணி 04, (20.08.2021) வெள்ளிக்கிழமை.

மேற்கண்ட நாளில் விரதம்/ நோன்பு அனுஷ்டிக்க முடியாதவர்கள் அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் வரலக்ஷ்மி நோன்பு எடுத்துக்கொள்ளலாம்.

வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்த இவ்வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிப்போம்.நம் அனைவருக்கும் லக்ஷ்மி கடாக்க்ஷம் கிடைக்கட்டும். வரலக்ஷ்மி நம் வீட்டுக்கு வந்தருளட்டும்.

வரலக்ஷ்மி பூஜை செய்து வைக்க அணுகவும்…

பீமராஜா ஐயர்

விக்னேஷ் ஜோதிட நிலையம்

Leave a Reply

Discover more from Beemaraja Iyer

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading